Showing posts with label SriLanka. Show all posts




 (வி.ரி. சகாதேவராஜா)


சாய்ந்தமருது வைத்தியசாலையின் பின்புறத்திலுள்ள தாமரைக் குளத்தினை சுத்தமாக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


இக்குளத்தை  அபிவிருத்தி செய்வது தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா உள்ளிட்ட குழுவினர் நேற்று  (19) வியாழக்கிழமை பார்வையிட்டனர் .

குளத்தின் ஆழமான பகுதிகளில் தேங்கி நிற்கும் குப்பைகளை சுத்தம் செய்து தொடர்ச்சியான மேற்பார்வையில் இருக்குமாறும் பணிப்புரை விடுத்திருந்தார்.


அவரின் பணிப்புரைக்கு அமைய  இன்று வெள்ளிக்கிழமை(20) தாமரை குளத்தினை துப்புரவு செய்யும் பணிகள் கல்முனை மாநகர சபை ஊழியர்களினால் திண்மக் கழிவுகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


நேற்றய இப்பார்வையிடலில் கல்முனை மாநகர சபை பொறியியளாலர் ஏ.எம்.ஜெளசி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினரின் உத்தியோகத்தர்கள்,வைத்தியர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

 


 வி.சுகிர்தகுமார்   



சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக வருமானம் குறைந்த மக்களுக்காக நிர்மாணித்துக்கொடுக்கப்படும் ரன் விமன மற்றும் ஐயவிமன வீடமைப்பு திட்டத்தின் கீழான வீடுகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இன்று (20)  பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
ஆலையடிவேம்பு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் என்.கிருபாகரன் தலைமையில் இடம்பெற்ற வீடுகள் கையளிக்கும் விழாவில் ஆலையடிவேம்;பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.
நிகழ்வில் முhகமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன் முகாமையாளர்களான கவிதா மற்றும் சுரேஸ்காந் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவிகள் என பலர் கலந்து கொண்டனர்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுகளில் இத்திட்டத்தின் ஊடாக கடந்த காலத்தில் பல வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று 4 வீடுகள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 \



வி.சுகிர்தகுமார்   



ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் பிரதேசம் நில அளவை செய்யப்படும் பணிகள் நில அளவை திணைக்களத்தின் உத்தியோகத்தர்களினால் ( 19) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இப்பணிகளை கண்காணிப்பதற்காக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் மற்றும் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் பிரதேச செயலக காணிப்பிரிவு உத்தியோகத்தர்கள் அங்கு சென்றிருந்தனர்.
குறித்த பிரதேசம் நீண்டகாலமாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக அத்துமீறிய நில அபகரிப்பு காணி தொடர்பான உரிமைத்தன்மை தொடர்பிலான பிணக்குகள் அரச தனியார் காணிகளை அடையாளப்படுத்தமுடியாமை போன்ற சிக்கல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
அத்தோடு இக்காணிகள் தொடர்பான நீதிமன்ற வழக்குகளும் கடந்த காலத்தில் இருந்து இடம்பெற்று வருகின்றன.
இதற்கான தீர்வை காணும் வகையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் மாவட்ட செயலாளரின் அனுமதியோடு நிலஅளவை செய்வதற்கான கோரிக்கையினை நில அளவை திணைக்களத்திடம் முன்வைத்திருந்தார்.
இதன் அடிப்படையில் இன்று வருகைதந்த நில அளவை திணைக்கள அதிகாரிகள் இன்று முதல் குறித்த பகுதிகளை நில அளவை செய்யும் பணகளை ஆரம்பித்துள்ளனர்




 பாறுக் ஷிஹான்


மாகாண சபையின் முழுமையான அதிகாரங்கள்  கிடைக்குமாயின்  அது இப்பிராந்தியத்துக்கான ஒரு வரப்பிரசாதமாக நாங்கள் பார்க்கின்றோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை முறைமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் மாகாண சபை அதிகாரங்கள் குறித்து   அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் அவரது அலுவலகத்தில்  இன்று விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது

 ஒன்பது மாகாணங்களில் மாகாண சபைகள் தற்போது இயங்கி வருகின்றன. இந்த மாகாண சபையானது மக்களுக்கான பணிகளை செய்வதற்கும் மக்களுக்கான  வேலைத்திட்டங்களை இலகுபடுத்துவதற்கும்  இந்தியா இலங்கை ஒப்பந்தத்தின் மூலமாக வட கிழக்கை பிரதிநிதித்துவப்  படுத்துகின்ற  தமிழ் முஸ்லிம் மக்களுக்காக உருவாக்கப்பட்டது.இந்த மாகாண சபை  முறைமையினால் கடந்த காலங்களில்   இரு மாகாணங்களை  தவிர ஏனைய   ஏழு மாகாணங்களை சேர்ந்த மக்கள் தான் பயனடைந்தார்கள்  என்பதை நான் கூற விரும்புகின்றேன்.


இதில் வட மாகாணம் கிழக்கு மாகாணம் என இரண்டு மாகாணங்களை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். இதில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் தமிழ் சிங்களவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு உரிய  அதிகாரம் வழங்கப்படாமையினால் தான்  இம்மாகாணத்தில் எமது சமூகம் முழுமையான நன்மையை பெற்று கொள்ள முடியாது உள்ளது.எனவே தான் இந்த மாகாண முறை என்பது  ஒழிக்க வேண்டும் என்று ஒரு நிலைப்பாடு தற்போது உள்ள  அரசாங்கத்தில்  உள்ளவர்கள் பரவலாக பேசப்படுகின்ற விடயமாக உள்ளது.அத்துடன்  இந்த சந்தர்ப்பத்தில் இன்னும் மூன்று வருடங்களுக்கு பின்னர் தான் இவ்விடயம் குறித்து பேச முடியும் என்ற மற்றும் ஒரு கருத்தும் இன்னொரு சாராரினால்  வைக்கப்பட்டிருக்கின்ற கருத்துக்களாகும்.

ஆனால் மக்களுக்கான பணிகளை துரிதப்படுத்துகின்ற அத்துடன் அபிவிருத்தி சார் பணிகள்  மக்களுக்காக சென்றடைய வேண்டும்   என்பதுடன் வெளிநாட்டு நிதிகளை பெற்றுக்கொள்வதற்காகவும்  மாகாண சபை முறை அறிமுகப்படுத்தப்பட்டது.கடந்த காலங்களில் நாங்கள் பல தடைகளை சந்தித்து இருக்கின்றோம். அதில் அதிகார ரீதியாகவும்    அபிவிருத்திகளுக்கு நிதி வழங்குவது ரீதியாகவும் இங்கு  முழுமையாக மறுக்கப்பட்டிருந்தது. காணி போலீஸ் அதிகாரங்கள் இவ்விரு மாகாணங்களிலும் மறுக்கப்பட்டிருந்தாலும் கூட  ஏனைய ஏழு மாகாணங்களிலும் காணி போலீஸ் அதிகாரங்கள்  மறுக்கப்பட்டு இருந்தாலும் அவர்களுடைய கைகளில் தான் அந்த அதிகாரங்கள் இருந்தது.இதனால் அம்மாகாண மக்கள் நன்மை அடைந்தார்கள்.அங்கு மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கமும் ஒன்றாக பயணித்து ஒரு சமூகத்திற்கு பணிகளை செய்கின்ற முறைமையை   நாங்கள் காண்கின்றோம் .

குறிப்பாக வடக்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் காணி போலீஸ் அதிகாரங்கள் சிறுபான்மை மக்களின் கைகளுக்கு சென்றால் போலீஸ் அதிகாரம் காணி அதிகாரம் இரண்டையும் தங்களுக்கு ஏற்றால் போல் பயன்படுத்தி விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக அச்சட்டங்களை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு மிக நீண்ட காலமாக தடைகளை அல்லது அதிகாரத்தை வழங்காமல் இருந்து வருகின்றது.

எனவே மாகாண சபைகளின் தேர்தல் நடத்தப்படுகின்ற சந்தர்ப்பத்தில் அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படுமாக இருந்தால் மக்கள் பிரயோசனம் அடைவார்கள்.
அரசியல்வாதிகளும்  மக்களுக்கு பணிகளை செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த அதிகாரங்களை கோருகின்றார்கள். அரசியல்வாதிகள் மக்களுக்கும் அரசுக்கும் இடையில் இருக்கின்ற ஒரு இடைத்தரகர்கள்  போன்று அங்கு இருக்கின்ற வேலைத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு வந்து சேர்க்கின்ற மக்கள்பிரதிநிதிகளாக இருக்கிறார்கள்.

எனவே தற்போது  உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகளவான அதிகாரங்களை வழங்கி இந்நாட்டின் பணிகளை துரிதமாக செய்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக தற்போதைய  தேசிய மக்கள் கட்சி ஆட்சியாளர்கள்  செயற்பாட்டாளர்கள் பேசுவதை நாங்கள் காண்கின்றோம்.ஆகவே  உள்ளூராட்சி மன்ற தேர்தல் முதலில் நடத்துவதற்கான வாய்ப்பு இந்த அரசாங்கத்தில்  இருக்கின்றது என்பதை அவர்களது செயற்பாட்டில் இருந்து தெரிந்து கொள்ள மடிகின்றது. அந்த வகையில் எதிர்கால தேர்தலின் ஊடாக   மாகாண சபையின் முழுமையான அதிகாரம் கிடைக்கப்பெறும் ஆக இருந்தால் அது இப்பிராந்தியத்துக்கான ஒரு வரப்பிரசாதமாக நாங்கள் பார்க்கின்றோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

 


இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களப்  பணிப்பாளர் 

 ய. அநிருத்தனின் வழிகாட்டலின் கீழ் காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை  அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  சிவ.ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்றது. 

இக்கருத்தரங்கிற்கு அம்பாறை மாவட்டத்தில் இயங்கும் 103 அறநெறிப்பாடசாலைகளின் பொறுப்பாசிரியர்கள் உதவி ஆசிரியர்கள்  கலந்து கொண்டனர் .

 கருத்தரங்கினை அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர்  கு.ஜெயராஜி  நடாத்தினார்

இக்கருத்தரங்கில் ஆராயப்பட்ட விடயங்களான 

பாடசாலை பதிவேடு
ஆசிரியர் குறிப்பேடு
மாணவர்களின் குறிப்பேடு
அறநெறிப்பாடசாலை வழிகாட்டல் நூல்
பண்ணிசை கருவிகள் வழங்கப்பட்ட விடயங்கள்
குருபூசை நிகழ்வுகள் 
பாடத்திட்டம் தொடர்பான தெளிவூட்டல்
ஆசிரியர் சீருடை விளக்கம்
மாணவர் சீருடை விளக்கம்
மாணவர்களின் வருகையை  அதிகரிக்க செய்தல்
தளபாடகொடுப்பனவு
யோகாசனம்,பண்ணிசை கொடுப்பனவுகள்
ஆக்கத்திறன் போட்டிகள் 
பெற்றோருக்கான கருத்தரங்கு, கூட்டுப்பிரார்த்தனை,
இறுதியாண்டு பரீட்சைக்கு மாணவர்களை  விண்ணப்பித்தல்  தொடர்பான விளக்கம்,
தர்மாசிரியர்பரீட்சை விளக்கம்,
சுவாமி விபுலாநந்த மகாநாடு விளக்கம்,
2025ம் ஆண்டிக்கான வேலைத்திட்டம்  
மற்றும் அறநெறிப்பாடசாலைகளுக்கான 2025ம் ஆண்டிற்கான பாடசாலை பதிவேடு  வழங்கி வைக்கப்பட்டது.

 அம்பாறை மாவட்ட சகல பிரதேச இந்து கலாசார உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.



 ஜனாதிபதி அன்பளிப்பு எனும் பெயரில் பரவி வரும் போலிச் செய்தி ஒன்று குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் விளக்கமொன்றை அளித்துள்ளது.


இது குறித்த அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (16) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,


"ஜனாதிபதி அன்பளிப்பு" எனும் பெயரிலான தலைப்பில் அரசாங்கத்தின் உதவி வேலைத்திட்டம் தொடர்பில் போலி செய்தியொன்று தற்போது சமூக ஊடகங்கள் வாயிலாக பரவிவருவது அவதானிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு எனக் குறிப்பிட்டு குறித்த செய்தியுடன் போலி இணைப்பு (Link) ஒன்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


குறித்த செய்தி முற்றிலும் பொய்யென்பதுடன் அரசாங்கம் இவ்வாறான வேலைத்திட்டம் தொடர்பில் தீர்மானம் எடுத்திருந்தால், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் கலந்துரையாடலில் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு குறித்த முடிவுகளை அரசாங்கம் தெரிவிப்பது செயன்முறையாக உள்ளது.


அவ்வாறான ஏற்றுக்கொள்ளக்கூடிய முறைமையின் ஊடாக அரசாங்கத்தினால் அறிவித்தல் செய்யப்படாத அரச கொள்கை மற்றும் முடிவுகள் தொடர்பில் இவ்வாறான பொய்யான செய்திகளை பிரசாரம் செய்வதிலிருந்து தவிர்த்து கொள்ளுமாறு சமூக செயற்பாட்டாளர்களிடம் தயவாய் வேண்டிக்கொள்வதுடன், அடிப்படையின்றி பொய்யான செய்திகளை ஏற்றுக்கொள்தல் மற்றும் பரிமாறிக்கொள்வதிலிருந்து தவிர்த்துக் கொள்ளுமாறு மக்களுக்கும் அறியத்தருகின்றோம்.


 


நூருல் ஹுதா உமர்


எலிக்காய்ச்சல் சம்பந்தமாக விவசாயிகளுக்கும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் களப்பணி நிகழ்ச்சி காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வசீர் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.

இதன்போது மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கைகள் இடம் பெற்று வருவருகிறது. அதன் ஒரு அங்கமாக எலிக்காய்ச்சலுக்கு மனிதர்கள் ஏன் பயப்பட வேண்டும். வட மாகாணத்தின் பல பகுதிகளிலும்  அதிகரித்த எண்ணிக்கையில் சடுதியான மர்மக் காய்ச்சல் ஒன்று பரவி வருவதாக செய்திகள் அண்மைய நாட்களில் வெளிவந்திருந்தன. இந்த காய்ச்சல் leptospira எனப்படும் ஒரு வகை பக்டீரியா மூலம் பரவுவதால் லெப்டோஸ்பிரோசிஸ் என்று இந்த நோய் அழைக்கப்படுகிறது. கேள்வி அடையாளம் போன்ற வடிவம் கொண்டதன் காரணமாக இவை Spirochaeta குரூப் என்றும் வகைப்படுத்தப்படுகிறது.

Leptospirosis என்பது சிறு விலங்குகள் அதிலும் குறிப்பாக எலியின் சிறுநீர் நீரின் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோயாகும். ஒரு காலத்தில் இந்த நோய் cane-cutter's கரும்பு வெட்டிகளின் நோய் என்று ஐரோப்பாவிலும், "rice field jaundice , அரிசி வயல் காமாலை என்று சீனாவிலும் " "Akiyami இலையுதிர் காய்ச்சல்" என்று ஜப்பானிலும் அறியப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் பெரும் சம்பவங்கள் செய்த இந்த நோய் இப்போது Neglected tropical zoonotic infection of public health importance எனும் கட்டகரிக்குள் போய்ச் சேர்ந்திருக்கிறது. இருந்தாலும் இப்போது  உலகளாவிய பொது சுகாதார முக்கியத்துவம் வாய்ந்த மீண்டும் வளர்ந்து வரும் re-emerging நோயாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

விரைவான, திட்டமிடப்படாத நகரமயமாக்கல் மற்றும் மோசமான சுகாதாரம் , அலட்சியம் ஆகியவற்றின் காரணமாக, வளரும் நாடுகளில் கடுமையான காய்ச்சல் ஏற்படுத்தும் நோய்க்கான முக்கிய காரணமாக லெப்டோஸ்பைரோசிஸ் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. வீட்டு மற்றும் காட்டு விலங்குகள் லெப்டோஸ்பைர்களை எடுத்துச் செல்வதால், அவ்வாறான இடங்களில் வசிக்கும் ஒவ்வொரு நபருக்கும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. சுகாதார ஊழியர்கள், கால்நடை பராமரிப்பாளர்கள், விவசாயிகள் மற்றும் பண்ணை தொழிலாளர்கள், மீனவர்கள், கொறித்துண்ணிகளினால்( Rodents ) கடிபடுபவர்கள், நீரில் விளையாடுபவர்கள்,  வெள்ளம் பாதித்த பகுதிகளில் தன்னார்வ மீட்புப் பணிகளில் ஈடுபடுபவர்கள், துப்புரவுப் பணியாளர்கள், கழிவுநீர் தொழிலாளர்கள், இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்பட கூடியவர்களாக இருக்கின்றனர்.

லெப்டோஸ்பைரோசிஸ் பக்டீரியாவினால் பாதிக்கப்பட்ட விலங்குகளின்  அதாவது எலிகள், நாய்கள், கால்நடைகளான ஆடு, மாடு, பன்றிகள் மற்றும் வன விலங்குகளின் சிறுநீர் வெள்ள நீர், ஆறு, குளம் போன்ற பெரும் நன்னீர் நிலைகளில் கலப்பதால் இந்த நோய்த்தொற்று ஏற்படுகிறது. இப்படியான அசுத்த நீர் காயங்களில் படுவதால், அந்த நீரில் வாய் கொப்பளிப்பதால் அல்லது குடிப்பதால் மனிதர்களை இந்த நோய் தொற்றிக் கொள்கிறது.

எனவே வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களின் பின்னர், குளம் குட்டைகளில் குளிப்பதை தவிர்த்தல், வெள்ளம் பார்க்க செல்வதை தவிர்த்தல், கொதித்து ஆறிய சுத்தமான நீரை பருகுதல், விவசாய வேலைகளுக்கு பூட்ஸ் சப்பாத்து அணிதல், காலில் உள்ள காயங்களை மூடி பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற் கொள்வதன் மூலமாக இந்த நோய் தொற்றுவதில் இருந்து பாதுகாப்பு பெற முடியும்.

அதிக காய்ச்சல் தலைவலி உடல் வலி கண் மஞ்சளாதல்  போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று வைத்திய ஆலோசனை பெற்றுக் கொள்வது மிகவும் உசிதமானது. அது போல உங்கள் பிரதேசங்களில் எலி காய்ச்சல் பரவினால் இந்த நோய் உங்களுக்கு ஏற்பாடாமல் இருக்க தடுப்பு மருந்துகளை Prophylaxis பெற்றுக் கொள்ள முடியும்.

 எலிக்காய்ச்சல் குறித்து தெரிந்து கொள்ள , இலவசமாக தடுப்பு மருந்துகளை பெற்று கொள்ள உங்கள் பிரதேசத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளை அல்லது வைத்தியசாலைகளை நாட முடியும் என காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அறிவித்தல் வெளியிட்டுள்ளது

 



பாராளுமன்ற தேர்தலுக்கு பின் முதன்முறையாக வவுனியாவில் தற்போது நடைபெறும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் குழப்பவாதிகளால் அமளி, துமளியான நிலை ஏற்பட்டுள்ளது.

 


அசோக ரங்வாலவின் இராஜிநாமாவால் வெற்றிடமான சபாநாயகர் பதவிக்கு புதிய சபாநாயகர் நியமனம் எதிர்வரும் 17ஆம் திகதி மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் 17ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில், அன்றைய தினம் புதிய சபாநாயகர் நியமனம் தொடர்பான வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.


இதேவேளை, பாராளுமன்ற வரலாற்றில் சபாநாயகர் ஒருவர் பதவி விலகுவது இதுவே முதல் தடவை என பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.


இது தொடர்பான இராஜிநாமா அறிவிப்பை சபாநாயகரால் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடமோ அல்லது ஜனாதிபதியிடமோ வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.


இராஜிநாமா கடிதம் ஜனாதிபதிக்கு கிடைத்த பின்னர் சபாநாயகரின் இராஜிநாமா கடிதம் தொடர்பில் ஜனாதிபதி தீர்மானம் எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


சபாநாயகரின் இராஜிநாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டால், புதிய சபாநாயகரை மீண்டும் பாராளுமன்றம் தெரிவு செய்ய வேண்டும் எனவும், பொதுச் சட்டத்தின் கீழ் வாக்களித்து அல்லது பிரேரணை நியமனம் மூலம் புதிய நியமனத்தை தெரிவு செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 



வி.சுகிர்தகுமார்          


 பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினரால் துப்பரவு பணிகள் இன்று(13) சிரமதானம் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
வைத்தியசாலையின்; வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் சக்கீல் தலைமையில் வைத்தியர் எம்.தனோசன் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இச்சிரமதானப்பணிகளில பிரதேச சமூக நலன் அமைப்பின் உறுப்பினர்கள் வைத்தியசாலை ஊழியர்கள் நலன்விரும்பிகள் இணைந்து கொண்டனர்.
அன்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக அசுத்தம் அடைந்திருந்த வைத்தியசாலையில் வெளிப்புறச்சூழல் சுத்தம் செய்யப்பட்டதுடன் மரக்கிளைகளும் அகற்றப்பட்டன.
அகற்றப்பட்ட குப்பைகள் மரக்கிளைகள் என்பன உழவு தனியார்களின் உழவு இயந்திரங்களின் உதவியோடு அங்கிருந்து அகற்றப்பட்டன. இப்பணியில் ஆலையடிவேம்பு பிரதேச சபை உழவு இயந்திரங்களி;ன் உதவியுடன் பெறப்பட்டன.
வைத்தியசாலையின் வளாகம் துப்பரவு செய்யப்படவேண்டியதன் அவசியத்தை உணர்ந்த ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் இப்பணியை சிறப்பாக முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

 

Ramachandran Sanath

அடுத்த சபாநாயகர் யார் தெரியுமா?
திவிநெகும சட்டமூலம் தொடர்பில் எழுந்த சர்ச்சையால், மஹிந்த ஆட்சியின்போது பிரதம நீதியரசராக இருந்த ஷிராணி பண்டார நாயக்க குற்றப் பிரேரணைமூலம் பதவி நீக்கப்பட்டார். இது விடயத்தில் அப்போதைய சபாநாயகராக செயற்பட்ட சமல் ராஜபக்ச முன்னின்று செயற்பட்டார். ஆளுங்கட்சிக்கு சார்பாகவே அவரது நகர்வுகள் அமைந்திருந்தன.
கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின்போது சபாநாயகராக பதவி வகித்த மஹிந்த யாப்பா அபேவர்தன, தனது அலுவலகத்தை குடும்ப உறுப்பினர்கள்மூலம் நிரப்பினார்.
ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவே சபையில் செயற்பட்டார். நிறைவேற்று அதிகாரத்துக்கு எப்போதும் கட்டுப்பட்டவராகவே இருந்தார்.
ரணில் ஜனாதிபதியான பின்னர்கூட அரசமைப்பு பேரவையை நிறைவேற்று துறையின் ஒரு கிளையாக மாற்றும் வகையில் அவரது செயற்பாடுகள் அமைந்திருந்தன. நம்பிக்கையில்லாப் பிரேரணையைக்கூட அவர் எதிர்கொண்டிருந்தார்.
ஆனால் சபாநாயகர் பதவிக்கு அசோக ரன்வல நியமிக்கப்பட்டு, ஒரு மாதம்கூட செல்லவில்லை. அவரின் கல்வித் தகைமை தொடர்பில் எழுந்த சர்ச்சையால் அவர் தாமாகவே முன்வந்து பதவி விலகியுள்ளார்.
சபாநாயகர் பதவிக்கு கலாநிதி பட்டம் அவசியமில்லை, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இருந்தாலே போதும். அத்துடன், அவர் கல்வித்தகைமை அற்றவர் என்பது இன்னமும் உறுதியாகவில்லை. எனினும், உரிய சான்றிதல்களை முன்வைக்க முடியாத காரணத்தால் அவர் பதவி துறந்துள்ளார்.
" கல்வித் தகுதியை உறுதிப்படுத்த தேவையான சில ஆவணங்கள் என்னிடம் இல்லாததாலும், அவற்றை உரிய நிறுவனங்களிடம் பெற வேண்டியதாலும், தற்போது அந்த ஆவணங்களை விரைவாகச் சமர்ப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனக்கு முனைவர் பட்டம் வழங்கிய ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆராய்ச்சி நிறுவனத்தினால் குறித்த கல்வி ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும், விரைவில் அவற்றை சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளேன்." - எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
தான் தவறான தகவல்களை வழங்கியுள்ளார் என்பது உறுதியாகாதபோதிலும் சபாநாயகர் பதவியின் முக்கியத்துவம் கருதி அசோக ரன்வல இராஜினாமா செய்துள்ளமை சிறந்த முன்னுதாரணமாகும்.
அவருக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம், ஊழல், மோசடி குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை.
சிலவேளை அவர் போலியான தகவல்களை வழங்கி இருந்தால் எம்.பி. பதவியையும் இராஜினாமா செய்வதே பொருத்தமான நடவடிக்கையாக அமையும்.
மேற்குலக நாடுகளில் விபத்து ஏற்பட்டால்கூட போக்குவரத்து அமைச்சர்கள் பதவி விலகும் சூழ்நிலையில், இலங்கையில் பதவிகளில் இருந்து விரட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் வரவேண்டும். அவ்வாறு இல்லாமல் பதவி விலகி புதிய அரசியல் கலாசாரத்துக்கு வழிவகுத்த சபாநாயகருக்கு பாராட்டுகள்.
திடீர் நெஞ்சுவலி வந்து அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்படவில்லை.
இதோ பட்டம் பறந்துவருகின்றது, விரைவில் அறிவிப்பேன் என காலம் கடத்தவும் இல்லை.
இது எனக்கு தெரியாது, நாடாளுமன்ற அதிகாரிகள் தன்னிச்சையாக பதிவிட்டுள்ளனர் என சமாளிப்பு பாணியை பின்பற்றவும் இல்லை.
கட்சி அறிவித்தால் பதவி விலகுவேன் என சபாநாயகர் பதவியை கட்சிக்குரியதாக்கவும் இல்லை.
அந்தவகையில் சபாநாயகரின் முடிவை மீண்டும் ஒருமுறை பாராட்டுகின்றேன்.
அடுத்த சபாநாயகர்
ஜே.வி.பியின் செயலாளர் நாயகம் ரில்வின் சில்வா இன்னும் சில மாதங்களில் ஓய்வுபெற்ற பின்னர் நிஹால் கலப்பதியை அப்பதவிக்கு கொண்டுவருவதே ஜே.வி.பியின் திட்டமாக இருந்திருக்கக்கூடும். அதனால்தான் அவருக்கு அமைச்சு பதவிகூட வழங்கப்படவில்லை.
அவ்வாறு அல்லாவிட்டால் தென்மாகாண முதல்வர் வேட்பாளராக அவரை களமிறக்கும் உத்தேசமும் இருந்தது. தற்போது நிஹால் கலப்பதி அடுத்த சபாநாயகராக நியமிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு அல்லாவிட்டால் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படலாம்.

 



( நமது நிருபர்)


அம்பாறை மாவட்டம் காரைதீவைச்சேர்ந்த நாடறிந்த சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான தேசமான்ய விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா கிழக்கு மாகாண பல்துறை வித்தகர் விருது  நேற்று  ( 2024.12.11) புதன்கிழமை வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா நேற்று  (11.12.2024) புதன்கிழமை திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றபோதே இக் கௌரவ விருது வழங்கப்பட்டது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர இவ் உயரிய விருதை வழங்கி வைத்தார்.

அவருக்கான அலங்காரமாலையை கிழக்கு மாகாண பிரதம செயலாளர் R.M.P.S ரத்நாயக்க அணிவிக்க  கிழக்கு மாகாண கல்வி அமைச்சின்   செயலாளர் H.E.M.W.G திசாநாயக்க பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

நிகழ்வில் அமைச்சுக்களின் செயலாளர்களான மதன்நாயக்க  கோபாலரெத்தினம் நசீர் குணநாதன்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கிழக்கு மாகாணத்தில் 2022,2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் தெரிவு செய்யப்பட்ட பல துறைகள் சார்ந்தவர்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள் .

கிழக்கு மாகாணத்தின் உயரிய விருதான "வித்தகர்" விருதினை பெற்றார் 
 காரைதீவைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளரும் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான தேசமான்ய   விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா அவர்கள்.

வித்தகர் வி.ரி.சகாதேவராஜா

36 வருடங்கள் கல்விப் பணியாற்றிய திரு சகாதேவராஜா,சம்மாந்துறை வலயத்தில் 26 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றி வெள்ளி விழாக் கண்ட ஒரே ஒரு உதவிக் கல்விப் பணிப்பாளரும், சம்மாந்துறை வலய கல்வி சார் உத்தியோகத்தர்கள் நலன்புரி ஒன்றியத்தின்  தலைவருமாவார்.

இவர் 
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் மிகவும் நெருங்கிய பற்றாளனான இவர் பத்து வருடங்கள் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் ஆசிரியராகவும் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையில் 26 வருடங்கள் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் சேவையாற்றியுள்ளார் .
 
பேராதனை பல்கலைக்கழக கலைத்துறை பட்டதாரியான இவர் மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையில்  பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராவார். பட்டப்பின் கல்வி டிப்ளோமோ மற்றும் கல்வி முதுமாணிப் பட்டம் பெற்றவராவார்.

இலங்கை அதிபர் சேவையின் முதலாந்தர அதிபராவார்.

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத் தலைவராக அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத் தலைவராக காரைதீவு விபுலானந்தா ஞாபகார்த்த பணிமன்றத் தலைவராக இந்துசமய விருத்திச்சங்க தலைவராக காரைதீவு விளையாட்டு கழகத் தலைவராக கம்பன் கலைக்கழகத் தலைவராக கிராம அபிவிருத்தி சங்க தலைவராக இவ்வாறு பல அமைப்புகளில் தலைவராக முன்னணி சமூக செயற்பாட்டாளரான அவர் ஒரு தலைசிறந்த ஊடகவியலாளரும் கூட. 

சம காலத்தில் மேற்குறிப்பிட்ட அமைப்புகளின் ஆலோசகராக மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய பரிபாலன சபையின் ஆலோசகராக இவ்வாறு பல நடிபங்குகளினூடாக சமூக சமய சேவையாற்றி வருகிறார்.

காரைதீவின் பழம் பெரும் ஆசிரியர் வே.தம்பிராஜா தங்கநாயகம் தம்பதிகளின் கனிஸ்ட புதல்வராவார்.

 காரைதீவில் 1964.09.28 அன்று பிறந்தார் .

ஆரம்பக் கல்வியை ராமகிருஷ்ணசங்க ஆண்கள் பாடசாலையிலும் பின்னர் விபுலானந்த மத்திய  கல்லூரியிலும் மற்றும் மட்டக்களப்பு  சிவானந்த வித்தியாலயத்திலும் கல்வி பயின்றார்.

"ஊழியில் ஆழி" எனும் வரலாற்று நூலை 2005 வெளியிட்டார். மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் முத்தமிழ் மன்ற தலைவராக பணியாற்றிய வேளை அங்கு "கலைச்செல்வி" நூலுக்கு நூலாசிரியராகவும் சுவாமி விபுலானந்த பணிமன்றத்தின் அடிகளார் நினைவாலய மலருக்கும் சுவாமி நடராஜானந்தா ஜீயின் நூற்றாண்டு விழாவில் சேவையின் சிகரம் எனும் நூலையும் ஊரா வெளியிட்டிருக்கின்றார். 

இலங்கையின் அதிசிறந்த ஊடக விருதான மக்கள் சேவை ஊடக விருது 2007 வீரகேசரி கட்டுரை வெளியீட்டுக்காக பெற்றார் .
இத்தாலி பாங்க்கொக் மலேசியா சிங்கப்பூர் பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு சென்று சிறப்பு அனுபவத்தை பெற்றிருந்தார்.

தேசமான்ய வித்தகர் திகாமடுல்ல அபிமானி விபுலமாமணி  வாழ்நாள் சாதனையாளர் வித்யசாஹித்யன் வித்யகலாசிறி கலைச்செம்மல் போன்ற இன்னோரன்ன விருதுகளைப் பெற்றவர்.
அவர் மேலும் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் பிரசங்கங்களில் ஈடுபட்டு வருகிறார்.




 பாறுக் ஷிஹான் 


அண்மையில் காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவத்தில்  உயிரிழந்த சம்மாந்துறையைச் சேர்ந்த ஆறு மதரஸா மாணவர்கள் மற்றும் பொதுமகன் ஒருவருமாக  எழு குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் ரூபாய் 250000 நஸ்டஈடாக  வழங்கி வைக்கும் நிகழ்வும், அவர்களுக்காக துஆ பிராத்தனை செய்யும் நிகழ்வும்,   சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும்,பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான ஏ ஆதம்பாவா கலந்து கொண்டு கசோலைகளை வழங்கி வைத்தார்.

 மேலும் இந் நிகழ்வில் கெளரவ அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந் நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட செயலக பிரதம கணக்காளர் ஏ.எல் மஹ்ரூப்,சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம்(LLB),கணக்காளர் எஸ்.எல் சர்தார் மிர்ஸா,சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபைத் தலைவரும்,முன்னாள் அரசாஙக அதிபருமான ஐ.எம் ஹனீபா,நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம் ஜெமீல்,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம் ஹுஸைன் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா அவர்களின் பிரதிநிதியான எம்.இம்தியாஸ், சம்மாந்துறை உலமா சபைத் தலைவர்  மெளலவி எம்.எல்.மரணித்தவர்களுசம்மாந்துறை பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எம் நெளபர்,அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் எம்.எஸ்.எம் அஸாருத்தீன்  உட்பட கிராம சேவகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அத்துடன் இவ் நஸ்டஈடுத் தொகையினை ஒரு மில்லியனாக அதிகரித்து வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் இவ் நிகழ்வின் போது தெரிவித்திருந்தார்.

இந் நிகழ்வில் மெளலவி அல்ஹாபிழ் ஏ.பெளஸ்தீன்(தப்லீகி) அவர்களினால் மரணித்தவர்களுக்காக துஆப் பிரத்தனை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


 மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை 2021ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


இதற்காக அவருக்கு 75,000 ரூபா இழப்பீடு வழங்க வேண்டுமென பிரதிவாதிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


அத்துடன், முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்டோர் இதற்குப் பொறுப்பானவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.



0 reacts

 



பாறுக் ஷிஹான்


சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் அம்பாறை   மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம்   காலை 10.30 மணியளவில் திருக்கோவில் பகுதியில்  இடம்பெற்றது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணி  தலைமையில் இடம்பெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் புகைப்படத்தை ஏந்தியவாறு   அமைதியான முறையில் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்கள் சர்வதேச மனித உரிமைகள் தினம் எதற்காக நினைவு கூறுகிறார்கள் என்று தெரியவில்லை.மனித நேயமே இல்லாத இந்த நாட்டிலே மனித உரிமைகள் தினத்தை நினைவு கூறுவதில் எவ்வித பிரயோசனமும் இல்லை என தெரிவித்தனர்.

கடந்த 15 வருட காலங்களாக காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளை மீட்க நாங்கள் வீதியில் நிற்கின்றோம். உலக நாடுகள் என்றாலும் சரிஇ சர்வதேச நாடுகள் என்றாலும் சரி எமது நாடாக இருந்தாலும் சரி எங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.எவ்வித பிரயோசனமும் இல்லாமல் ஒவ்வொரு அம்மாக்களும் மன வேதனையுடன் உள்ளனர். இன்று நூற்றுக்கணக்கான அம்மாக்கள் உயிரிழந்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக் கொண்டிக்கின்றவர்கள் தற்போது குறைவானவர்களாகவே இருக்கின்றோம்.இருக்கிறவர்களும் இறப்பதற்கு முன்னர் எங்களுடைய காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் உறவுகளுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.மனித உரிமைகள் அமைப்புக்கள் பல இருந்தும் என்ன பலன்? என்ற கேள்வியை எழுப்பினர். எத்தனை மனித உரிமைகள் அமைப்புக்கள் இருந்தாலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அவர்களின் செயல்பாடுகள் இல்லை.

எங்களுக்காக கதைப்பதற்கும் ஒருவரும் இல்லை என தெரிவித்தனர்.இந்த நிலையிலே சர்வதேச மனித உரிமைகள் தினத்தை கருப்பு தினமாக அனுஸ்ரிக்கின்றோம் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்,சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

 



நூருல் ஹுதா உமர்

கடந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிட்ட தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள், இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை பிராந்திய  அலுவலகத்திற்கு விஜயம் செய்து  நடந்து முடிந்த பொதுத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அடங்கிய மனுவொன்றை உத்தியோகபூர்வமாக  கையளித்தார்.

திகாமடுல்ல மாவட்டத்தின் தேர்தல் முடிவுகளை மீள எண்ணப்பட வேண்டும் என்பதையும் கடந்த தேர்தல் காலத்தில் தேசிய காங்கிரஸ் தலைவராக தன்னை குறிவைத்து  பின்னப்பட்ட பல நகர்வுகளையும் இடையூறுகளையும் உள்ளடக்கிய பல்வேறு விடயங்கள்  இம் மனுவில் விஷேடமாக உள்ளடக்கப்பட்டிருந்தது.

மனுவை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் வாக்காளர்களின் உரிமைகள் திட்டமிடப்பட்ட வகையில் மறுக்கப்பட்டதுடன் வாக்குகள் எண்ணப்பட்டதிலும் பாரதூரமான மோசடிகள் இடம்பெற்றுள்ளன என்றார்.

மேலும், கச்சேரியில் எமக்கு எதிரான சதி வலை பின்னல் தொடர்ந்து. ஆரம்பத்தில் காலையில் ஒரு விதமாகவும், பின்னர் வேறு ஒரு விதமாகவும் முடிவுகள் அறிவிக்கப்படலாயின. நாம் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட முடிவுகளை ஏற்று கொள்ளவில்லை. ஏற்பதாக கையொப்பம் இட்டு கொடுக்கவில்லை. வெளிப்படையாகவே ஆட்சேபித்தோம். ஆனால் புதிய ஜனநாயக முன்னணி 88 வாக்குகளால் தோற்றதாக அறிவிக்கப்பட்டது. நாம் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என்று சட்டப்படி முறையாக கச்சேரியில் கோரினோம். ஆனால் வாக்குகளை மீண்டும் எண்ணப்படவே இல்லை. இதை ஆட்சேபித்து கொழும்பில் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுத்துமூலம் பல தகவல்களையும் திரட்டியுள்ளோம்.

அவசியம் ஏற்படுகின்ற பட்சத்தில் உயர்நிலை நீதிமன்றங்களில் வழக்கு நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொள்வோம். நீதிக்கான எமது போராட்டம் தொடரும். நாம் கடந்த காலங்களில் அரசியலில் பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வெற்றி கண்டிருக்கிறோம். என்றார். இந்த மனு கையளிக்கும் நிகழ்வில் சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸமும் கலந்து கொண்டதுடன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.