ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (15) இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் பேரில் இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி இன்று (15) முதல் 17ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருந்து பல்வேறு உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இவ் விஜயத்தின் போது இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பல்வேறுபட்ட கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
அத்துடன் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலீட்டு மற்றும் வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்தும் நோக்குடன் டில்லியில் நடைபெறும் வர்த்தக நிகழ்வொன்றிலும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொள்ளவுள்ளார்.
இதேவேளை, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் வெளிவிவகார மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்து கொள்ள உள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் உடைக்கப்பட்ட பாரிய நீர்க்குழாய் இருக்கும் இடத்திற்கு இன்று (29) வெள்ளிக்கிழமை பகல் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறியியலாளர்கள் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் அங்கு போய்ச் சேர்ந்தார்கள்.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய பொறியியல் பிரிவுப் பொறியியலாளர் தாமோதரம் வினாயகமூர்த்தி , இயக்கமும் பராமரிப்பும் பிரிவிற்கான பொறியியலாளர் பாக்கியராஜா மயூரதன் மற்றும்
காரைதீவு பிரதேச காரியாலய பொறுப்பதிகாரி பொறியியலாளர் விஜயரெத்தினம் விஜயசாந்தன் ஆகியோர் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து நிலைமையை ஆராய்ந்தனர். இன்று காலநிலை ஓரளவு சீராக இருந்ததால் அங்கு செல்ல முடிந்தது.
உடனடியாக திருத்த வேலைகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளையிட்டு அவர்கள் ஆராய்ந்தனர்.
முதற்கட்டமாக திருத்த வேலைக்கான உபகரணங்கள் மற்றும் தொழிலாளர்களை கொண்டு வருவதற்கான வாகனப் பாதை தற்போது செப்பனிடப்பட்டுவருகிறது.
பெரும்பாலும் நாளை (30) சனிக்கிழமை மாலை திருத்த வேலைகள் பூர்த்தியடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அம்பாறையில் இருந்து நிந்தவூர் பிரதான நீர்த்தாங்கிக்கு நீரை எடுத்து வருகின்ற பாரிய குழாய் உடைந்திருப்பதன் காரணமாக கடந்த மூன்று நாட்களாக கரையோரத்தில் குறிப்பாக நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களுக்கான குழாய்நீர் விநியோகம் முற்றாக தடைப்பட்டிருந்தது. மக்கள் பலத்த அசௌகரியத்திற்குள்ளாகியுள்ளனர்.
450 மில்லி மீட்டர் விட்டம் உள்ள சுமார் 20 மீற்றர் நீளமான இப் பாரிய குழாய் பெரு வெள்ளத்தில் அள்ளுண்டதனால் இத்திடீர்த் தடை ஏற்பட்டது தெரிந்ததே.
சம்மாந்துறை பிரதேசத்தின்
நயினாகாட்டை அடுத்துள்ள சுரிப்போடு முந்தல் என்ற பிரதேசத்தில் உள்ள பாரிய குழாயில் இவ் வெடிப்பு ஏற்பட்டிருந்தது.
இன்று மழையில்லாத காரணத்தினால் அங்கு இத் திருத்த வேலைகள் இடம்பெற ஆரம்பித்தன.
'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம்.
தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது.
வியாழக்கிழமை என்பது மங்கலகாரகனான குரு பகவானுக்குரிய நாள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அது தவிர இந்த ஆண்டு தீபாவளிக்கு வேறு சில சிறப்புக்களும் உள்ளன. வழக்கமாக பெரும்பாலான ஆண்டுகள் தீபாவளி திருநாள், அமாவாசையுடன் தான் இணைந்து வரும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி மாலை 04.29 மணிக்கு தான் அமாவாசை திதி துவங்குகிறது.
மிக அரிதாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கான சுபமுகூர்த்த நாளில் அமைந்துள்ளது. அதிலும் அன்று நாள் முழுவதும் சித்திரை நட்சத்திரம் உள்ளது மற்றொரு தனிச்சிறப்பு.
சித்திரை நட்சத்திரம் என்பது சக்கரத்தாழ்வார், சித்ரகுப்தர், விஸ்வகர்மா ஆகியோர் அவதரித்த நட்சத்திரமாக சொல்லப்படுகிறது. இவர்கள் மூவருமே வாழ்க்கையில் வளர்ச்சி, கலைகளில் தேர்ச்சி, பலவிதமான செல்வ நலன்களையும் வழங்கக் கூடியவர்கள். ஞானத்தை அருளும் குரு பகவானுக்குரிய வியாழக்கிழமையில், சித்திரை நட்சத்திரமும் இணைந்த நாளில் இந்த ஆண்டு தீபாவளி வருகிறது. அதிலும் நல்ல விஷயங்களை துவங்குவதற்கு ஏற்ற மங்கலகரமான சுபமுகூர்த்த நாளுடன் வருகிறது.
அதனால் தீபாவளி அன்று மங்கல பொருட்கள் வாங்கலாமா? எப்போது இருந்து அமாவாசை விரதம் கடைபிடிக்க வேண்டும் என்ற குழப்பம் இந்த ஆண்டு கிடையாது. இந்த ஆண்டு தீபாவளி திருநாளான அக்டோபர் 31 ம் தேதியன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளதால் தாராளமாக புதிய விஷயங்களை துவங்கலாம்.
அறியாமை என்னும் இருள் நீக்கி வெற்றியையும் ஒளிமயமான சிந்தனையையும் இந்த தீபத் திருநாள் பெற்றுத் தர வேண்டும்
நரகாசுரனை வதைத்த தினத்தை வீடுகளில் தீபஒளி ஏற்றி மனஇருள் நீக்கி தீபாவளி பண்டிகையாக கொண்டாடும் இத்தருணத்தில் தமிழர்களது பாரம்பரியமான பண்பாடுகளால் நம் திறமைகளை வளர்த்து நாட்டை ஒளி நிறைந்ததாக மாற்ற வேண்டும் என்றும் நல்ல மழை பொழிந்து வேளாண்மை செழிப்பாக வேண்டும்.
இவ் வருடத்தின் (2024) உலக ஆசிரியர் தின தொனிப்பொருளாக "கல்விக்கான புதிய சமூக ஒப்பந்தத்தை நோக்கி ஆசிரியர் குரல்களுக்கு மதிப்பளித்தல்" (Valuing teacher voices: towards a new social contract for education) எனும் தொனிப்பொருளின் கீழ் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) ஆசிரியர் தின நிகழ்வுகள் திங்கட்கிழமை, 07 அக்டோபர், 2024 கல்லூரியின் முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் தலைமையில் சேர் ராஸிக் பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு மற்றும் பழைய மாணவிகள் சங்கத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். சஹத்துல் நஜீம் கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதியாக கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்) எம்.எச்.எம். ஜாபீர், விசேட அதிதியாக கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், கல்முனை சட்டத்தரணிகள் சங்க உப தலைவரும் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கத்தின் செயலாளருமான சிரேஷ்ட சட்டத்தரணி. ஆரிகா காரியப்பர், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் எஸ்.எல். அஸீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதிதிகள், ஆசிரியர்கள் மாலை மற்றும் சின்னம் அணிவித்து சாரணிய, முதலுதவி அணிவகுப்பு மரியாதையுடன் கலை கலாச்சார பாரம்பரிய நிகழ்வுகளுடன் மண்டபத்தை நோக்கி அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.காலை வேளையில் மைதான விளையாட்டுகள், இரண்டாம் கட்டமாக மேடை நிகழ்வுகள் இடம்பெற்றன. ஆசிரியர்களுக்கு இடையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி, சங்கித கதிரை, மெதுவான மோட்ட சைக்கிள் ஓட்டம், மேடை நிகழ்ச்சிகள், பேச்சு, பாடல், கதை, என கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.
ஆசிரியர்களின் கல்வி சேவையை பாராட்டி பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன. கல்முனை கல்வி வலயத்தின் கல்வி செயற்பாடுகளில் வினைத்திறன் மற்றும் அபிவிருத்தியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயலாற்றுகின்ற வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். சஹதுல் நஜீம் மற்றும் நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர் ஆகியோர் சேவைகளை பாராட்டி பொன்னாடை போற்றி கெளரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரதி அதிபர் ஹாஜியானி எஸ்.எஸ்.எம். சமதா மசூது லெவ்வை, ஏ.எச் நதிரா, உதவி அதிபர்களான என்.டி நதீகா, எம்.எஸ் மனூனா, பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சமகாலத்தில் தமிழ் தேசியம் பற்றி பேசுபவர்களே தமிழ் தேசியத்தை சிதைப்பவர்களாக இருக்கிறார்கள். அம்பாறை தமிழ் மக்களையிட்டு சற்றும் சிந்திக்காது இது கவலைக்குரியது.
என்று பொத்துவில் பிரதேச சபையின் இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னாள் உபதவிசாளரும் தொழில் அதிபருமான பெருமாள் பார்த்தீபன் தெரிவித்தார் .
சமகால அம்பாறை அரசியல் சூழல் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்...
இன்று தமிழ்த்தேசியம் அதல பாதாளத்துக்குள் போய்க்கொண்டிருக்கிறது . தலைமைகள் தமக்குள் வேறுபடுகின்றன.அம்பாறை மாவட்டத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இழக்கப்படுகின்ற ஆபத்து இருக்கின்றது.
மக்களுக்காக கட்சியே தவிர கட்சிக்காக மக்கள் அல்ல.
எனவே பழையவர்களை தவிர்த்து புது இரத்தம் பாய்ச்சப்பட வேண்டும். இன்றேல் மக்கள் பெரும்பான்மை கட்சி உடன் சேர்ந்து போக நேரிடும்.
கடந்த முறை செய்த தவறை இம்முறையும் செய்யக்கூடாது.
மக்கள் மனைநிலை வேறு அரசியல்வாதிகளின் மனநிலை வேறாக இருக்கின்றது.
எல்லோரும் சேர்ந்து தான் இதற்கு முடிவு கட்ட வேண்டும் .
சிலர் தேசிய பட்டியலுக்காக அம்பாறையை மைதானமாக பயன்படுத்துகின்றார்கள் . இவர்களெல்லாம் பிரிந்து இருந்து செயல்பட்டால் நாங்கள் வேலை செய்ய மாட்டோம் .
எமக்கான ஒரேயொரு பிரதிநிதித்துவம்.அதற்கு 100 பேர் போட்டி. தேசியம் பேசும் இவர்களால் தமிழ் தேசியம் பாதுகாக்கப்படாது. எனவே இந்த இறுதி நேரத்திலாவது ஒன்று படுமாறு அன்பாக அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு பெரண்டினா களுவாஞ்சிக்குடி கிளை மற்றும் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையும் இணைந்து உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்றினை இன்று(3) ஏற்பாடு செய்திருந்தனர்.
திடீர் விபத்துக்கள்,சத்திர சிகிச்சைகளுக்கான அவரச தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவுகின்ற இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக இவ் இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது.
உதிரம் கொடுத்து உயிர் காப்போம் என்பதற்கமைவாக பெரண்டினா களுவாஞ்சிக்குடி கிளையில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றதுடன் அதிகளவான இரத்ததான கொடையாளிகள் கலந்துகொண்டிருந்து சிறப்பித்திருந்தனர்.
இதன் போது பெரண்டினா பிரதேச முகாமையாளர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வினை வைத்தியசாலை ஊழியர்கள், பெரண்டினா ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
காரைதீவைச் சேர்ந்த பிரபல தமிழ்ப் பற்றாளர் தமிழாசான் ஓய்வு நிலை அதிபர் கலாபூஷணம் பொன். தவநாயகம் தனது 89 வது வயதில் மட்டக்களப்பில் நேற்று (29) காலமானார்.
அவரது இறுதி யாத்திரை நாளை (1) செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு மட்டக்களப்பு கல்வியங்காடு இந்து மயானத்தில் தகனக்கிரியை நடைபெறுமென அவரது புதல்வர் கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் த.மதிவேந்தன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் முக்கியமான செயற்பாட்டாளராகத் திகழ்ந்தவர். சிறந்த கலை இலக்கிய வாதி. மேடைப் பேச்சாளர். இவரது நகைச்சுவைப் பேச்சு அவையை அதிரவைக்கும்.
காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் ஆசிரியராக பன்னெடுங்காலமாக சேவையாற்றிவர். இன்றும் பாடப்படும் அப் பாடசாலையின் பாடசாலை கீதத்தை இயற்றிய பெருங் கவிஞராவார்.
சித்தாண்டியை பிறப்பிடமாகக் கொண்டு காரைதீவில் வாழ்ந்த திரு பொன்.தவநாயகம் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய ஆசிரியராக விடுதி மேலாளராக மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையின் பகுதிநேர தமிழ் விரிவுரையாளராக பணியாற்றினார்.
கிழக்கில் ஆளுமைகள் பலரையும் உருவாக்கிய பெயர்பெற்ற ஆசிரியர்களுள் ஒருவர்.
மிதவாதத் தமிழ்த் தேசியக் கருத்தியலில் ஆழமான பற்றுக் கொண்டு தனது மேடைப் பேச்சினூடாகத் தமிழ்த் தேசியச் சிந்தனைகளை மக்கள் மயப்படுத்திய ஆளுமைகளுள் ஒருவர்.
கலைஞர், எழுத்தாளர் எனப் பன்முக ஆற்றல்களுடன் செயலாற்றியவர்.
அவருக்கு மனைவி மங்கையர்க்கரசியுடன், டாக்டர். கௌரிகாந்தன்( அவுஸ்திரேலியா ), பொறியியலாளர் ஞானவிந்தன்( நியூசிலாந்து) ,பேராசிரியர் மதிவேந்தன்( கிழக்கு பல்கலைக்கழகம்),தமிழினி (அவுஸ்திரேலியா ) ஈழசுகந்தன்( நியூசிலாந்து ) ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.
பொன் தவநாயகம் எனும் ஆளுமையின் உடல் மறைந்தாலும் அவரின் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும் என்று அவரது மாணவர்கள் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்கள்.
இலங்கையில் தேர்தல்களின் போது, குறிப்பாக ஜனாதிபஜனாதிபதி தேர்தலின்போது, வேட்பாளர்களின் தோற்றத்தைக் குறிவைத்து பல்வேறு கருத்துகள் பேசப்படுவது வழக்கம் .
இலங்கையில் ஒரு நபரின் மீசை, உருவம், ஆங்கிலப் புலமை மற்றும் சிங்களம் பேசும் திறன், உடைகள், குழந்தைகள் இருப்பது போன்ற பல்வேறு வெளிப்புற காரணிகள் அடிப்படையில் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்கும் போக்கு இருப்பதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானப் பிரிவின் பேராசிரியர் விஷாக சூரியபண்டார சுட்டிக்காட்டினார்.
இருப்பினும் மக்கள் போராட்டத்துக்கு பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பின்னர் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகிறது. இம்முறை தேர்தலில் அத்தகைய பிம்பங்கள் எந்தளவுக்கு செல்லுபடியாகும் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.
"வெளிப்புற பிம்பம்" என்பது பொதுவாக ஒரு குறிப்பிட்ட நபரைப் பற்றி மற்றவர்கள் வைத்திருக்கும் அனைத்து கருத்துகள், உணர்வுகள் மற்றும் மதிப்பீடுகளைக் குறிக்கிறது.
விளம்பரம்
ஆசியாவில் "இமேஜ் அரசியல்" பரவலாக இருக்கிறது. ஐரோப்பாவிலும் சில இடங்களில் இமேஜ் அரசியல் காணப்படுகிறது.
சமீபத்தில், பிரிட்டன் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் தேர்தல் வெற்றிக்குப் பிறகு `இமேஜ் அரசியல்’ குறித்து கருத்து தெரிவித்தார்.
பிரிட்டனின் பிரதமராக பதவியேற்ற பிறகு, சர் கெய்ர் ஸ்டார்மர் தனது வெற்றி உரையில், மக்கள் "மாற்றத்திற்கு தயாராக உள்ளனர்" என்றும், "இமேஜ் அரசியலுக்கு முடிவு கட்டுவோம்" என்றும் சபதம் செய்தார்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதுவரை மக்கள் எடுத்த முடிவுகள்
இலங்கை அதிபர் தேர்தல் : இம்முறை இமேஜ் அரசியல் எடுபடுமா?
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,மஹிந்த ராஜபக்ஸ கட்டியெழுப்பிய பிம்பம் கோத்தபய ராஜபக்ஸவை ஜனாதிபதி பதவிக்கு வரச் செய்தது
மஹிந்த ராஜபக்ஷ பெரிய மீசையுடன் திடகாத்திர உடலைக் கொண்டு தனது வெளி பிம்பத்தை அதிகரிக்க பல யுக்திகளை கையாண்ட அரசியல்வாதி.
தேசிய உடை மற்றும் குராஹான் ஸ்கார்ஃப் அணிவது, இனம் மற்றும் மதம் தொடர்பாக அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தைகள் ஆகியவை மட்டுமின்றி 30 ஆண்டு கால உள்நாட்டுப் போரின் முடிவும் ராஜபக்ஸவின் இமேஜ் அரசியல் வளர்ச்சியில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தின.
மகிந்த ராஜபக்ஸ தேசிய உடை அணியும் கிராமவாசி என்ற கருத்தும் பரப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் அவரை 'பையா', `கிராம மேயர்’ என்றும் செல்லமாக அழைத்தனர்.
"ஹெல்பிங் ஹம்பாந்தோட்டை பண மோசடி’’ (Helping Hambantota) போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்ட போதும் அவர் கட்டமைத்த பிம்பத்தினால் இரண்டு முறை இலங்கை அதிபராக அவரால் வர முடிந்தது.
மஹிந்த ராஜபக்ஸ கட்டியெழுப்பிய பிம்பம் கோத்தபய ராஜபக்ஸவை ஜனாதிபதி பதவிக்கு வரச் செய்ததுடன், அதுமட்டுமல்லாமல் கோத்தபயவும் தான் ஒரு வலுவான தலைவர் என்ற பிம்பத்தை உருவாக்கியிருந்தார்.
மற்றொரு புறம், ரணில் விக்கிரமசிங்கவைப் பொருத்தவரையில், இலங்கையின் பெரும்பாலான வாக்காளர்கள் மத்தியில் அவர் பற்றி உருவான பிம்பம் வித்தியாசமானது.
ரணில் விக்கிரமசிங்கவின் உடைகள், ஆங்கிலம் மற்றும் சிங்களம் பேசுவதில் பிரச்னை, வெளித்தோற்றம், போரை காட்டிலும் பேச்சுவார்த்தையில் காட்டிய ஆர்வம் போன்ற காரணங்களால் அவர் 'துரோகி, மேற்குலக சார்புடைய ஆட்சியாளர்' என எதிர்க்கட்சிகளால் சித்தரிக்கப்பட்டார்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு குழந்தைகள் இல்லை என்றும் விமர்சிக்கப்பட்டது.
அவரைச் சுற்றி கட்டமைக்கப்பட்ட அந்த பிம்பம் அவரது அரசியல் பயணத்திற்கு பாதகமாக இருந்தது.
ரணில் எதிர்கொண்ட அளவுக்கு கடுமையான விமர்சனங்கள் இல்லை என்றாலும் சஜித் பிரேமதாசவும் குழந்தைகள் இல்லை என்ற விமர்சனத்தை எதிர்கொண்டார்.
இப்போது இமேஜ் அரசியலின் நிலைமை என்ன?
"இலங்கையில் உள்ள பெரும்பான்மையான வாக்காளர்கள் பல ஆண்டுகளாக இமேஜ் அரசியலை பார்த்து, தலைவர்களை தேர்வு செய்து பாடம் கற்றுள்ளனர். இந்த ஜனாதிபதித் தேர்தலில் அந்த வெளி பிம்பம் செல்லுபடியாகாது என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக பொருளாதார நெருக்கடிக்கு ஆளான பிந்தைய சூழலில், ஜனாதிபதி தேர்தலின் போது இது கண்டுக் கொள்ளப்படாது என்று தோன்றுகிறது. ”என்று பேராசிரியர் விசாக சூரியபண்டார பிபிசி சிங்கள சேவைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
ஒரு நாட்டை முறையாக ஆள்வதற்கு அரசியல்வாதியின் வெளி பிம்பம் முக்கியமல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“இப்போது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பக் கூடிய, தெளிவான செயல் திட்டம் கொண்ட, தொலைநோக்குப் பார்வை உள்ள, வெளிநாடுகளை சமாளிக்கக்கூடிய ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். வெளிப்புற பிம்பம் மீதான நம்பிக்கை இப்போது குறைந்துவிட்டது," என்று பேராசிரியர் கூறினார்.
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் - மலையக தமிழர், முஸ்லிம் ஆதரவு யாருக்கு?
11 ஆகஸ்ட் 2024
இலங்கை: விடுதலைப் புலிகளின் 2005-ம் ஆண்டு அறிவிப்பு இந்த தேர்தலிலும் தாக்கம் செலுத்துமா?
11 ஆகஸ்ட் 2024
'இந்த முறை நிலைமை வேறு'
இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களின் வெளி பிம்பம் தொடர்பான எவ்வித விமர்சனங்களும் அவமான கருத்துகளும் இடம்பெறவில்லை என அரசியல் விஞ்ஞானப் பேராசிரியர் ஜயதேவ உயங்கொட தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மிகவும் விமர்சிக்கப்பட்ட அரசியல்வாதி ரணில் விக்கிரமசிங்க தான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவை எடுத்துக்கொண்டால், பொதுஜன பெரமுன, தேசிய சுதந்திர முன்னணி போன்ற கட்சிகள் அவரை விமர்சித்துள்ளன. இந்த ஜனாதிபதி தேர்தலில் அவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்படவில்லை. முன்னர் அவரை விமர்சித்த பலர் தற்போது அவருடன் உள்ளனர். தற்போது இருவரும் பரஸ்பர உதவிகளை பெற்று வருகின்றனர். "
எனினும், ஆதரவற்ற நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றும் நடவடிக்கையில் ரணில் விக்கிரமசிங்க மக்களிடம் நெருக்கம் காட்டுவதில்லை என்பது பேராசிரியரின் கருத்து.
"ரணில் விக்கிரமசிங்க மிகவும் மதிப்புமிக்க உடைகளை அணிந்து கொண்டு தனது வாக்காளர்களை உரையாற்றுவதற்காக கூட்டங்களுக்குச் செல்வதை நான் பார்த்திருக்கிறேன். அவருடைய சூட், காலணி மற்றும் டை மிகவும் விலை உயர்ந்தது. ஆனால் இலங்கையில் பெரும்பான்மையான மக்கள் அவ்வாறு ஆடைகள் அணிய முடியாத நிலையில் உள்ளனர். அப்படியானால் ரணில் விக்கிரமசிங்க மீது மக்களுக்கு என்ன மாதிரியான பிம்பம் இருக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது." என்கிறார்.
இலங்கையில் ஒரே நேரத்தில் முகாமிட்ட இந்திய, சீன போர்க் கப்பல்கள் - எதற்காக தெரியுமா?
1 செப்டெம்பர் 2024
வில்லியம் கோபல்லாவ முதல் ரணில் விக்ரமசிங்க வரை - இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்கள்
28 ஆகஸ்ட் 2024
தலைவர்களின் வெளித் தோற்றத்தை பற்றி இப்போது மக்கள் கவலைப்படுவதில்லை
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வேட்பாளர்களின் வெளி பிம்பம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
பிம்பங்களை வைத்து அரசியலை தீர்மானிக்கும் நிலை தற்போது மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
"இந்த நேரத்தில், வெளி பிம்பம் பற்றிய கவலை குறைந்துள்ளது. மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியால், ஒரு தெளிவான செயல் திட்டத்துடன் கூடிய தலைவரையே அவர்கள் விரும்புகிறார்கள். எனவே, இப்போது இந்த இமேஜ் அரசியலை பற்றிப் பேசுவது குறைந்துள்ளது என்று நான் நினைக்கிறேன்" என்று டாக்டர் தயான் கூறினார்.
நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு குறிப்பிட்ட செயல் திட்டம் இருப்பதாக மக்கள் நம்ப வைக்கக்கூடிய வேட்பாளர் இம்முறை வெற்றி பெறுவார் எனவும் கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியினருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது
ஜனாதிபதி வேட்பாளரும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாசாவை ஆதரித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டம் தொடர்பான முன்னேற்பாடு கூட்டம் ஐக்கிய மக்கள் கட்சியின் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.கணேசமூர்த்தி தலைமையில் கல்லடியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிஷாட் பதியுதீன் முன்னாள் அமைச்சர் தவிசாளர்அமீரலி மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
இணைந்த கட்சிகளின் உடன்படிக்கை அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உடன்படிக்கை தொடர்பாகவும் பேசப்பட்டது.
நூருல் ஹுதா உமர் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலய மாணவிகள் இம்முறை நடைபெற்ற வலய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் 10 வெற்றி இடங்களை தனதாக்கி மாகாணப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் கல்வியிலும், விளையாட்டு, கலை, இலக்கிய போட்டிகளிலும் பிரகாசிக்கும் இந்த பாடசாலை மாணவர்கள் கடந்த காலங்களில் மாகாண மற்றும் தேசிய அளவில் பிரகாசித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் எம்.எப்.எம்.றிபாஸ் ,விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ஏ.என்.எம்.ஆபாக் ஆகியோர்களின் பயிற்சியின் பயனாக இந்த அடைவுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு சிறப்பான முறையில் தயார் படுத்திய பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் இணைப்பாடவிதான த்திற்கு பொறுப்பான உதவி அதிபர் எம்.எம். ஹாத்திம் ஆகியோர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக விசேட நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் தெரிவித்துள்ளார்
சம்மாந்துறை வலய ஆரம்பநெறி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.அப்துல் கபூர் தனது 60ஆவது வயதில் ஓய்வுபெறுவதையிட்டு வலயக்கல்விப் பணிமனையில் பிரிவுபசாரநிகழ்வு நேற்று (10) புதன்கிழமை சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் முன்னிலையில் இடம்பெற்றது.
சம்மாந்துறை வலய கல்வி சார் உத்தியோகத்தர்களின் நலன்புரி ஒன்றிய தலைவரும், உதவிக் கல்விப் பணிப்பாளருமான விபுலமாமணி தேசமான்ய வி.ரி.சகாதேவராஜா தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது
சம்மாந்துறை வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர்களான பி.பரமதயாளன், என்.எம்.நாசிர் அலி, ஏ.எம்.மொகமட் சியாத் உள்ளிட்ட கல்வி சார் உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
ஓய்வுபெறும் உதவிக் கல்விப் பணிப்பாளர் கபூர் தொடர்பாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.பரமதயாளன், இறக்காமம் கோட்டக் கல்விப்பணிப்பாளர் யூ.எல். மகுமூதுலெவ்வை, உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் உரையாற்றினர்.ஆரம்பநெறி ஆசிரிய ஆலோசகர் இசட்.எம்.றிஸ்வி கவிதையாற்றி வாசித்தார்.
கபூரின் அர்ப்பணிப்பான சேவையைப்பாராட்டி வலயக்கல்விப் பணிப்பாளர் மகேந்திரகுமார் பொன்னாடை போர்த்திக்கௌரவித்தார். அத்துடன் நன்றியுடன் வாழ்த்துரை வழங்கினார்.
24வருட காலம் ஆசிரியப் பணியையும், 04 வருட காலம் ஆசிரியர் ஆலோசகர் பணியையும் ,06வருட காலம் உதவிக் கல்விப் பணிப்பாளர் பணியையும் நிறைவு செய்து 2024.07.09ம் திகதி ஓய்வு பெறும் கபூர் நல்லதொரு வளவாளராவார்.
உதவிக் கல்விப் பணிப்பாளர் கபூர் ஏற்புரைநிகழ்த்துகையில் தான் 34வருடங்களுக்குமேல் கல்விச்சேவையாற்றியதாகவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் யாருடனும் முரண்படவில்லை.மாறாக அனைவரும் ஒத்துழைப்பு நல்கியதாகவும் தெரிவித்து நன்றி கூறினார்.
இறுதியாக அவரை அனைவரும் சேர்ந்து அவரது இல்லம் வரை கொண்டு சென்று குடும்பத்தினரிடம் ஒப்படைத்து கௌரவம் செய்தனர்.
நூருல் ஹுதா உமர் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலையின் மருத்துவ மாதுக்களின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை சர்வதேச மருத்துவ மாதுக்கள் தினம் கொண்டாடப்பட்டது.
வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.பி அப்துல் வாஜித் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் எம்.எஸ்.எம்.பாயிஸ், வைத்தியர்கள், தாதிய மேற்பார்வையாளர்கள், தாதியர்கள், பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள், உத்தியோகத்தர்கள், சிற்றூழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பலரும் வாழ்த்து செய்திகளை பரிமாறிக் கொண்டனர். கல்முனைப் பிராந்திய வைத்திய அதிகாரி றிஸ்வின் அவர்கள் Online மூலமாக தனது வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்
புத்தாண்டை முன்னிட்டு இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள மண்டூர் 35, கண்ணன் பாடசாலையில் கல்வி கற்கும் வறிய குடும்பங்களுடைய 52 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர். தெ.பேரின்பராசா தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
கல்விக்கு வறுமை தடையாக இருக்க கூடாது என்று "எழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்" எனும் தொனிப்பொருளில் இணைந்த கரங்கள் அமைப்பானது மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை பல கஸ்ர பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு உதவியினை வழங்கி வருகின்றது.
மேலும் இந் நிகழ்வில் ஆசிரியர்களான ந. நவகுமார், திருமதி. கி. விலோஜினி மற்றும்
இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான,
ஏஎம்.ரிஸ்வான்,
சி.காந்தன், சி. துலக்சன் ஆகியோர்
கலந்து கொண்டு 52 மாணவர்களுக்கான பாடசாலைக்கு செல்வதற்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் என்பன வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவைமாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல், தென், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா எதிர்வரும் பெப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய தினங்களில் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.
இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக மாநாடு இன்று (06) பல்கலைகழக பிரதான சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
பெப்ரவரி 10ஆம் தேதி 3 அமர்வுகளும் 11ஆம் தேதி 3 அமர்வுகளுமாக மொத்தமாக ஆறு அமர்வுகளாக பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதலாம் நாளின் முதலாவது அமர்வில் கலை கலாசார பீடத்தைச் சேர்ந்த 342 பட்டதாரிகளும் இரண்டாவது அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தைச் சேர்ந்த 355 பட்டதாரிகளும் மூண்றாவது அமர்வில் பிரயோக விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்ப பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த 430 பட்டதாரிகளும் பட்டம் பெற உள்ளனர்.
இணையத்தள பக்கமும் பத்திரிகையாளர் மாநாட்டின் போது அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
ஊடக நிழ்வில் உபேவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கருடன் இணைந்து பட்டமளிப்விழாக் குழு தலைவர் பேராசிரியர் எம்.பி.எம் இஸ்மாயில், பதில் பதிவாளர் எம்.ஐ.எம். நௌபர், ஊடக பிரிவு இணைப்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் எப்.எச்.ஏ. ஷிப்லி மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
சேர்ச் போ கொமண்ட் கிறவுண்ட் ((Search for Common Ground) நிறுவனத்தின் அனுசரணையில் அம்பாரை மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற பெண்களின் வில் கிளப் (WILL Club) அமர்வானது அம்பாரையிலுள்ள தனியார் விடுதியொன்றில் இன்று (28) நடைபெற்றது. சேர்ச் போ கொமண்ட் கிறவுண்ட் நிறுவனத்தின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுக்கான சிரேஸ்ட முகாமையாளர் எம்.ஜ.எம்.சதாத் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திட்ட இணைப்பாளர் கமலவாணி சுதாகரன், அம்பாரை மாவட்ட உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் திரு.கமால் நேத்மினி, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன், கல்முனை பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர், ஏசிஏ.அசீஸ்;, தேசிய அபாயகர ஒளடதங்கள் ஆணைக்குழுவின் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் எஆ.றசாட், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சம ;மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான எம்.எம்.ஜி.பி.நௌசாட், மற்றும் அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் பெண் உறுப்பினர்கள், எனப் பலரும் கலந்து கொண்டனர் சேர்ச் போ கொமண்ட் கிறவுண்ட் நிறுவனம் கடந்த 04 வருடங்களாக அம்பாரை மாவட்ட உள்ளுராட்சிமன்ற பெண் உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை வலுப்படுத்தி இப்பெண்களுக்கான தனித்தளமாக 'வில் கழகம்' ஒன்றினை உருவாக்கியதுடன் இவர்களுக்கு உதவியாக பலதரப்பட்ட பங்குதாரர்கள் குழு ஒன்றினையும் அமைத்து இயங்கி வருகின்றது. இன்றைய வில் கழக அமர்வில் உள்ளுராட்சி மன்ற பெண் தலைவிகளால் எழுதப்பட்ட திட்ட முன்மொழிவுகளின் செயற்பாடுகள் பற்றியும், இச்செயற்பாடுகளினால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் தாக்கங்கள்; அவற்றைத் தக்கவைத்துக்கொள்வதற்கான வழிமுறைகள், திட்ட செயற்பாடுகளை செயற்படுத்தும் போது பலதரப்பட்ட பங்குதாரர் குழுவிடமிருந்து பெற்றுக் கொண்ட உதவிகள் பற்றியும் தெளிவு படுத்தப்பட்டது. அத்தோடு உள்ளுராட்சி மன்ற பெண் உறுப்பினர்களுக்கும் பலதரப்பட்ட பங்குதாரர் குழுவினர்களுக்குமிடையில் கலந்துரையாடலும் நடைபெற்றது. மேலும் வில் கழகத்தை மாவட்ட ரீதியில் பதிவு செய்வதற்கு தேவையான வழிமுறைகள் பற்றி அம்பாரை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் கே.எம்.இர்பான் கலந்து கொண்டு தெளிவுபடுத்தினார். இதேநேரம் வில் கழகத்திற்கான புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.