Showing posts with label Slider. Show all posts

 


பாறுக் ஷிஹான்


அரிசி களஞ்சியசாலை மற்றும் அரிசி விற்பனை நிலையங்கள்  மீது திடீர் சுற்றிவளைப்பு இன்று அம்பாறை மாவட்ட நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினரால்  மேற்கொள்ளப்பட்டது.
 
நுகர்வோர் அலுவல்கள் அதிகார தலைவரின் ஆலோசனையுடன்  நிறைவேற்று பணிப்பாளார்  வழிகாட்டலில்  அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி சாலிந்த பண்டார நவரத்ன மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரிகளினால் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பிரதேசத்தில் இவ் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
 
இதன் போது பெரிய நீலாவணை பொலிஸாரின் பிரசன்னத்துடன்   புலன் விசாரணை அதிகாரிகளினால் பாண்டிருப்பு மருதமுனை பெரிய நீலாவணை பகுதியில் உள்ள அரிசி  களஞ்சியசாலை மற்றும் அரிசி வர்த்தக நிலையங்கள்  பரிசோதணை மேற்கொள்ளப்பட்டு எச்சரிக்கையுடன் அறிவுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டது.

 மேலும் பல அரிசி  களஞ்சியசாலை மற்றும் அரிசி வர்த்தக நிலையங்களுக்கு  எதிராக நீதிமன்றதினுடாக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் அரிசி பதுக்கலில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் தொடர்பில் அறியத்தருமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் சுமார் 20 க்கும் மேற்பட்ட அரிசி விற்பனை நிலையங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் விலைப்பட்டியல் காட்சிப் படுத்த தவறிய வர்த்தகர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

  





பாறுக் ஷிஹான்

அரிசி வகைகளுக்கான செயற்கை தட்டுப்பாட்டை வர்த்தகர்கள் சிலர் மேற்கொள்வதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை அம்பாறை அக்கரைப்பற்று  மாநகர சபைகள்  உள்ளிட்ட  சம்மாந்துறை காரைதீவு  நிந்தவூர் அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று திருக்கோவில் பொத்துவில் இறக்காமம் நாவிதன்வெளி உகண மகாஓயா பதியத்தலாவ தெகியத்தகண்டிய தமண நாமல்ஓயா ஆலையடிவேம்பு லகுகல பகுதிகளில் அரிசி வகைகளுக்கான தட்டுப்பாடுகள் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் அரிசி வகைகளை நுகர்வோர் பெற்றுக்கொள்ள முயற்சி செய்த போதிலும் வர்த்தர்கள் சிலர் அதிக விலைக்கு விற்பனை செய்ய முயற்சிப்பதுடன் அதிக விலைக்கு தற்போது அரிசியை கொள்வனவு செய்ததாக கூறி அதிகளவான விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

மேலும் சில வர்த்தகர்கள் அரிசி வகைகளை பதுக்கல் செய்வதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.எனவே இவ்விடயம் தொடர்பில் அம்பாறை மாவட்ட நுகர்வோர்  அதிகார சபையினர்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

மேலும் சில அரிசி ஆலைகள்  வர்த்தக நிலையங்கள்  அரிசி  விடயத்தில் மாபியா இரகசியங்கள் பேணி வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தவிர அரிசி  விற்பனை செய்யும் போது நுகர்வோருக்கு நிபந்தனை விதிப்பது மேலதிக கட்டணங்கள் அறவிடுவது அரிசி வகைகளை   பதுக்கி  வைப்பது தொடர்பாக  பொது மக்களினால் பல்வேறு  முறைப்பாடுகள்  உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் இவ்வாறான அரிசி தட்டுப்பாடுகள் இடம்பெற்ற போது அம்பாறை மாவட்டத்தில் உள்ள நெல் களஞ்சியசாலை வர்த்தக நிலையங்கள்  மற்றும் அரிசி களஞ்சியசாலைகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு   நீதிமன்றத்தினுடாக  சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அரிசி தட்டுப்பாட்டிற்கு மத்தியில் சில வர்த்தகர்கள் கையிருப்பில் உள்ள அரிசி வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக மற்றுமொரு குற்றச்சாட்டும் நுகர்வோரால் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியின் விலையை அவ்வப்போது அதிகரிப்பதால் கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்க முடியாமல் தவிப்பதாக அரிசி மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அரிசியின் மொத்த விலையை மீண்டும் உயர்த்தியுள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள அரிசி மொத்த வியாபாரிகளுக்கு அறிவித்துள்ளதுடன் நாட்டு அரிசி  சம்பா மற்றும் கீரி சம்பா ஆகிய அரிசிகளின் மொத்த விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  <iframe width="315" height="560" src="https://www.youtube.com/embed/p8fecY_M5SE" title="@ceylon24 #breakingnews  #shortsfeedshorts #results #shrots #Lka" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியீடு.2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk

என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 ( வி.ரி.சகாதேவராஜா)


 உலகெலாம் ஜீவசேவை ஆற்றிவரும் இராமகிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த சுவாமி விவேகானந்தரின் 163வது ஜெயந்தி தினத்தையொட்டி, அவர் பெயரில் ஆரம்பித்த கிரான் குளம் விவேகானந்த பூங்காவில் பணிக்கு பாராட்டு எனும் நிகழ்வு இடம்பெற்றது வருகிறது.



விவேகானந்த பூங்கா பணிக்கு உதவி வழங்குகின்றவர்களை அல்லது அவர்களது பெற்றோர்களை விசேட தினங்களில்  கெளரவிப்போம் என்ற செயற்திட்டத்தை  விவேகானந்த பூங்கா ஸ்தாபகர் பிரபல சமூக செயற்பாட்டாளர் கந்தப்பன் சற்குணேஸ்வரன் முன்னெடுத்து வருகிறார்.

சமூக நலன்புரி ஒன்றியம் விவேகானந்த தொழில்நுட்ப கல்லூரி 
முல்லைத்தீவு அன்னை சாரதா இல்லம் மட்டக்களப்பு திலகவதியார் மகளிர் இல்லம் போன்ற பல சமூகநோக்குடைய அமைப்புக்களை உருவாக்கி ஜீவ சேவையாற்றி வரும் க.சற்குணேஸ்வரன் அண்மையில் கிரான் குளம் விவேகானந்த பூங்காவை பிரமாண்டமான முறையில் ஸ்தாபித்தார்.

அப் பூங்காவில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து பல பரோபகாரிகள் பல விதங்களில் உதவியுள்ளார்கள்.

அவர்களை பூங்காவிற்கு வரவழைத்து பாராட்டிக் கௌரவிக்கின்ற கைங்கர்யம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் சுவாமி விவேகானந்தரின் 163 வது  ஜனன தினத்தில் நாவிதன்வெளியைச் சேர்ந்த திருமதி சேத்ரபதி சிதம்பரபிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் மாலை சூடி கௌரவிக்கப்பட்டனர்.
லண்டனில் உள்ள சிதம்பரப்பிள்ளை
தேவகாந்தன் பூங்காவில் ஒரு கட்டடத்தை அமைக்க உதவியிருந்தார்.
அதற்காக அவரது தாயார் கௌரவிக்கப்பட்டார்.

இப்படியான பல பணிகளுக்கு மேலும் உதவிகள் தேவையாக உள்ளதால் நீங்களும் உதவலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.



பாறுக் ஷிஹான்)


அண்மையில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட நிலைமையை தொடர்ந்து கடலரிப்பின் தாக்கம் மிக வேகமாக இப்பகுதியில் ஏற்பட்டுள்ளது.

இதனைக் கட்டுப்படுத்துவதற்கு கரையோரம் பேணல் திணைக்களம்  அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் சுற்றாடல் அதிகார சபை உள்ளிட்ட அரச நிறுவனங்கள் அவசர நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டுமென பள்ளிவாசல் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் கல்முனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல்  பின்புறமாக அமைக்கப்பட்ட தென்னந்தோட்டமும் கடலரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளன.அங்குள்ள சில தென்னை மரங்களும்  முறிந்து விழுந்துள்ளன.இது தவிர அடிக்கடி  தற்போது கடல் அலை சீற்றம் காரணமாக  இப்பகுதிகள் கடலரிப்பிற்குள்ளாகி பாரிய சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.காலை முதல் மாலை வரை மப்பும் மந்தாரமுமாக அடை  மழை இப்பகுதியில்  பெய்த வண்ணம் உள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் குறிப்பாக கல்முனை   பெரியநீலாவணை  சாய்ந்தமருது  மருதமுனை   பாண்டிருப்பு  அட்டாளைச்சேனை   நிந்தவூர்   ஒலுவில்   போன்ற பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு  காற்றின் திசை மாற்றம்   நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள திசை மாற்றம்   கடல் நீரின் தன்மை வழமைக்கு மாறாக குளிர்ச்சியாக காணப்படுகின்ற காரணங்களால் கடல் அலைகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதினாலும் கடலரிப்பு மிக கோரமாக காணப்படுகின்றது.

குறிப்பாக இவ்வாறான காலநிலை மாற்றங்களினால் கடலரிப்பு  அதிகமாக ஏற்படுவதினாலும் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களும்  வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.




நூருல் ஹுதா உமர்

லக்ஸ்டோ மீடியா ஊடக, கலை, கலாசார, சமூக மேம்பாட்டுக்கான அமைப்பின் 28 வது வருட கொண்டாட்டம் எதிர்வரும் 2025 ஜனவரி 25ஆம் திகதி காரைதீவு விபுலானந்தர் ஞாபகார்த்த கலாசார மண்டபத்தில் இரண்டு அமர்வுகளாக லக்ஸ்டோ மீடியாவின் பிரதானி அறிவிப்பாளர் ஏ.எல். அன்சார் தலைமையில் இடம்பெற உள்ளது.  

இந்நிகழ்வுகளின் முதல் அமர்வு பிறை எப்.எம் வானொலியின் பிரதிப் பணிப்பாளர் பஷீர் அப்துல் கையூம் அவர்களின் தலைமையில் காலை 10 மணி தொடக்கம் மதியம் 01.00 மணி வரை இடம்பெறவுள்ளது. இதில் முதன்மை விருந்தினர்களாக அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக், ஓய்வு பெற்ற பிறை எப்.எம் வர்த்தக முகாமையாளர் கவிஞர் எஸ்.றபீக் மற்றும் கலாபூஷணம் எம். அருணம்பலம் ஆகியோரும் கலந்து கொள்ளும் ஆரம்ப நிகழ்வில் பல்சுவை கவியரங்கும் இடம்பெறும்.

விசுவாமித்திரன் தமிழ் மருதா மாமணியின் தலைமையில் இடம்பெறும் கவியரங்கில் கவிஞர்களான எஸ். றபீக்,  செங்கதிரேசன், டாக்டர் சனூஸ் காரியப்பர், மருதூர் அன்சார், மாஜிதா தவ்பீக், நஸ்லா, ஜென்னத்துல் பாத்திமா, மேரியன் அந்தோணி, ராஜரட்ணம்,  ஜெயா மற்றும் வசந்த காலம் ஆகியோர் கவி பாடவுள்ளனர்.

02.30 மணிக்கு ஆரம்பமாகும் இரண்டாம் அமர்வில் மரநடுகை, பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை புத்தகப்பை வழங்குதல் என்பனவற்றுடன் திறமைக்கான தேடல் மகுடத்தின் கீழ் பல்துறை சார்ந்தவர்களுக்கு திறமைக்கு மரியாதை கௌரவ விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை கலந்து கொள்ள உள்ளதுடன் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன் கௌரவ அதிதியாகவும், விசேட விருந்தினர்களாக தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர், பார்ட்னர்ஸ் போ சேன்ஜ் இன்டெர்னஷனல் நிறுவன சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் றிசாத் ஷெரீப் மற்றும் கலை இலக்கியவாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

 

முன்னாள் நீதிபதி இளஞ்செழியனுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண சிவில் சமூகம் சார்ந்த பிரதிநிதிகள் இன்று ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளனர்.





 நூருல் ஹுதா உமர்


இலங்கையில் புகலிடம் கோரி வரும் மியன்மார் ரோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்பும் முடிவு குறித்து கவலை அடைவதாகவும், குறித்த தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு ஐக்கிய மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் எம்.ஏ.நளீர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில் கோரியுள்ளார்.

மேலும் குறித்த கடிதத்தின் தெரிவிப்பதாவது, சர்வதேச மனிதாபிமானக் சட்டங்களையும், கொள்கைகளையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும், துன்புறுத்தலுக்கு ஆளாகாமல் தங்கள் தாயகத்தில் இருந்து தப்பி வந்த இவர்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதும் எனது உறுதியான நம்பிக்கை. மியான்மாரில் கடுமையான வன்முறை மற்றும் அடக்குமுறை காரணமாக ரோஹிங்கியா மக்கள் நம் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியும்.   அவர்கள் இலங்கைக்கு வந்திருப்பது பொருளாதார நோக்கில் புலம்பெயர்ந்தவர்களல்ல, உண்மையான உயிருக்கு பயந்துதான். ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகம் இந்த நபர்களின் அவலநிலையை அங்கீகரித்துள்ளது, மேலும் மனித உரிமைகள் மற்றும் கண்ணியத்தை மதிக்கும் ஒரு தேசமாக அவர்கள் பாதிக்கப்படக்கூடிய நேரத்தில் அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவது நமது கடமையாகும்.

அகதிகள் மீதான சர்வதேச சட்டங்கள் மற்றும் மரபுகளுடன் எமது நாட்டின் நடவடிக்கைகள் ஒத்துப்போவதை உறுதி செய்ய வேண்டும், இது மறுபரிசீலனை செய்யாத கொள்கையை வலியுறுத்துகிறது. தனிநபர்கள் அவர்களின் உயிருக்கு அல்லது சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் இடங்களுக்கு அவர்களை திருப்பி அனுப்புவதைத் தடுக்கிறது.   இந்தக் கோட்பாட்டை நிலைநிறுத்துவதன் மூலம், பாதிக்கப்படக்கூடிய நபர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது மட்டுமன்றி, சர்வதேச மனிதாபிமான தரங்களுக்கு இலங்கை அர்ப்பணிப்பை வெளிப்படுத்துதல் வேண்டும்.

வரலாற்று ரீதியாக, இலங்கை துன்புறுத்தலுக்கு ஆளாகியவர்களுக்கு புகலிடமாக இருந்து வருகிறது.   அத்துடன் பல இலங்கையர்கள் மோதல் காலங்களில் வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்ந்துள்ளனர்.    மியன்மார் ரோஹிங்கியா அகதிகளின் தற்போதைய நிலைமை கடந்த காலத்தில் ஒரு தேசமாக நாம் எதிர்கொண்ட போராட்டங்களை பிரதிபலிக்கிறது என்பதை நினைவில் கொள்வது மிகவும் முக்கியமானது.  மியன்மாரில் அவர்களின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் இன்னும் ஆபத்தில் உள்ளன இச்சந்தர்ப்பத்தில் இந்த மக்களை வலுக்கட்டாயமாக மியான்மாருக்கு திருப்பி அனுப்பும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த அகதிகள் இலங்கையில் இருக்கும் போது அவர்களை மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்த வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.   அவர்கள் கைதிகளாகக் கருதப்படாமல், நமது இரக்கமும் ஆதரவும் தேவைப்படும் மக்களாகக் கருதப்பட வேண்டும்.   மேலும், இந்த அகதிகள் தங்களுக்குப் பாதுகாப்பானதாகக் கருதப்பட்டவுடன் அவர்களின் ஒப்புதலுடன் மீள்குடியேறக்கூடிய பொருத்தமான மூன்றாவது நாட்டை அடையாளம் காண ஐக்கிய நாடுகள் சபையுடன் ஒத்துழைப்பது பொருத்தமானதாக இருக்கும் எனக் கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 


பாறுக் ஷிஹான்


பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு "கிளீன் ஸ்ரீ லங்கா" நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக தெளிவூட்டும் நிகழ்வு


 புதிய அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் "கிளீன் ஸ்ரீ லங்கா" (Clean Sri Lanka) வேலைத்திட்டமானது சுற்றாடல் மற்றும் சமூக மாற்றமொன்றை ஏற்படுத்தி நாட்டின் தரப்படுத்தல் நோக்கங்களை முதன்மையாக கொண்டு "அழகான நாடு புன்னகைக்கும் மக்கள்”எனும் தொனிப்பொருளில் அதி மேதகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இக்  "கிளீன் ஸ்ரீ லங்கா" வேலைத்திட்டம் தொடர்பாக சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டும் பயிற்சி நெறி (21) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா   தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பிரதான மூன்று விடயங்களான சமூக அடிப்படை, சுற்றாடல் அடிப்டை மற்றும் நெறிமுறை அடிப்படையிலான விடயங்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் இதன் போது வழங்கப்பட்டது.

அழகான தீவு சிரிக்கும் மக்கள் எனும் கருப்பொருளை அடைவதற்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ள செயற் திட்டங்கள் தொடர்பான தெளிவூட்டல் பிரதேச செயலாளரினால் விளக்கங்கள் வழங்கப்பட்டது.நீடித்த சமூக கலாசாரத்தை மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நாம் தனிநபர் மாற்றத்தினுடாக அதனை ஏற்படுத்த வேண்டும் என இதன் போது கருத்து பிரதேச செயலாளரினால் கருத்து தெரிவிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் யூ.எம்.அஸ்லம்(LLB),கணக்காளர் எஸ்.எல்.சர்தார் மிர்ஸா,நிர்வாக உத்தியோகத்தர் ஜே.எம்.ஜெமீல்,மேலதிக மாவட்ட பதிவாளர் ஏ.கே.ரினோஸா ஆகியோர் கலந்து கொண்டனர்.இப் பயிற்சி பட்டறையானது முதல் கட்டமாக பிரதேச செயலகத்தில் உள்ள நிர்வாக பிரிவு,மேலதிக மாவட்ட பதிவாளர் பிரிவு,தேசிய அடையாள அட்டைப் பிரிவு, அஸ்வெசும ஆகிய கிளைகளில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு நடத்தப்பட்டது.

இதன்  இரண்டாம் கட்டமாக  பிரதேச செயலக திட்டமிடல் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு தெளிவூட்டும் பயிற்சி நெறி  பிற்பகல்  பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லமினால் நிகழ்த்தப்பட்டது.


வி.சுகிர்தகுமார்    



அம்பாரை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை  வெள்ள பெருக்கு காரணமாக ஆலையடிவேம்பு கல்வி கோட்டத்தில் இன்று (22) நடைபெறவிருந்த மூன்றாந்தவணை பரீட்சைகள் பிற்போடப்பட்டன.
வெள்ள அனர்த்த நிலையினை கருத்திற்கொண்டு பாடசாலைக்கு சென்ற  வி.சுகிர்தகுமார்   

 மாணவர்களை பெற்றோர்கள் சுயவிருப்பின் பேரில் அழைத்துச் சென்ற நிலையில் இன்று நிறுத்தப்பட்ட பரீட்சைகள் நடைபெறும் திகதி தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என பிரதிக்கல்விப்பணிப்பாளர் கி.கமலமோகனதாசன் தெரிவித்தார்.
இதேநேரம் வெள்ள அனர்த்த நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அம்பாரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் பல குடியிருப்புக்கள் வீதிகள் பாடசாலைகள் அரச தனியார் அலுவலகங்கள் வெள்ளம் புகுந்து மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் துரித நடவடிக்கைகளை எடுக்குமாறும் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் உள்ளிட்ட அதிகாரிகளை பணித்துள்ளதுடன் வெள்ள அனர்த்த நிலை தொடர்பில் நேரில் பார்வையிட்டார்.
வெள்ள அனர்த்த நிலை காரணமாக ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் அதிகளவான வயல் நிலங்கள் கைவிடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதேநேரம் சேனநாயக்க சமுத்திரத்திம் 2.5 அடி மேலதிக நீர் 5 வான்கதவுகளின் ஊடாக வெளியேற்றப்பட்டுள்ள நிலையில்
தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் வெள்ள அனர்த்த நிலைக்கு முகம்கொடுக்கும் வகையில் முன்னாயத்த நடவடிக்கைகளை பிரதேச செயலாளர்கள் எடுக்குமாறும் மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம அறிவித்துள்ளார்.


அக்கரைப்பற்று -03ஆலிம் வீதியைச் சேர்ந்த றபிலா -(அக்கரைப்பற்று ஆயிசா மகளிர் கல்லுாரி) ஆசிரியை கொழும்பில் .இன்று காலை காலமானார்.

இவர் கணக்காய்வு அத்தியட்சகர் Nizar Yazeen Bawa அவர்களின் அன்பு மனைவியும், மா்ஹீம் அஹமட்லெப்பை- (முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர்,  இப்றாஹிம் - ஓய்வு நிலை முகாமையாளர், சட்டத்தரணி ஏஎம்.தாஜ் -ஒலிரப்பாளர், சரினா  ஆசிரியை ஆகியோரின் சகோதரியும்,மனாப் மௌலவி-(ஆசிரிய ஆலோசகர்) அவர்களின் மதினியும் ஆவார். 


அவரது ஜனாசா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

 (வி.ரி.சகாதேவராஜா)



அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை வெள்ளத்தினால் முற்றுமுழுதாக சூழ்ந்துள்ளது .

இன்று (22) புதன்கிழமை பெய்த கனமழையையடுத்து வெள்ளம் பாடசாலையில் புகுந்துள்ளது.

பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்து. 

பாடசாலை அதிபர் டேவிட் அமிர்தலிங்கத்திடம் கேட்டபோது ..

பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபம் நூலகம் உள்ளிட்ட பல கட்டடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பாடசாலைக்கு மாணவர் வரவு வெகுவாக குறைந்திருந்தது
வந்த மாணவர்களையும் வெள்ள அபாயம் கருதி  பெற்றோர்கள் அழைத்து சென்றனர்.

எனினும் கபொத. சா.த. உ.தர விசேட பரீட்சைகள் நடைபெற்றன.

பாடசாலையில் தாழ்நில பகுதி அனைத்து வகுப்பறைகளிலும், பாடசாலை நூலகம், பிரதான மண்டபம் என்பன நீரில் மூழ்கி காணப்படுகிறது.

 பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளரிடம் அறிவித்துள்ளோம் என்றார்.




 பாறுக் ஷிஹான்


அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளராக (ACLG) நியமிக்கப்பட்டுள்ள இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான ஏ.எஸ்.எம்.அஸீம் செவ்வாய்க்கிழமை (21) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன்போது அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்களினால் இவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ. ரி.எம். றாபி. அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர்.

கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளராக கடமையாற்றி வருகின்ற நிலையில் அப்பதவிக்கு மேலதிகமாகவே கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளரினால் இவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது.

திறந்த போட்டிப் பரீட்சை மூலம் 2019ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட ஏ.எஸ்.எம்.அஸீம், 2020 மார்ச் மாதம் தொடக்கம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக கடமையாற்றியுள்ளதுடன் 2022 ஜனவரி மாதம் தொடக்கம் கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளராக கடமையாற்றி வருகின்றார்.

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான இவர், அஹமட் சிராஜுதீன் மற்றும் ஜஹ்புல் அறபியா தம்பதியரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


கிழக்கு, வடமத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


வடக்கு மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொணராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


மழை நிலைமை:


திருகோணமலையில் இருந்து பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாககாலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


காற்று :


நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையில் இருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


கொழும்பில் இருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


கடல் நிலை:


கொழும்பில் இருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.


பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்


அனுராதபுரம் - அடிக்கடி மழை பெய்யும்


மட்டக்களப்பு - அடிக்கடி மழை பெய்யும்


கொழும்பு - மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்


காலி - மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்


யாழ்ப்பாணம் - சிறிதளவில் மழை பெய்யும்


கண்டி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்


நுவரெலியா - அடிக்கடி மழை பெய்யும்


இரத்தினபுரி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்


திருகோணமலை - அடிக்கடி மழை பெய்யும்


மன்னார் - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.