Showing posts with label Eastren. Show all posts



 ( வி.ரி.சகாதேவராஜா)


கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு  இன்று 25.01.2025 சனிக்கிழமை மாபெரும் இரத்ததான முகாம்( குருதிக்கொடை ) நடைபெற்றது.

கல்முனை  ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து   காலை 8.00 மணி முதல் மாலை 4.30 மணிவரை பாடசாலை வளாகத்தில் இடம் பெற்றது.
ஆரம்ப வைபவம் கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ரெஜினோல்ட் தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் கலந்து சிறப்பித்தார்.

கௌரவ அதிதியாக கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் நடராஜா றமேஸ் மற்றும் விசேட அதிதியாக வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பாளர் மருத்துவர் திருமதி பி.எம்.கவிதா கலந்து சிறப்பித்தார்கள்.

  கார்மேல் பற்றிமாவின் 125 ஆவது நிறைவு நிகழ்வு நிறைவேற்றுக்குழுவினரும் கலந்து ஒத்துழைத்தனர்.

125 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் பல நிகழ்வுகள் ஒரு வருடத்திற்கு மாதாந்தம் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


 ( வி.ரி.சகாதேவராஜா)


 உலகெலாம் ஜீவசேவை ஆற்றிவரும் இராமகிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த சுவாமி விவேகானந்தரின் 163வது ஜெயந்தி தினத்தையொட்டி, அவர் பெயரில் ஆரம்பித்த கிரான் குளம் விவேகானந்த பூங்காவில் பணிக்கு பாராட்டு எனும் நிகழ்வு இடம்பெற்றது வருகிறது.



விவேகானந்த பூங்கா பணிக்கு உதவி வழங்குகின்றவர்களை அல்லது அவர்களது பெற்றோர்களை விசேட தினங்களில்  கெளரவிப்போம் என்ற செயற்திட்டத்தை  விவேகானந்த பூங்கா ஸ்தாபகர் பிரபல சமூக செயற்பாட்டாளர் கந்தப்பன் சற்குணேஸ்வரன் முன்னெடுத்து வருகிறார்.

சமூக நலன்புரி ஒன்றியம் விவேகானந்த தொழில்நுட்ப கல்லூரி 
முல்லைத்தீவு அன்னை சாரதா இல்லம் மட்டக்களப்பு திலகவதியார் மகளிர் இல்லம் போன்ற பல சமூகநோக்குடைய அமைப்புக்களை உருவாக்கி ஜீவ சேவையாற்றி வரும் க.சற்குணேஸ்வரன் அண்மையில் கிரான் குளம் விவேகானந்த பூங்காவை பிரமாண்டமான முறையில் ஸ்தாபித்தார்.

அப் பூங்காவில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து பல பரோபகாரிகள் பல விதங்களில் உதவியுள்ளார்கள்.

அவர்களை பூங்காவிற்கு வரவழைத்து பாராட்டிக் கௌரவிக்கின்ற கைங்கர்யம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் சுவாமி விவேகானந்தரின் 163 வது  ஜனன தினத்தில் நாவிதன்வெளியைச் சேர்ந்த திருமதி சேத்ரபதி சிதம்பரபிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் மாலை சூடி கௌரவிக்கப்பட்டனர்.
லண்டனில் உள்ள சிதம்பரப்பிள்ளை
தேவகாந்தன் பூங்காவில் ஒரு கட்டடத்தை அமைக்க உதவியிருந்தார்.
அதற்காக அவரது தாயார் கௌரவிக்கப்பட்டார்.

இப்படியான பல பணிகளுக்கு மேலும் உதவிகள் தேவையாக உள்ளதால் நீங்களும் உதவலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

(கனகராசா சரவணன்)

 

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பில் சீரற்ற கால நிலை காரணமாக சனிக்கிழமை தொடக்கம் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக மாவட்டதிலுள்ள குளங்கள் அனைத்தும் நீர் நிரம்பிய நிலையில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் உன்னிச்சைக் குளத்தின் மூன்று வான் கதவுகள் 9 அடிக்கு திறக்கப்பட்டதையடுத்து அந்தப் பகுதியிலுள்ள வேளாண்மைகள் யாவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் தாழ் நில பகுதிகளிலுள்ள குடியிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


தொடர் மழையினால் மாவட்டத்திலுள்ள நவகிரிகுளம், புனாணை அனைக்கட்டு, வடமுனைக்குளம், வெலியாகண்டிய குளம், றூகம்குளம். வாகனேரிகுளம், கட்டுமுறிவுக்குளம், போன்ற குளங்களில் நீர் மட்டம் அதிகரித்ததையடுத்து அந்தந்தக் குளங்களின் தேவைக்கு ஏற்றவாறு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.  


அதேவேளை உன்னிச்சைக் குளத்தின் நீர் மட்டம் 34 அடிக்கு உயர்ந்ததையடுத்து குளத்தின் 3 வான் கதவுகள் தலா 6 அடி உயரத்துக்கு திறக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து மழை பெய்து குளத்தின் வான்கதவுகள் மேலும் அதிகளவில் திறக்க வேண்டிய நிலை ஏற்படும் என அதன் நீர்பாசனத் திணைக்களப் பொறியிலாளர் தெரிவித்தார்.


இதேவேளை இந்த உன்னிச்சைகுளத்தின் வான் கதவு திறக்கப்பட்டதையடுத்து வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதோடு வேளாண்மைகள் யாவும் பாதிப்படைந்துள்ளதுடன் தாழ் நிலப்பகுதிகள் இன்று இரவு வெள்ளத்தால் மூழ்கும் அபாய நிலை தோன்றியுள்ளதுடன் வான்கதவு திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றை அண்டிய மற்றும் தாழ்நிலப் பகுதிகளிலுள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறும் நீர் மட்டம் அதிகரித்தால் தாழ்நில பகுதிகளிலுள்ளவர்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் குளங்கள், நீர் நிலைகள், கடல், ஆறுகளில் நீராடுவதை தவிர்க்குமாறும் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் அவதானமாகச் செயற்படுமாறும் மாவட்ட இடர் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.


(கனகராசா சரவணன்)


 


நூருல் ஹுதா உமர்


ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய காரியாலய திறப்பு விழா சங்கத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாரூன் ஸஹ்வி யின் தலைமையில் சனிக்கிழமை (18) நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும்  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் பி. தனேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் திணைக்களத்தின் அதிகாரிகள் கூட்டுறவு சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டு வைபவ ரீதியாக இக் காரியாலயம்  திறந்து வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மட்/ ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சங்கத்தின் முன்பள்ளி பாலர் பாடசாலை மாணவர் விடுகை விழா நிகழ்விலும் அதிதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 


பாறுக் ஷிஹான்


அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை  கடற் பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

இன்று மாலை கரையொதுங்கிய குறித்த மீனை அப்பகுதி சிறுவர்கள் பிடித்து மீண்டும் கடலில் விடுவதை காண முடிந்தது.

குறித்த மீன் சுமார் 4 முதல் 5 அடி வரையான  நீளம் கொண்டதுடன் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பினால் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த மீனை   காண்பதற்கு அப்பகுதி மக்கள்  வருகை தந்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது.இது தவிர ஏற்கனவே  அம்பாறை மாவட்டம் கல்முனை  பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பெரியநீலாவணை பாண்டிருப்பு  கடற்கரை பகுதியில்  கடலாமைகள் டொல்பின் மீனினம் என பலவகை கடல்வாழ் உயிரினங்கள்   கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரை  ஒதுங்கி இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

அத்துடன்  மருதமுனை கடற்கரை பகுதிகள் விரைவாக கடலரிப்பிற்கு உள்ளாகி வருகின்றன.இப்பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு காரணமாக தோணிகள் வள்ளங்கள் கரையை நோக்கி நகர்த்தப்பட்டு வருகின்றன.மேலும் கடலரிப்பின் காரணமாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு  அங்குள்ள மீனவர்களும் தொழில் நடவடிக்கைகளில் பெரிய இடர்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு காற்றின் திசை மாற்றம்  நீரோட்டத்தில் ஏற்ப்பட்டுள்ள திசை மாற்றம்   கடல் நீரின் தன்மை வழமைக்கு மாறாக குளிர்ச்சியாக காணப்படுகின்ற காரணங்களால் கடல் அலைகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதினாலும் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.


--

 



பாறுக் ஷிஹான்


சிலோன் மீடியா போரத்தின் SLAS ஆளுமைகளுடனான சந்திப்பும் கௌரவிப்பும் திங்கட்கிழமை (13) அட்டப்பளம் அட்டப்பளம் தனியார் விடுதியில் போரத்தின் தலைவர் ரியாத் .ஏ .மஜீத்   தலைமையில் அமைப்பின் ஐந்தாவது வருட நிறவை ஒட்டி இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பல  கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன்   சிரேஸ்ட சேவை நிர்வாக அதிகாரிகள் உட்பட சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் என பலரும்  பாராட்டி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பிரதம அதிதியாக  மேல் நீதிமன்ற நீதிபதி அப்துல்லாஹ்  , விசேட அதிதியாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் வே. ஜெகதீசன்  , என்.எஸ்.கன்ஸ்ரக்ஷன் எங்ஜினெரிங் கம்பனி முகாமைத்துவ பணிப்பாளர் நியாஸூம்  கலந்து கொண்டனர்.

 

Rep/JKJathursan.

தேசிய மக்கள் சக்தியின் திருக்கோவில் பிரதேச ஒருங்கினைப்பு காரியாலயமானது இன்று பிற்பகல் 4:30 pm மணிக்கு தம்பிலுவில் 01 பகுதியில் உத்தியோக பூர்வமாக தம்பிலுவில் 01 ஆதவன் மைதானத்திற்கு முன்பாக. திறந்து வைக்கப்பட்டது.


 



நூருல் ஹுதா உமர்


கல்முனை பிராந்திய வைத்தியசாலைகள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள், பாடசாலைகள் ஆகியவற்றின் வாய் சுகாதார பிரிவுகளின் சேவையை மேம்படுத்தும் பொருட்டு, குறித்த பிரிவுகளுக்கு பற்சிகிச்சை மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

குறித்த உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது மருதமுனை, அட்டாளைச்சேனை, இறக்காமம், அன்னமலை, ஒலுவில் ஆகிய  பிரதேச வைத்தியசாலைகளின் வாய் சுகாதார பிரிவுகளுக்கும், பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி, கல்முனை ஸாஹிரா கல்லூரி என்பவற்றின் பற்சிகிச்சை நிலையங்களுக்கும் குறித்த மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிராந்திய வாய் சுகாதார பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் யூ.ஹபீப் முஹம்மட் உள்ளிட்ட பிரிவு தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 



( வி.ரி. சகாதேவராஜா)


 அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்- AusKar), சம்மாந்துறை வலயத்திலுள்ள மிகவும் பின்தங்கிய மல்வத்தை கணபதிபுரம் விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களையும்,, பாடசாலைக்கு ஒலிபெருக்கி சாதனத்தையும் வழங்கி வைத்தது.

"ஒஸ்கார்" ( AusKar) அமைப்பின் தலைவர் கந்தசாமி பத்மநாதன் ( ராஜன்) வேண்டுகோளுக்கமைவாக, "ஒஸ்கார்" அமைப்பின் போசகரும் உலகறிந்த பிரபல சமூக செயற்பாட்டாளருமான நாகமணி குணரெத்தினம் இத் திட்டத்திற்கு பூரண நிதியுதவி நல்கினார்.

இந்நிகழ்வு , மல்வத்தை கணபதிபுரம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில்  நேற்று  ( 09) வியாழக்கிழமை அதிபர் எஸ்.கிருபைராஜா தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக,  ஒஸ்கார் அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க ஓய்வு நிலை உதவிக் கல்விப்பணிப்பாளரும் பிரபல ஊடகவியலாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா  கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு அதிதியாக இலங்கை வங்கியின் ஓய்வு நிலை முகாமையாளர் இ.தவராஜா கலந்து சிறப்பித்தார் 

 ஒஸ்கார் சார்பில்  உ. சஜானந்த்   ஏற்பாடுகளை செய்திருந்தார்.

நிகழ்வில் அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலை பை உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. 

மேலும் பாடசாலையின் நீண்ட கால தேவையாக இருந்துவந்த ஒலிபெருக்கி சாதனத்தையும் ஒஸ்கார் அமைப்பு வழங்கி வைத்தது.

நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இதனை ஒஸ்கார் அமைப்பின் சமூக சேவைக்கான இணைப்பாளரும் பொருளாளருமான வீரக்குட்டி விவேகானந்தமூர்த்தி  அவுஸ்திரேலியாவிலிருந்து  ஒழுங்கமைப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார் 

 ஒஸ்கார்  அமைப்பின் தலைவர் கந்தசாமி பத்மநாதன் ( ராஜன்) தலைமையிலான செயலாளர் தி.லாவண்யன், பொருளாளர் வீ.விவேகானந்தமூர்த்தி உள்ளிட்ட ஒஸ்கார் குழுவினர் இன்னொரன்ன பல  சேவைகளை கடந்த பல வருடங்களாக செய்து வருகின்றார்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.



 ( வி.ரி. சகாதேவராஜா)


 வீதியில் முச்சக்கர வண்டியில் வந்த மாற்றுத்திறனாளி ஒருவரை பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மாற்றுத் திறனாளி ஸ்தலத்திலேயே உயிரிழந்தார் .

இச் சம்பவம் பொத்து விலை அடுத்துள்ள கோமாரிப் பிரதேசத்தில் இன்று (9) வியாழக்கிழமை காலை 6 மணி அளவில் இடம்பெற்றுள்ளது .

விபத்தில் பலியானவர் கோமாரியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மென்டிஸ்அப்பு விஜயஸ்ரீ ( வயது 71 ) என்பவராவார்.

பல வருடங்களாக அவர் பிரதான வீதியில் கோமாரி மகா வித்தியாலயத்திற்கும் தபாலகத்திற்கும் இடையேயுள்ள மரத்தின் கீழ் முச்சக்கர வண்டியில் நிற்பது வழக்கம். செருப்பு தைப்பதும் குடை திருத்துவதும் தொழிலாக கொண்டிருந்தவர்.

சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது..

 இரண்டு கால்களும் இயலாத மாற்றுத் திறனாளியான அவர் இன்று முச்சக்கர வண்டியில் வீட்டிலிருந்து வந்து பிரதான வீதியில் கடை ஒன்றில் தேநீர் அருந்திவிட்டு செல்கின்ற பொழுது பின்னால்  வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இவரின் மீது மோதியது .
அக் கணத்தில் அவர் தூக்கி எறியப்பட்டார். அந்த இடத்திலேயே அவர் மரணமானார்.

சம்பவ இடத்திற்கு பொத்துவில் போலீசார் விரைந்தனர். மோதிய வர்  அம்புலன்சில் அனுப்பப்பட்டார்.
 பலியானவர் பொத்துவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் விசாரணைகளை பொத்துவில் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.


 

(எம்.என்.எம்.அப்ராஸ்) 


பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவின் துரித நடடிக்கையினால் கல்முனை கடற்கரைப் சிறுவர் பூங்கா அருகில் கடலரிப்பு தடுப்புக்கற்கள் இடும் பணி நேற்று(02)இடம்பெற்றது.

கல்முனை கடற்கரை சிறுவர் பூங்கா அருகில் கடலரிப்பு மேலும் உக்கிரமடைந்த நிலையில் அங்கு உள்ள சுவர்கள் கடலரிப்பின் காரணமாக மிகவும் அதிகமாக பாதிப்படைந்துள்ளது. கடலரிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் கல்முனை சிறுவர் பூங்கா பாதிப்புகுள்ளாகும் நிலை காணப்பட்டது இதற்கமைய குறித்த பகுதி பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைய கல்முனை பிரதேச ஒருங்கிணைப்பு தலைவரும் அரசியல் பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா கல்முனை கடற்கரை சிறுவர் பூங்காவின் பகுதிக்கு இன்று விஜயம் மேற்கொண்டார். இதன் போது நிலைமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா பார்வையிட்டதுடன் உரிய அதிகாரிகளை குறித்த இடத்திற்கு வரவழைத்து,மக்களால் முன்வைக்கப்பட்ட மேற் குறித்த பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை மேற்கொண்டார் இதன் போது கடல் அரிப்பினை தடுக்கும் வகையில் கரையோரம் பேணல் திணைக்கள அதிகாரிகளினால் தடுப்பு கற்க்கள் இடும் பணிகள் உடனடியாக மேற் கொள்ளப்பட்டது .


மிக நீணடகாலமாக சிறுவர் பூங்கா பராமரிப்பு இன்றி காணப்படுவதாகவும் மக்களுக்கு பயன் உள்ள வகையில் இதனை ஏற் படுத்தி தருமாறு மேலும் இதன் போது பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர் இதனையடுத்து கடற்கரைப் சிறுவர் பூங்கா சுற்று சூழலினை பாராளுமன்ற உறுப்பினர் அவதானித்ததுடன் பூங்காவின் ஒரு பகுதியில் வளர்ந்து காணப்படும் புற்கள் மற்றும் ஒளிரமாமல் காணப்படும் மின் குமிழ்கள் இதர அபிவிருத்தி தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா அறிவுறுத்தினார்.



நூருல் ஹுதா உமர்

கொவிட் 19 தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை (ஜனாஸா) பலாத்காரமாகத் தகனம் செய்தமை தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு பொருத்தமான விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்துக்குத் தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளார்.விவாதத்திற்கு திகதி குறிப்பிடப்படாத அந்தப் பிரேரணை (பா.28/2024) பாராளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த விடயமானது காலம் கடந்த சிந்தனையாக இருந்தாலும் பாராட்டத்தக்கது என கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும், கடந்த வருடம் இறுதிப்பகுதியில் தகனம் தொடர்பான தீர்மானத்தை எடுத்த குழு உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்திற்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் "பாராளுமன்றத் தெரிவுக்குழுவை" நியமிக்க வேண்டும். அநீதியான சம்பவத்தை செய்த குழுவிற்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு சபாநாயகரிடம் சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து கோரிக்கை விடுப்பதற்கும், ஜனாஸாக்களை தகனம் செய்வது தொடர்பான தீர்மானத்தை எதிர்த்து முஸ்லிம் சமூகத்துக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கவும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு கோர 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தோம். அந்த கோரிக்கைகளை ஊடகங்கள் வாயிலாகவும் அந்த காலப்பகுதியில் வெளிகொண்டு வந்திருந்தோம்.

அந்த கோரிக்கையை ஏற்று காலம் தாமதித்தேனும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு கோரிய கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகம் சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். அதுபோன்று ஏனைய உறுப்பினர்களும் இந்த விடயத்தில் அக்கறை செலுத்தவேண்டியது கட்டாயமாகும் என வலியுறுத்த விரும்புகிறேன்.

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் பிரஸ்தாப பிரேரணையில் குறிப்பிட்டுள்ள கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வதற்கான இயலுமை உள்ளதென உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்த நிலையில், மேற்படி சடலங்ளை நல்லடக்கம் செய்வதால் நிலக்கீழ் நீரில் வைரஸ் கலப்பதற்கான அபாய நிலை உள்ளதாகக் கூறி கடந்த அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட கொள்கை அளவிலான தீர்மானத்தின்படி செயற்பட்டமையும், அந்த சடலங்களை உறவினர்களின் உடன்பாடின்றி தகனம் செய்தமையும் , பின்னர் அவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் செயற்பட்டமை சரியானதல்ல, தவறு என்று தெரிவித்து அரசாங்கமே உத்தியோகபூர்வமாக மன்னிப்பு கோரியிருந்தமையும் இந்த தொற்றினால் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தமது சமய ரீதியான இறுதிக் கிரியைகளை மேற்கொள்வதற்கோ அல்லது குறித்த சடலங்களை பார்வையிடுவதற்கோ சந்தர்ப்பம் வழங்கப்படாமையும் இது குறித்து உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் எழுந்த எதிர்ப்புகள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தகனம் செய்வதற்குப் பதிலாக ஓட்டமாவடியில் , மஜ்மா நகர் எனப்படும் தனிமையான பிரதேசத்தில் மேற்படி சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட போதிலும், குடும்ப உறவினர்கள் இறுதி கடமைகளைச் செய்வதற்கோ, மரியாதை செலுத்துவதற்கோ, உரிமை மறுக்கப்பட்டமை தொடர்பிலும், இந்த விவகாரத்தில் அரசாங்கம் பாரதூரமான தவறுகளை புரிந்துள்ளமையினாலும் குறிப்பிட்ட விடயங்களை உரிய முறையில் விசாரணை செய்து பொருத்தமான விதந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்கும்படியான கோரிக்கைக்கு மதிப்பளித்து அரசாங்கம் உடனடியாக பாராளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 



மாளிகைக்காடு செய்தியாளர்

மாவடிப்பள்ளி அனைத்து பாலர் பாடசாலைகள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மாவடிப்பள்ளி அல்- மதீனா பாலர் பாடசாலை மற்றும் மாவடிப்பள்ளி ரஹ்மானியா பாலர் பாடசாலை ஆகியவற்றின் இவ்வாண்டுக்கான மாணவர்கள் விடுகை நிகழ்வு மாவடிப்பள்ளி அஸ்ரப் மகா வித்தியாலய கேட்போர் கூட்டத்தில் மாவடிப்பள்ளி அனைத்து பாலர் பாடசாலைகள் சம்மேளன தலைவர் எம்.எச். எம். அஸ்வர் தலைமையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக மாவடிப்பள்ளி கமு/கமு/ அஸ்ரப் மகா வித்தியாலய அதிபர் ஏ.எல். ரஜாப்டீன், கமு/கமு/ அஸ்ரப் மகா வித்தியாலய ஓய்வு பெற்ற எம்.ஐ.எம். சைபுத்தீன், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு முன்னாள் உறுப்பினரும், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளருமான யூ.எல்.என். ஹுதா உமர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் பிரதம பேச்சாளராக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உத்தியோகத்தர் மௌலவி ஏ.பி.எம். ரம்சீன் (காஸிமி) கலந்து கொண்டார்.
பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், அவர்களுக்கான கௌரவிப்பும் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் இளம் சூழலியலாளர் மின்மினி மின்ஹா, மாவடிப்பள்ளி அல்- மதீனா பாலர் பாடசாலை மற்றும் மாவடிப்பள்ளி ரஹ்மானியா பாலர் பாடசாலை ஆகியவற்றின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 \



வி.சுகிர்தகுமார்   



ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் பிரதேசம் நில அளவை செய்யப்படும் பணிகள் நில அளவை திணைக்களத்தின் உத்தியோகத்தர்களினால் ( 19) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இப்பணிகளை கண்காணிப்பதற்காக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் மற்றும் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் பிரதேச செயலக காணிப்பிரிவு உத்தியோகத்தர்கள் அங்கு சென்றிருந்தனர்.
குறித்த பிரதேசம் நீண்டகாலமாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக அத்துமீறிய நில அபகரிப்பு காணி தொடர்பான உரிமைத்தன்மை தொடர்பிலான பிணக்குகள் அரச தனியார் காணிகளை அடையாளப்படுத்தமுடியாமை போன்ற சிக்கல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
அத்தோடு இக்காணிகள் தொடர்பான நீதிமன்ற வழக்குகளும் கடந்த காலத்தில் இருந்து இடம்பெற்று வருகின்றன.
இதற்கான தீர்வை காணும் வகையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் மாவட்ட செயலாளரின் அனுமதியோடு நிலஅளவை செய்வதற்கான கோரிக்கையினை நில அளவை திணைக்களத்திடம் முன்வைத்திருந்தார்.
இதன் அடிப்படையில் இன்று வருகைதந்த நில அளவை திணைக்கள அதிகாரிகள் இன்று முதல் குறித்த பகுதிகளை நில அளவை செய்யும் பணகளை ஆரம்பித்துள்ளனர்

 


வி.சுகிர்தகுமார் 


 புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடாக தேசிய ரீதியில் இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டிற்கான அரச உத்தியோகத்தர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டியில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் முதலிடத்தை பெற்றுக்கொண்;டார்.
தேசிய ரீதியில் அரச உத்தியோகத்தர்களுக்கிடையிலாக நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த 13ஆம் திகதி அலரி மாளிகையில் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தலைமையில் இடம்பெற்றது.
இதன்போதே இவர் விருது மற்றும் சான்றிதழ் பணப்பரிசில்கள் ஆகியன வழங்கி கௌரவிக்கப்பட்டார்;.  
தேசிய ரீதியில் இடம்பெற்ற கவிதைப்போட்டியிலேயே இவர் முதலிடத்தை பெற்றுக்கொண்டதன்; மூலம் தாம் பிறந்த அன்னமலை மண்ணிற்கும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கும் பெருமை சேர்த்தார்.

 


நூருல் ஹுதா உமர்


எலிக்காய்ச்சல் சம்பந்தமாக விவசாயிகளுக்கும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் களப்பணி நிகழ்ச்சி காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வசீர் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.

இதன்போது மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கைகள் இடம் பெற்று வருவருகிறது. அதன் ஒரு அங்கமாக எலிக்காய்ச்சலுக்கு மனிதர்கள் ஏன் பயப்பட வேண்டும். வட மாகாணத்தின் பல பகுதிகளிலும்  அதிகரித்த எண்ணிக்கையில் சடுதியான மர்மக் காய்ச்சல் ஒன்று பரவி வருவதாக செய்திகள் அண்மைய நாட்களில் வெளிவந்திருந்தன. இந்த காய்ச்சல் leptospira எனப்படும் ஒரு வகை பக்டீரியா மூலம் பரவுவதால் லெப்டோஸ்பிரோசிஸ் என்று இந்த நோய் அழைக்கப்படுகிறது. கேள்வி அடையாளம் போன்ற வடிவம் கொண்டதன் காரணமாக இவை Spirochaeta குரூப் என்றும் வகைப்படுத்தப்படுகிறது.

Leptospirosis என்பது சிறு விலங்குகள் அதிலும் குறிப்பாக எலியின் சிறுநீர் நீரின் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோயாகும். ஒரு காலத்தில் இந்த நோய் cane-cutter's கரும்பு வெட்டிகளின் நோய் என்று ஐரோப்பாவிலும், "rice field jaundice , அரிசி வயல் காமாலை என்று சீனாவிலும் " "Akiyami இலையுதிர் காய்ச்சல்" என்று ஜப்பானிலும் அறியப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் பெரும் சம்பவங்கள் செய்த இந்த நோய் இப்போது Neglected tropical zoonotic infection of public health importance எனும் கட்டகரிக்குள் போய்ச் சேர்ந்திருக்கிறது. இருந்தாலும் இப்போது  உலகளாவிய பொது சுகாதார முக்கியத்துவம் வாய்ந்த மீண்டும் வளர்ந்து வரும் re-emerging நோயாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

விரைவான, திட்டமிடப்படாத நகரமயமாக்கல் மற்றும் மோசமான சுகாதாரம் , அலட்சியம் ஆகியவற்றின் காரணமாக, வளரும் நாடுகளில் கடுமையான காய்ச்சல் ஏற்படுத்தும் நோய்க்கான முக்கிய காரணமாக லெப்டோஸ்பைரோசிஸ் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. வீட்டு மற்றும் காட்டு விலங்குகள் லெப்டோஸ்பைர்களை எடுத்துச் செல்வதால், அவ்வாறான இடங்களில் வசிக்கும் ஒவ்வொரு நபருக்கும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. சுகாதார ஊழியர்கள், கால்நடை பராமரிப்பாளர்கள், விவசாயிகள் மற்றும் பண்ணை தொழிலாளர்கள், மீனவர்கள், கொறித்துண்ணிகளினால்( Rodents ) கடிபடுபவர்கள், நீரில் விளையாடுபவர்கள்,  வெள்ளம் பாதித்த பகுதிகளில் தன்னார்வ மீட்புப் பணிகளில் ஈடுபடுபவர்கள், துப்புரவுப் பணியாளர்கள், கழிவுநீர் தொழிலாளர்கள், இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்பட கூடியவர்களாக இருக்கின்றனர்.

லெப்டோஸ்பைரோசிஸ் பக்டீரியாவினால் பாதிக்கப்பட்ட விலங்குகளின்  அதாவது எலிகள், நாய்கள், கால்நடைகளான ஆடு, மாடு, பன்றிகள் மற்றும் வன விலங்குகளின் சிறுநீர் வெள்ள நீர், ஆறு, குளம் போன்ற பெரும் நன்னீர் நிலைகளில் கலப்பதால் இந்த நோய்த்தொற்று ஏற்படுகிறது. இப்படியான அசுத்த நீர் காயங்களில் படுவதால், அந்த நீரில் வாய் கொப்பளிப்பதால் அல்லது குடிப்பதால் மனிதர்களை இந்த நோய் தொற்றிக் கொள்கிறது.

எனவே வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களின் பின்னர், குளம் குட்டைகளில் குளிப்பதை தவிர்த்தல், வெள்ளம் பார்க்க செல்வதை தவிர்த்தல், கொதித்து ஆறிய சுத்தமான நீரை பருகுதல், விவசாய வேலைகளுக்கு பூட்ஸ் சப்பாத்து அணிதல், காலில் உள்ள காயங்களை மூடி பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற் கொள்வதன் மூலமாக இந்த நோய் தொற்றுவதில் இருந்து பாதுகாப்பு பெற முடியும்.

அதிக காய்ச்சல் தலைவலி உடல் வலி கண் மஞ்சளாதல்  போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று வைத்திய ஆலோசனை பெற்றுக் கொள்வது மிகவும் உசிதமானது. அது போல உங்கள் பிரதேசங்களில் எலி காய்ச்சல் பரவினால் இந்த நோய் உங்களுக்கு ஏற்பாடாமல் இருக்க தடுப்பு மருந்துகளை Prophylaxis பெற்றுக் கொள்ள முடியும்.

 எலிக்காய்ச்சல் குறித்து தெரிந்து கொள்ள , இலவசமாக தடுப்பு மருந்துகளை பெற்று கொள்ள உங்கள் பிரதேசத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளை அல்லது வைத்தியசாலைகளை நாட முடியும் என காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அறிவித்தல் வெளியிட்டுள்ளது




 ( வி.ரி. சகாதேவராஜா)


மட்டக்களப்பு கல்லடி   உப்போடை  ஸ்ரீ இராமகிருஸ்ணமிஷன் சாரதா பாலர் பாடசாலையின் 54 ஆவது ஆண்டு நிறைவு விழா  நேற்று முன்தினம் ( 12.) கல்லடிஉப்போடை   சுவாமி விபுலானந்தர் மணி மண்டபத்தில் இடம்பெற்றது.

 "செல்லச் சிட்டுக்களின் சிங்காரக் கொண்டாட்டம்" எனும் தொனிப் பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆன்மீக  அதிதிகளான    ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன் முகாமையாளர் நிலமாதவானந்தாஜீ மகராஜ் மற்றும் உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி  உமாதீஷானந்தஜி   மகாராஜ்  முன்னிலையில்  நிகழ்வு இடம் பெற்றது , 

பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த்  கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு அதிதிகளாக  பிரதேச செயலக முன்  பள்ளி  அபிவிருத்தி உத்தியோகத்தர் தி.மேகராஜ் மற்றும்  பாலர் பள்ளிப் பணியக     வெளிக்கள  உத்தியோகத்தர்  பா. பரணீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர் 

 இதன்போது சிறார்களின் ஆடல், பாடல் பேச்சு   மற்றும்      புராண நாட்டிய நாடகங்கள்  அரங்கேறியமை குறிப்பிடத்தக்கது.

 நிகழ்வில் பங்கேற்ற செல்ல சிட்டுகள் அனைவருக்கும்   அதிதிகளால்   பரிசுகள் வழங்கி கௌரவிக்கபட்டார்கள் 

  பிரதேச வாழ் பொது மக்களும் , சிறார்களின் பெற்றோர்களும் நிழல்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்



 பாறுக் ஷிஹான்


கட்டாக்காலி மாடுகள் மற்றும் நாய்களினால்   ஏற்படும் விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து சிரமங்கள் தொடர்பில்  பொதுமக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளான நற்பிட்டிமுனை பெரிய நீலாவணை மருதமுனை பாண்டிருப்பு சாய்ந்தமருது மற்றும் நகரப்பகுதிகளில் அதிகளவான கட்டாக்காலி மாடுகள் நாய்கள் உலா வருகின்றன.

இதன் காரணமாக போக்குவரத்தில் ஈடுபடும் பொதுமக்கள் வாகன சாரதிகள்  பல்வேறு சிரமங்களை எதிர் கொள்வதாக  சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பில் உரிய அதிகாரிகள்  கவனமெடுத்து நடவடிக்கைகளை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.அதிகமான மாடுகள்  நாய்கள் வீதியிலேயே படுத்துறங்குவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு  முன்னுள்ள  வீதியில் நாய்கள் நடமாடுவதோடு பல நாய்கள் பொலிஸ் நிலையம் செல்லும் வாசலில் வீதியில் படுத்துறங்குகின்றன.

மாலை நேரப் பொழுதில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவதனால் இரவுப்பொழுதினை ஒளியூட்டுவதற்காக வீதி விளக்குகள் போதியளவில் இல்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலையும் இங்கு காணப்படுகின்றது.எதிர்பாராத நேரத்தில் வாகனங்களுக்கு குறுக்காக பாயும் போது நாயுடன் வாகனம் மோதிக் கொள்வதை தவிர்ப்பதற்காக திடீரென தடுப்பிடும் பொழுது ஏற்படும் அசௌகரியம் பாரிய போக்குவரத்து மனவுளைச்சலுக்கும்  அச்சத்திற்கும் காரணமாகிப் போகும் சூழல் அப்பகுதியில் இருக்கின்றது.

எனவே சமூகநலன் கருதி மாநகர  சபை  மற்றும் பிராந்திய சுகாதார பரிசோதகர்கள்  உள்ளிட்ட  அனைவரும் ஒன்றிணைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றது.
 

 



( நமது நிருபர்)


அம்பாறை மாவட்டம் காரைதீவைச்சேர்ந்த நாடறிந்த சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான தேசமான்ய விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா கிழக்கு மாகாண பல்துறை வித்தகர் விருது  நேற்று  ( 2024.12.11) புதன்கிழமை வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா நேற்று  (11.12.2024) புதன்கிழமை திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றபோதே இக் கௌரவ விருது வழங்கப்பட்டது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர இவ் உயரிய விருதை வழங்கி வைத்தார்.

அவருக்கான அலங்காரமாலையை கிழக்கு மாகாண பிரதம செயலாளர் R.M.P.S ரத்நாயக்க அணிவிக்க  கிழக்கு மாகாண கல்வி அமைச்சின்   செயலாளர் H.E.M.W.G திசாநாயக்க பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

நிகழ்வில் அமைச்சுக்களின் செயலாளர்களான மதன்நாயக்க  கோபாலரெத்தினம் நசீர் குணநாதன்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கிழக்கு மாகாணத்தில் 2022,2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் தெரிவு செய்யப்பட்ட பல துறைகள் சார்ந்தவர்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள் .

கிழக்கு மாகாணத்தின் உயரிய விருதான "வித்தகர்" விருதினை பெற்றார் 
 காரைதீவைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளரும் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான தேசமான்ய   விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா அவர்கள்.

வித்தகர் வி.ரி.சகாதேவராஜா

36 வருடங்கள் கல்விப் பணியாற்றிய திரு சகாதேவராஜா,சம்மாந்துறை வலயத்தில் 26 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றி வெள்ளி விழாக் கண்ட ஒரே ஒரு உதவிக் கல்விப் பணிப்பாளரும், சம்மாந்துறை வலய கல்வி சார் உத்தியோகத்தர்கள் நலன்புரி ஒன்றியத்தின்  தலைவருமாவார்.

இவர் 
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் மிகவும் நெருங்கிய பற்றாளனான இவர் பத்து வருடங்கள் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் ஆசிரியராகவும் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையில் 26 வருடங்கள் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் சேவையாற்றியுள்ளார் .
 
பேராதனை பல்கலைக்கழக கலைத்துறை பட்டதாரியான இவர் மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையில்  பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராவார். பட்டப்பின் கல்வி டிப்ளோமோ மற்றும் கல்வி முதுமாணிப் பட்டம் பெற்றவராவார்.

இலங்கை அதிபர் சேவையின் முதலாந்தர அதிபராவார்.

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத் தலைவராக அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத் தலைவராக காரைதீவு விபுலானந்தா ஞாபகார்த்த பணிமன்றத் தலைவராக இந்துசமய விருத்திச்சங்க தலைவராக காரைதீவு விளையாட்டு கழகத் தலைவராக கம்பன் கலைக்கழகத் தலைவராக கிராம அபிவிருத்தி சங்க தலைவராக இவ்வாறு பல அமைப்புகளில் தலைவராக முன்னணி சமூக செயற்பாட்டாளரான அவர் ஒரு தலைசிறந்த ஊடகவியலாளரும் கூட. 

சம காலத்தில் மேற்குறிப்பிட்ட அமைப்புகளின் ஆலோசகராக மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய பரிபாலன சபையின் ஆலோசகராக இவ்வாறு பல நடிபங்குகளினூடாக சமூக சமய சேவையாற்றி வருகிறார்.

காரைதீவின் பழம் பெரும் ஆசிரியர் வே.தம்பிராஜா தங்கநாயகம் தம்பதிகளின் கனிஸ்ட புதல்வராவார்.

 காரைதீவில் 1964.09.28 அன்று பிறந்தார் .

ஆரம்பக் கல்வியை ராமகிருஷ்ணசங்க ஆண்கள் பாடசாலையிலும் பின்னர் விபுலானந்த மத்திய  கல்லூரியிலும் மற்றும் மட்டக்களப்பு  சிவானந்த வித்தியாலயத்திலும் கல்வி பயின்றார்.

"ஊழியில் ஆழி" எனும் வரலாற்று நூலை 2005 வெளியிட்டார். மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் முத்தமிழ் மன்ற தலைவராக பணியாற்றிய வேளை அங்கு "கலைச்செல்வி" நூலுக்கு நூலாசிரியராகவும் சுவாமி விபுலானந்த பணிமன்றத்தின் அடிகளார் நினைவாலய மலருக்கும் சுவாமி நடராஜானந்தா ஜீயின் நூற்றாண்டு விழாவில் சேவையின் சிகரம் எனும் நூலையும் ஊரா வெளியிட்டிருக்கின்றார். 

இலங்கையின் அதிசிறந்த ஊடக விருதான மக்கள் சேவை ஊடக விருது 2007 வீரகேசரி கட்டுரை வெளியீட்டுக்காக பெற்றார் .
இத்தாலி பாங்க்கொக் மலேசியா சிங்கப்பூர் பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு சென்று சிறப்பு அனுபவத்தை பெற்றிருந்தார்.

தேசமான்ய வித்தகர் திகாமடுல்ல அபிமானி விபுலமாமணி  வாழ்நாள் சாதனையாளர் வித்யசாஹித்யன் வித்யகலாசிறி கலைச்செம்மல் போன்ற இன்னோரன்ன விருதுகளைப் பெற்றவர்.
அவர் மேலும் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் பிரசங்கங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.