Showing posts with label Eastern. Show all posts

 



பாறுக் ஷிஹான்


 விடுதி அறை  மலசல கூடத்தில்   மீட்கப்பட்ட   ஆணின்  சடலம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை  கல்முனை தலைமையக  பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கல்முனை  வடக்கு  ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள  விடுதி அறை  மலசல கூடத்தில்   தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த  சடலம் இன்று  மீட்கப்பட்டிருந்தது.

இதன் போது மரணமடைந்த நிலையில் சடலமாக  மீட்கப்பட்டவர் அப்பகுதியில்  உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி  வந்த பெரிய நீலாவணை 02  செல்லத்துரை வீதி பகுதியை சேர்ந்த 2 பெண் பிள்ளைகளின் தந்தையான   54 வயது மதிக்கத்தக்க  பூசாரி சந்திரன்  என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தற்போது  உயிரிழந்தவரின் சடலம் கல்முனை ஆதார  வைத்தியசாலைக்கு பிரேத  பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டு குறித்த சடலம்  மீதான மரண விசாரணைகளை  திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர்  மேற்கொண்டார்.

இதன் போது துணி ஒன்றினை பயன்படுத்தி  தூக்கு மேற்கொண்டு தற்கொலை செய்தமைக்கான அடையாளம் தென்பட்டுள்ளதாகவும் கழுத்து எழும்பு முறிவடைந்து மரணம் சம்பவித்துள்ளதாக மரண விசாரணை அறிக்கையிடப்பட்டு உறவினர்களிடம் சடலம் மாலை   கையளிக்கப்பட்டுள்ளது.

 மேலும் இம் மரணம் குடும்ப பிரச்சினை காரணமாக இடம்பெற்றதா அல்லது வேறு ஏதாவது விடயத்திற்காக  மரணம் சம்பவித்துள்ளதா என   மேலதிக விசாரணைகளை கல்முனை  தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 



மாளிகைக்காடு செய்தியாளர்

மாவடிப்பள்ளி அனைத்து பாலர் பாடசாலைகள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மாவடிப்பள்ளி அல்- மதீனா பாலர் பாடசாலை மற்றும் மாவடிப்பள்ளி ரஹ்மானியா பாலர் பாடசாலை ஆகியவற்றின் இவ்வாண்டுக்கான மாணவர்கள் விடுகை நிகழ்வு மாவடிப்பள்ளி அஸ்ரப் மகா வித்தியாலய கேட்போர் கூட்டத்தில் மாவடிப்பள்ளி அனைத்து பாலர் பாடசாலைகள் சம்மேளன தலைவர் எம்.எச். எம். அஸ்வர் தலைமையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக மாவடிப்பள்ளி கமு/கமு/ அஸ்ரப் மகா வித்தியாலய அதிபர் ஏ.எல். ரஜாப்டீன், கமு/கமு/ அஸ்ரப் மகா வித்தியாலய ஓய்வு பெற்ற எம்.ஐ.எம். சைபுத்தீன், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு முன்னாள் உறுப்பினரும், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளருமான யூ.எல்.என். ஹுதா உமர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் பிரதம பேச்சாளராக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உத்தியோகத்தர் மௌலவி ஏ.பி.எம். ரம்சீன் (காஸிமி) கலந்து கொண்டார்.
பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், அவர்களுக்கான கௌரவிப்பும் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் இளம் சூழலியலாளர் மின்மினி மின்ஹா, மாவடிப்பள்ளி அல்- மதீனா பாலர் பாடசாலை மற்றும் மாவடிப்பள்ளி ரஹ்மானியா பாலர் பாடசாலை ஆகியவற்றின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 \



வி.சுகிர்தகுமார்   



ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் பிரதேசம் நில அளவை செய்யப்படும் பணிகள் நில அளவை திணைக்களத்தின் உத்தியோகத்தர்களினால் ( 19) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இப்பணிகளை கண்காணிப்பதற்காக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் மற்றும் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் பிரதேச செயலக காணிப்பிரிவு உத்தியோகத்தர்கள் அங்கு சென்றிருந்தனர்.
குறித்த பிரதேசம் நீண்டகாலமாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக அத்துமீறிய நில அபகரிப்பு காணி தொடர்பான உரிமைத்தன்மை தொடர்பிலான பிணக்குகள் அரச தனியார் காணிகளை அடையாளப்படுத்தமுடியாமை போன்ற சிக்கல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.
அத்தோடு இக்காணிகள் தொடர்பான நீதிமன்ற வழக்குகளும் கடந்த காலத்தில் இருந்து இடம்பெற்று வருகின்றன.
இதற்கான தீர்வை காணும் வகையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் மாவட்ட செயலாளரின் அனுமதியோடு நிலஅளவை செய்வதற்கான கோரிக்கையினை நில அளவை திணைக்களத்திடம் முன்வைத்திருந்தார்.
இதன் அடிப்படையில் இன்று வருகைதந்த நில அளவை திணைக்கள அதிகாரிகள் இன்று முதல் குறித்த பகுதிகளை நில அளவை செய்யும் பணகளை ஆரம்பித்துள்ளனர்



 பாறுக் ஷிஹான்


கட்டாக்காலி மாடுகள் மற்றும் நாய்களினால்   ஏற்படும் விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து சிரமங்கள் தொடர்பில்  பொதுமக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளான நற்பிட்டிமுனை பெரிய நீலாவணை மருதமுனை பாண்டிருப்பு சாய்ந்தமருது மற்றும் நகரப்பகுதிகளில் அதிகளவான கட்டாக்காலி மாடுகள் நாய்கள் உலா வருகின்றன.

இதன் காரணமாக போக்குவரத்தில் ஈடுபடும் பொதுமக்கள் வாகன சாரதிகள்  பல்வேறு சிரமங்களை எதிர் கொள்வதாக  சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பில் உரிய அதிகாரிகள்  கவனமெடுத்து நடவடிக்கைகளை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.அதிகமான மாடுகள்  நாய்கள் வீதியிலேயே படுத்துறங்குவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு  முன்னுள்ள  வீதியில் நாய்கள் நடமாடுவதோடு பல நாய்கள் பொலிஸ் நிலையம் செல்லும் வாசலில் வீதியில் படுத்துறங்குகின்றன.

மாலை நேரப் பொழுதில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவதனால் இரவுப்பொழுதினை ஒளியூட்டுவதற்காக வீதி விளக்குகள் போதியளவில் இல்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலையும் இங்கு காணப்படுகின்றது.எதிர்பாராத நேரத்தில் வாகனங்களுக்கு குறுக்காக பாயும் போது நாயுடன் வாகனம் மோதிக் கொள்வதை தவிர்ப்பதற்காக திடீரென தடுப்பிடும் பொழுது ஏற்படும் அசௌகரியம் பாரிய போக்குவரத்து மனவுளைச்சலுக்கும்  அச்சத்திற்கும் காரணமாகிப் போகும் சூழல் அப்பகுதியில் இருக்கின்றது.

எனவே சமூகநலன் கருதி மாநகர  சபை  மற்றும் பிராந்திய சுகாதார பரிசோதகர்கள்  உள்ளிட்ட  அனைவரும் ஒன்றிணைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றது.
 



 நூருல் ஹுதா உமர்


சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் பெருமளவு பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்திலுள்ள எகெட் வீட்டுத்திட்ட குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (10) சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக  உத்தியோகத்தர்களின் நிதி பங்களிப்புடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளரும் நலன்புரி அமைப்பின் தலைவருமான எம்.எம். ஆஷிக் தலைமையில் இடம்பெற்றது.

ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக இக்குடும்பங்களின் பாடசாலை செல்லும் பிள்ளைகளின் கற்றல் உபகரணங்கள் உட்பட உடமைகளும் பெருமளவு சேதமடைந்துள்ளன. பாடசாலை செல்லும் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைக்கு உடன் உதவுமுகமாக பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் உள்ளிட்ட நலன்புரி அமைப்பின் உறுப்பினர்கள் மேற்கொண்ட துரித நடவடிக்கையை அடுத்து 100 பிள்ளைகளுக்கு இக்கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முவஃப்பிகா, சமுர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம், நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம். ரம்ஸான், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் ஏ.சீ.முஹம்மட், நிதி உதவியாளர் ஏ.எம்.றியாஸ் உள்ளிட்ட கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நலன்களுக்காக செயற்பட்டு வந்த பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நலன்புரி அமைப்பானது முதற் தடவை பிரதேச செயலாளரும் நலன்புரி அமைப்பின் தலைவருமான எம்.எம். ஆஷிக் அவர்களின் தூர நோக்கு சிந்தனை காரணமாக இந்த உதவித் திட்ட செயல்பாடு வெற்றிகரமாக இடம்பெற்றது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  சாய்ந்தமருது மற்றும் பொலிவேரியன் மக்களுக்கு இரவு பகல் பாராது கடமையாற்றிய பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் உள்ளிட்ட உத்தியோகத்தர்களுக்கு பொதுமக்கள் இதன்போது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 



நூருல் ஹுதா உமர்

அம்பாறை நாவிதன்வெளி பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு நாவிதன்வெளி நளீர் பௌண்டஷனின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினரும், நளீர் பௌண்டஷன் நிறுவுனருமான எம்.ஏ. நளீர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மேலும், அம்பாறை நாவிதன்வெளி பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது. கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினரும், நளீர் பௌண்டஷன் நிறுவுனருமான எம்.ஏ. நளீர் அவர்கள் அஸீஸா பவுண்டேஷன் பணிப்பாளர் சாதீக் ஹசனிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க அந்த அமைப்பு தலா 7500 ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் அடங்கிய பொதிகளை மாணவர்களுக்கு வழங்கியது.

இந்நிகழ்வில் அஸீஸா பவுண்டேஷன் பணிப்பாளர் அஷ்ஷேஹ் சாதீக் ஹசன், நளீர் பௌண்டஷன் நிறுவுனர்  எம்.ஏ. நளீர் உள்ளிட்ட அதிதிகள் பலரும் கலந்து கொண்டு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைத்தனர்.

UMAR LEBBE NOORUL HUTHA UMAR 
BBA (HRM), Dip.In. Journalism, IBSL, ICDL
+94 766735454 / +94 757506564
9 attachments • Scanned by Gmail
 
 

 ( வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மாவட்டத்தில்  அண்மையில் ஏற்பட்ட ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் உடைத்தெறியப்பட்ட பிரதான நீர்க் குழாய்களின் முக்கிய திருத்த வேலைகள் பூர்த்தியாகியுள்ளன.

 கடந்த பன்னிரண்டு நாட்களாக நயினாகாட்டுப் பகுதியில் பிரதான குழாய்கள் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் இரவு பகலாக திருத்தம் செய்யப்பட்டு வந்தது.

இன்று (7) சனிக்கிழமை பகல் குறித்த குழாய்கள் திருத்திப் பொருத்தும் பணி நிறைவு பெற்றிருக்கின்றன.

குறித்த குழாய்கள் எதிர்வரும் வெள்ள அனர்த்தத்தின்போது சேதமடையாமல் இருக்க உரிய தடுப்புஅணை  நடவடிக்கைகள் நேற்று எடுக்கப்பட்டன.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் ஹைதர்அலி, பொறியியல் பிரிவுப் பொறியியலாளர் தாமோதரம் வினாயகமூர்த்தி உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் நேற்றும் களத்தில் நின்று இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டனர்.

கடந்த 12 நாட்களாக தண்ணீர் இன்றி 28 கிலோமீட்டர் நீளமுள்ள பிரதான குழாய்கள் இருந்தன. அவற்றில் முதலாவது தண்ணீர் ஏற்றி பரிசோதிக்கும் சோதனை நிகழ்வும் இடம்பெற்றது.

அனைத்தும் பூர்த்தியாகும் பட்சத்தில் நாளை (8)   ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலும் குடிநீர் விநியோகம் வழமைபோல் இடம்பெறலாமென கூறப்படுகிறது.

கடந்த 12 நாட்களாக நிந்தவூர் காரைதீவு மாளிகைக்காடு  சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் குழாய் நீர் விநியோகம் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

குறிப்பாக காரைதீவுக் கிராமத்திற்கு குழாய் நீர் விநியோகம் முற்றாக தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




( வி.ரி.சகாதேவராஜா)
 அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட 
காரைதீவு பிரதேசத்திற்கு கல்முனை மாநகர சபையினர்  வவுசர் மூலம் குடிநீரை இன்று வழங்கினர்.

இது எல்லை தாண்டிய மனிதாபிமான உதவியாக கருதப்படுகிறது. கல்முனை மாநகர சபை எல்லைக்குள் காரைதீவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சாரதியே உதவியாளராகவும் நின்று சேவையாற்றி வருகிறார்.

கடந்த 12  நாட்களாக ஆலயங்கள் பிரதேச சபை பொது அமைப்புகள் இராணுவம் தனியார் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வழங்கி வந்தன.

 .



(சுகிர்தகுமார்)   


 அம்பாரை மாவட்டத்திலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான  மனிதாபிமான நிவாரணப்பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.  இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச வெளிநாட்டு வாழ் உறவுகளுக்கு உதவுவோம் எனும் அரசியல் சார்பற்ற அமைப்பொன்று 4000 ஆயிரம் பெறுமதியான 105 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்தது.
உறவுகளுக்கு உதவுவோம் அமைப்பின் ஆலையடிவேம்பு பிரதேச செயற்பாட்டாளர்களது ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற உலர் உணவுப்பொதி வழங்கும் நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் கலந்து கொண்டு பொதிகளை வழங்கி வைத்தார்.
இதன்போது பெருநாவலர் வித்தியாலய அதிபர் மணிவண்ணன் பிரதேச செயலக கிராம நிருவாக உத்தியோகத்தர் பரிமளவாணி சில்வெஸ்டர் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் வசந்தன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டதுடன் பொதியிடல் மற்றும் நிவாரணம் வழங்கும் பணியில் அக்கரைப்பற்று மருது விளையாட்டுக்கழகம் மற்றும் ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டுக்கழக உறுப்பினர்களும் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 



பாறுக் ஷிஹான்

 
மருதமுனை 65 மீட்டர் சுனாமி மீள்குடியேற்றக் கிராமத்தில் கல்முனை மாநகர சபையினால் அண்மையில் வடிகான் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த மழை காலங்களில் வெள்ளத்தில் மூழ்கித் தத்தளிக்கும் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை பிரிவிற்குட்பட்ட  மருதமுனை 65 மீட்டர் கிராமத்தின் நீண்ட காலப் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் முகமாக மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் வடிகான் நிர்மாணப் பணிகளை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ்  கண்காணிப்பு விஜயம் செய்து பார்வையிட்டுள்ளார்.

 வெள்ள அனர்த்த பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு  இங்கு கல்முனை மாநகர சபையினால் 05 முக்கிய இடங்களில் வடிகான்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் ஊடாக இப்பிரதேசத்தில் உள்ள அனைத்து  வடிகான்களும் இணைக்கப்பட்டு வடிகான் கட்டமைப்பு முழுமைப்படுத்தப்படவுள்ளது.

இப்பிரதேச மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வருகின்ற இப்பிரச்சினைக்கான இவ்வேலைத் திட்டத்தை துரிதமாக நிறைவு செய்யுமாறு மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ்   கண்காணிப்பு விஜயத்தின் போது உரிய தரப்பினரை  அறிவுறுத்தியுள்ளார்.

இதன் போது கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜெளசி, கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ் வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம், தொழில் நுட்ப உத்தியோகத்தர் எம். சுகுமார் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றிருந்தனர்.

மேலும்  கல்முனை மாநகர சபை துரிதமாக  இப்பிரச்சினைக்கு  தீர்வினைப் பெற்றுத் தந்திருப்பதையிட்டு இப்பகுதி மக்களும் நலன் விரும்பிகளும் மாநகர ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.




 பாறுக் ஷிஹான்


வெள்ளப் பாதிப்பிற்குள்ளான   துரைவந்தியமேடு   மக்களுக்கு   உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

அண்மையில் பெய்த அடை மழை காரணமாக வெள்ளப் பாதிப்பிற்குள்ளான   துரைவந்தியமேடு  மக்களுக்கு  குளியாப்பிட்டிய நெவகட செல்கிரி விகாரஸ்தான கலன மித்துரு சங்கத்தின் ஏற்பாட்டில்  உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வு   கல்முனை பிராந்திய  உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்  ரீ. எச். டி .எம். எல். புத்திகவின்   வழிகாட்டலில் கல்முனை பொலிஸ் நிலையத்தின் சமூக பொலிஸ் பிரிவின் பொறுப்பாளர் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ எல்.ஏ.வாஹிட்  நெறிப்படுத்தலில்  சமூக சேவை உத்தியோகத்தர், கிராம சேவகர்   கலந்து கொண்டனர்.


மழை வெள்ள நீரினால் பாதிக்கப்பட்ட துரைவந்தியமேடு பகுதியில்    வசிக்கும் சுமார்   65  குடும்பங்களுக்கான உலர் உணவு நிவாரண பொதிகளே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.அத்துடன் வெள்ள நீர்   காரணமாக தமது    வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கும் பெறுமதியான  உணவுப் பொருட்களை  அவ்வமைப்பு வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த உணவு பொதியில் அரிசி,பருப்பு,சீனி,பால் மா ,பிஸ்கட் ,டின் மீன், நெத்தலி,உப்பு,தேயிலை,மிளகாய்த்தூள் இஎன்பன உள்ளடங்கியுள்ளன.

--

 



இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையிலான வெள்ள அனர்த்தினால் நாட்டில் பல பகுதிகளில் வெள்ள அனர்த்தினால் மூழ்கியதுடன் மக்களின் வாழ்வாதாரமும் பாத்க்கப்பட்டது....



அவர்களுக்கான வெள்ள நிவாரண உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றது


அதற்கு அமைவாக லண்டன் என்பீல்ட் ஸ்ரீ நாகபூசனி அம்பாள் ஆலயத்தின் நிதி பங்களிப்புடன்  இலங்கையில் உள்ள நீம் நிறுவனத்தின் அமுலாக்கத்தின் ஊடாக அவசகால வெள்ள நிவாரணப்பணியானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது... இவ் அமைப்பினரால்  இலங்கை கடந்த காலங்களில் பல உதவிகள் முன்னெடுவருகின்றது குறிப்பிடத்தக்கது


அந்த வகையில் இந்த வருடம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட எமது அம்பாறை மாவட்ட மக்களுக்கு நிம் நிறுவனத்தில் எமது மாவட்ட இணைப்பாளர் ஆசிரியர் திரு.லக்ஸ்மன் அவர்களின் ஊடாக 3900/- ரூபாய் பெறுமதியான 100நிவாரணப்பொதிகள் பாதிக்கப்பட்ட திருக்கோவில் பிரதேச மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது 


இவ் நிவாரணப்பணியில் ஆசிரியர் T. தனோஜன் மற்றும் ஆசிரியர் லெனின் சியுஸ் , திருநாவுகரசர் நாயநார் குருகுலத்தின் இணைப்பாளர்.திரு.ஞ.இராசரெட்ணம் அவர்களும் இளம் சமுக ஊடகவியலாளர் ஜே.கே.யதுர்ஷன்  ஆகியோரும் இவ் அவசர கால வெள்ள நிவாரப்பணியில் கலந்து கொண்டனர்...


ஜே.கே.யதுர்ஷன்

 



பாறுக் ஷிஹான்


அடை மழைகாரணமாக ஏற்பட்ட வெள்ள நீரை வெளியேற்றும் முயற்சியில் கடலை அண்டிய தோணாக்கள் தோண்டிய பகுதிகளில் ஆற்றுவாழைகள் எனப்படும் ஒரு வகையான தாவரங்கள் நிரம்பிக் காணப்படுவதனால் மீனவர்கள் பெருஞ் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
 
கடந்த ஒரு வார காலமாக வடக்கு-கிழக்கு ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தம் காரணமாக திறந்து விடப்பட்ட குளங்கள் மற்றும்  ஆறுகளில் இருந்து இவ்வாறான தாவரங்கள் கடலுடன் சங்கமித்திருப்பதாக மீனவர்கள் குறிப்பிட்டனர்.

இவ்வாறு கடற்கரையில்  கரையொதுங்கிய ஆற்றுவாழை மற்றும் ஆகாய தாமரை போன்ற சல்லு தாவரங்களால் கரைவலை மற்றும் ஆழ்கடல் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர கடற்கரை பகுதியில் இவ்வாறான  தாவரங்கள் அதிகமாக காணப்படுவதனால்   மீன்பிடித் தொழிலினை மேற்கொள்ள மீனவர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அதுமாத்திரமன்றி இத்தாவரங்களில் நச்சுப் பாம்புகள் இதர உயிரை கொல்லும் பாம்புகளும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடயம் குறித்த உரிய அதிகாரிகள் இப்பிரச்சினையில் கவனமின்றி செயற்படுவதாக  மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும்  கரையோதுங்கி காணப்படுகின்றஇத்தாவரங்களில்  ஏரிகள் மற்றும் குளங்களில் காணப்படுகின்ற  பாம்பு போன்ற விஷ ஜந்துக்களும் மக்கள் வாழ்விடங்களை நோக்கி வருகின்ற ஒரு துர்பாக்கிய நிலையும் காணப்படுகின்றது.

 மாலை வேளையில் கடற்கரையை நோக்கி தமது ஓய்வு நேரங்களை கழிக்க கூடிய சிறுவர்கள் மற்றும் பெண்கள்  உள்ளிட்ட மக்கள் வருகின்ற போது இவ்வாறான ஜந்துக்களால் உயிராபத்துக்கள் ஏற்படுகின்ற நிலையும் காணப்படுவதனால் கரையோரப் பாதுகாப்பு மாநகர சபை பிரதேச செயலகங்கள் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் பொதுமக்கள் ஆகியோர் இவற்றை கவனத்தில் கொண்டு கரையோர பிரதேசங்களை சுத்தம் செய்து தமது தொழிலை மேற்கொள்ளவும் பாதுகாப்பானது ஒரு சூழலை ஏற்படுத்தித் தருமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 



வி.சுகிர்தகுமார்        


 தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் கடற்றொழில் பிரதி அமைச்சருமான ரி.ஜி.ரத்னகமகே திருக்கோவில் பிரதேசத்திற்கு  நேற்று (01) விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
கள விஜயத்தின்போது விநாயகபுரம் மற்றும் திருக்கோவில் பிரதேசங்களுக்கு சென்ற அவர் மீனவர்களை சந்தித்து சிநேகபூர்வமான கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டார்.
இதன்போது வெள்ள அனர்த்தத்தில் சேதமடைந்த மீனவர்கள் இயந்திர படகுகளின் சேதம் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.
அத்தோடு மீனவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் அறிந்து கொண்டார்.
இதன் பின்னராக மீனவர்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வினை அரசாங்கத்தினூடாக பெற்றுக்கொடுப்பதாக உறுதுpயளித்தார்.
இதேநேரம் விநாயகபுரம் மீனவர்களினால் மகஜர் ஒன்றும் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்விஜயத்தின்போது தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட இணைப்பாளர்கள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



 ( வி.ரி.சகாதேவராஜா)


அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால்  உடைக்கப்பட்ட பாரிய நீர்க்குழாய் இருக்கும் இடத்திற்கு இன்று (29) வெள்ளிக்கிழமை பகல் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொறியியலாளர்கள் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் அங்கு போய்ச் சேர்ந்தார்கள்.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய பொறியியல் பிரிவுப் பொறியியலாளர் தாமோதரம் வினாயகமூர்த்தி , இயக்கமும் பராமரிப்பும் பிரிவிற்கான  பொறியியலாளர்  பாக்கியராஜா மயூரதன் மற்றும் 
காரைதீவு பிரதேச காரியாலய  பொறுப்பதிகாரி பொறியியலாளர் விஜயரெத்தினம் விஜயசாந்தன் ஆகியோர் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து நிலைமையை ஆராய்ந்தனர். இன்று காலநிலை ஓரளவு சீராக இருந்ததால் அங்கு செல்ல முடிந்தது.

உடனடியாக திருத்த வேலைகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளையிட்டு அவர்கள் ஆராய்ந்தனர்.

முதற்கட்டமாக திருத்த வேலைக்கான உபகரணங்கள் மற்றும் தொழிலாளர்களை கொண்டு வருவதற்கான வாகனப் பாதை தற்போது செப்பனிடப்பட்டுவருகிறது.

பெரும்பாலும் நாளை (30) சனிக்கிழமை மாலை திருத்த வேலைகள் பூர்த்தியடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 அம்பாறையில் இருந்து நிந்தவூர் பிரதான நீர்த்தாங்கிக்கு நீரை எடுத்து வருகின்ற பாரிய குழாய்  உடைந்திருப்பதன் காரணமாக கடந்த மூன்று நாட்களாக கரையோரத்தில் குறிப்பாக  நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களுக்கான குழாய்நீர் விநியோகம் முற்றாக தடைப்பட்டிருந்தது. மக்கள் பலத்த அசௌகரியத்திற்குள்ளாகியுள்ளனர்.

450 மில்லி மீட்டர் விட்டம் உள்ள சுமார் 20 மீற்றர் நீளமான இப் பாரிய குழாய் பெரு வெள்ளத்தில் அள்ளுண்டதனால் இத்திடீர்த் தடை ஏற்பட்டது தெரிந்ததே.

சம்மாந்துறை பிரதேசத்தின் 
நயினாகாட்டை அடுத்துள்ள சுரிப்போடு முந்தல் என்ற பிரதேசத்தில் உள்ள பாரிய குழாயில் இவ் வெடிப்பு ஏற்பட்டிருந்தது.

இன்று மழையில்லாத காரணத்தினால் அங்கு இத் திருத்த வேலைகள் இடம்பெற ஆரம்பித்தன.

 


வி.சுகிர்தகுமார் 



 அம்பாரை மாவட்டத்தின் சீரற்ற காலநிலை தொடரும் நிலையில் பல்வேறு பிரதேசங்களிலும் பெய்துவரும் பலத்த மழை காரணமாக தாழ் நில பிரதேசங்களில் உள்ள சில வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது.
சில நாட்கள் முன் ஆரம்பித்த பலத்த மழை இன்றும் தொடரும் நிலையில் மீண்டும் மழை பெய்யவதற்கான சாத்தியகூறுகள் அதிகமாக காணப்படுகின்றது.
ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று. அட்டாளைச்சேனை, திருக்கோவில், பொத்தவில், கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களில் இவ்வாறு மழை பெய்து வருகின்றது.
இதனால் மக்களது போக்குவரத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காட்டுப்பாலத்தின் கீழாக சல்வீனியா தாவரம் சூழ்ந்துள்ள நிலையில் நீர் வழிந்தோடுவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
சல்வீனியா சூழ்ந்துள்ள பகுதியில் கால்நடைகள் சிக்குண்டு உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவி;ற்குட்பட்ட வெள்ளநீர் வழிந்தோடும் பிரதான கழிமுகப்பிரதேசமான சின்னமுகத்துவாரத்தின் ஊடாக வெள்ள நீரை வழிந்தோடி வருகின்றது.
இதனால் வெள்ள அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு மக்களுக்கு சில தனவந்தர்கள் முன்வந்து சமைத்த உணவை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடலுக்கு செல்வதை மீனவர்கள் தவிர்த்துள்ள நிலையில் நன்னீர் மீன்பிடியில்; கிராமத்திற்குள்ளேயே மீனவர்கள் முன்னெடுத்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
இதேநேரம் குறிப்பிடத்தக்களவு இடப்பெயர்வுகள் இடம்பெறாதுபோதும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட மக்களின் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ளதுடன் பாதிப்பு தொடர்பில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் உதவியோடு தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

 


வி.சுகிர்தகுமார்   

 பலத்த அடைமழை மற்றும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் அம்பாரை மாவட்டத்தில் க.பொ.த. உயர் தரப்பரீட்சை இன்று(25) ஆரம்பமானதுடன் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களும் மிகவும் ஆர்வத்துடன் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்ததை காணமுடிந்தது.
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பரீட்சை நிலையங்களில் பரீட்சை ஆரம்பித்ததுடன் அக்கரைப்பற்று இராமகிருஸ்ணா தேசிய பாடசாலையிலும் பரீட்சை நடைபெற்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை மற்றும் கிழக்கு மாகாணத்தில் பெய்துவரும் அடை மழை வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் தாக்கம் செலுத்தியபோதும் மாணவர்கள் இறைவழிபாட்டின் பின்னர் ஆர்வத்துடன் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தயாராகி வருகை தந்தைதையும் அவதானிக்க முடிந்தது.
ஆயினும் பெற்றோர்கள் பலர் பாடசாலைக்கு முன்பாக கூடியிருந்ததுடன் பரீட்சைக்கு சமூகமளிப்பதில் மாணவர்கள் பெரும் இடையூறுகளை எதிர்கொண்டதாக கவலையுடன் சிலர் உரையாடியதையும் அவதானிக்க முடிந்தது.
 வலயக்கல்விப்பணிப்பாளர் ஆர்.உதயகுமார்  வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின்  கீழ் பரீட்சை நிலையங்களும் ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதுடன் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் கல்வித்திணைக்களம் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.