Showing posts with label Culture. Show all posts

 

(சுகிர்தகுமார)


 அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் வருடாந்த இறுதி ஒன்று கூடல் நேற்றிரவு (22) மன்றத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்து இளைஞர் மன்றத்தின் தலைவரும் விபுலானந்தா சிறுவர் இல்லத்தின் ஸ்தாபகருமான த.கயிலாயபிள்ளை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் அம்பாரை மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள் உதவிப்பணிப்பாளர் ராஜ்குமார் உதவும் கரங்கள் அமைப்பின் உறுப்பினர் வசந்தகுமார் உள்ளிட்ட மன்றத்தின் முக்கியஸ்தர்கள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்து இளைஞர் மன்றத்தின் கடந்தகால செயற்பாடுகள் மற்றும் எதிர்காலதிட்டங்கள் தொடர்பில் தலைவர் மற்றும் உறுப்பினர்களால் தெளிவுபடுத்தப்பட்டது.
இதேநேரம் இந்து இளைஞர் மன்றத்தின் எதிர்கால செயற்பாடுகளுக்கு பலரும் தமது உதவியினை வழங்குவதாக உறுதி அளித்தனர்.
ஒன்று கூடலை சிறப்பிக்கும் வகையில் வளர்ந்துவரும் மண்ணின் இளைய பாடகர்களும் இணைந்து பாடல்களை பாடி சபையினை உற்சாகப்படுத்தினர்.
இறுதியில் வளர்ந்துவரும் பாடர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.



 ( வி.ரி. சகாதேவராஜா)

 மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் வருடாந்த  ஒளி விழா  பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னத்தின் தலைமை மற்றும் வழிக்காட்டுதலின் கீழ் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்  இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

அதிதிகளினால் மங்கல விளக்கேற்றப்பட்டதை  தொடர்ந்து குறுமண்வெளி மெதடிஸ்த திருச்சபையின் சகோ.இராமையா ஜஸ்டின் பிரபாகரனின்  ஆசிச்செய்தியுடன் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து அலுவலக உத்தியோகத்தர்களினால் கரோல் கீதம், நாடகம், நடனம் போன்ற பல கலைநிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டதுடன் , நத்தார் தாத்தா வருகை மற்றும்  அலுவலக உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகௌரி தரணிதரன், நிருவாக உத்தியோகத்தர்  வே. தவேந்திரன், அலுவலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் உட்பட அலுவலக  உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 



மாளிகைக்காடு செய்தியாளர்


சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றதற்காக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.எம்.ஏ. ஹிஸ்புல்லாஹ் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு (14) சனிக்கிழமை காத்தான்குடி பள்ளிவாசல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ.எம்.எம். தௌபீக் தலைமையில் சம்மேளனத்தின் மாநாட்டு மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமைக்கு பொன்னாடை போற்றி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இதன்போது இடம்பெற்றது. இந் நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



 (பாறுக் ஷிஹான்)


கார்த்திகை தீபத் திருவிழாவை  இந்துக்கள் நாடளாவிய ரீதியில்  கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

சனிக்கிழமை(14)   இதையொட்டி இரவு  பெண்கள் ஆண்கள் சிறுவர்கள் என  வீடுகள்   தெருக்கள்  மற்றும் கோவில்களில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்ததை அவதானிக்க முடிந்தது.

சிறுவர் சிறுமியர் தத்தமது வீடுகளுக்கு முன்னால்  தீபம் ஏற்றி ஆனந்தமடைந்தனர்.

மேலும் அம்பாறை மாவட்டத்தில்  காரைதீவு, சம்மாந்துறை,பெரியநீலாவணை ,கல்முனை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை ,சேனைக்குடியிருப்பு ,வீரமுனை ,நாவிதன்வெளி ,அன்னமலை ,மத்தியமுகாம் ,அக்கரைப்பற்று ,திருக்கோவில் ,கோளாவில்  ,ஆலையடிவேம்பு ,பகுதிகளில் உள்ள  முருகன் ஆலயங்களில் குமாராலய தீபம்   நடைபெற்ற நிலையில் ஏனைய தெய்வ ஆலயங்களில்   சொர்க்கப்பானை எரித்து கார்த்திகைத் தீபத் திருவிழா சிறப்பாக  இடம்பெற்றன.

 


வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ  முருகன் ஆலயத்தில் நேற்று இரவு திருக்கார்த்திகை தீபம் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் இடம் பெற்ற போது ...


 



புத்தளம் மண்ணுக்கு பெருமை தேடித்தந்தந்துள்ள வீரப்  பெண்மனி அப்துல் ராசிக் ஃபரீத் ஹனா மஸ்யாத் சாரா" 


ஆசிய திறந்த டேக்வாண்டோ போட்டி 2024 - வியட்நாம்


29 நாடுகளுக்கு இடையில் நடைப்பெற்ற போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி புத்தளத்திலிருந்து சென்று ஆர்.எஃப்.எச்.எம். சாரா வெள்ளிப் பதக்கம் மற்றும் வெண்கலப் பதக்கத்தை வென்று எமக்கு நாட்டிற்கும் எம் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.


Aarah Fareedh

 



மாளிகைக்காடு செய்தியாளர்


மாளிகைக்காடு வாழ் பொதுமக்கள் சார்பில் மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில் கடந்த 2024 நவம்பர் 26 ம் திகதி முதல் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் மாவடிப்பள்ளி காரைதீவு பிரதேச வெள்ளத்தில் சிக்கிய உயிர்களை காப்பாற்ற மீட்பு பணியில் ஈடுபட்டவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும், விசேட துஆ பிராத்தனையும் ஜும்ஆ பள்ளிவாசல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமரின் நெறிப்படுத்தலில் பதில் தலைவர் ஏ.எம். ஜாஹீரின் தலைமையில் இன்று (06) ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து இடம்பெற்றது.
தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் மாவடிப்பள்ளி காரைதீவு பிரதேச வெள்ளத்தில் சிக்கிய உயிர்களை காப்பாற்ற மீட்பு பணியில் ஈடுபட்டு நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி ஐந்து மாணவர்களை உயிருடனும், நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி 06 மாணவர்கள் அடங்களாக 08 பேரின் ஜனாஸாக்களை மீட்கவும் இயற்கை சீற்றங்கள் உட்பட பல்வேறு பிரச்சினைகளை சகித்துக் கொண்டு களப்பணி செய்த மட்டுப்படுத்தப்பட்ட கல்முனை ஆழ்கடல் சுழியோடிகள் நீரியல் வள மீனவர் கூட்டுறவு சங்கம், மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு, சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை, காரைதீவு இராவணா அமைப்பு போன்றன இதன்போது கௌரவிக்கப்பட்டது.
இன்று அனர்த்தம் மற்றும் சமூக சேவைகள் தொடர்பில் ஜும்ஆ உரை நிகழ்த்தியதுடன் ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து விசேட துஆ பிரார்த்தனையை இப்பள்ளிவாசலின் தலைமை இமாம் மௌலவி ஏ.எல்.எம். மின்ஹாஜ் (உஸ்மானி) நிகழ்த்தினார். இந்நிகழ்வில் கிராம நிலதாரி ஏ.எம். நஜீம், நம்பிக்கையளர் சபை ஆலோசகர் ஐ. இஸ்திகார், பொருளாளர் எம்.எப்.எம். றிபாஸ் உள்ளடங்களாக நம்பிக்கையளர் சபையினர், ஜமாஅத்தார் என பலரும் கலந்து கொண்டனர்.

 



பாறுக் ஷிஹான்


அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர மக்களால் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்பட்டு வரும் ஷாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக  கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்காவில் 203 வது கொடியேற்று விழா இன்று (2) திங்கட்கிழமை ஆரம்பமானது.

உலமாக்கள், பக்கீர் ஜமாஅத்தினர், நிர்வாகிகள், ஊர் மக்கள் புடைசூழ கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இருந்து புனித கொடியானது  தீன் கலிமா முழக்கத்துடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கடற்கரைப் பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்கா மினாராக்களில் ஏற்றி வைக்கப்பட்டது.

 கொடி ஏற்றிய தினமான இன்றில்  இருந்து தொடர்ந்து 12 நாட்களுக்கும் பாதுஷா ஷாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) அன்னவர்களின் மீதான புனித மௌலித் ஷரீப் பாராயணம், பக்கீர் ஜமாஅத்தினரின் புனித ரிபாஈ ராதிப், உலமாப் பெருமக்களின் சன்மார்க்கச் சொற்பொழிவு என்பன இடம்பெறவுள்ளதோடு கொடியிறக்கு தினமான எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன் அன்றைய தினம் மாபெரும் கந்தூரி அன்னதானம் வழங்கி வைக்கப்படவுள்ளது.

இந்  நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், அரச உயர் அதிகாரிகள், உலமாக்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 



மாளிகைக்காடு செய்தியாளர்



மாவடிப்பள்ளி பாலத்தில் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்த மத்ரஸா மாணவர்களுக்கு சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் விசேட துஆப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.

இன்று (29) வெள்ளிக்கிழமை குத்பா மற்றும் ஜும்ஆத் தொழுகையை தொடர்ந்து மௌலவி எம்.எம். முபாறக்கினால் இந்த துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.


சீரற்ற வானிலை காரணமாக கடந்த 26ஆம் தேதி திங்களன்று நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரிக்கு விடுமுறை வழங்கப்பட்டதை அடுத்து சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த மேற்படி கல்லூரி மாணவர்கள் சிலர்
மாவடிப்பள்ளி பாலத்தின் ஊடாக பயணிப்பதற்காக உழவு இயந்திரமொன்றில் ஏறிச் சென்ற நிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக அது கவிழ்ந்து விபத்துக்துக்குள்ளானது.

இதன்போது அதில் பயணித்த அனைவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சில மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்ட அதேவேளை பலரும் காணாமல் போயிருந்தனர். அவர்களில் இதுவரை 5 மாணவர்கள் உட்பட 7 பேரின் ஜனாஸாக்கள் மீட்கப்பட்டது. ஏனையவர்களை மீட்கும் பணி தொடர்கிறது. இதுபோன்ற அம்பாறை மாவட்ட பல்வேறு ஜும்மா பள்ளிவாசல்களிலும் குத்பா மற்றும் ஜும்ஆத் தொழுகையை தொடர்ந்து மத்ரஸா மாணவர்களுக்கு விசேட துஆப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.

 



பாறுக் ஷிஹான்


கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் வருடாந்த ஒளி விழா கல்லூரி அதிபர் அருட் சகோதரர் அதிபர் அருட். சகோதரர் S.E.றெஜினோல்ட் FSC தலைமையில்   வெள்ளிக்கிழமை(22) சிறப்பாக நடைபெற்றது. கார்மேல் பற்றிமா கொன்மேன்ற் பெண்கள் கல்லூரியில் இருந்து பாரிய கண்கவர் கலாசார அம்சங்கள் அடங்கிய ஊர்வலம் ஆரம்பமாகியது.

கல்லூரியின் 125ஆவது ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் இதுவரை வாணி விழா மற்றும்  மீலாதுன் நபி விழா மிகச் சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் அண்மையில் நடைபெற்றதை பலரும் பாராட்டியிருந்தனர்.

அந்த வகையில்   இடம் பெற்ற ஒளி விழாவிலும் அங்கு கண் கவர் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் வடக்கத்துக்குரிய அருட்தந்தை ஏ.அகஸ்டின் நவரெத்தினம் அடிகளார் கலந்து சிறப்பித்தார் .மேலும் பல மத பெரியார்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர் .

குறித்த பண்பாடு பாரம்பரியம் மிக்க பெரும் கலைத்துவ ஊர்வலம் நேரடியாக பாத்திமா கல்லூரியை அடைந்த பொழுது அங்கு பாரம்பரிய சம்பிரதாய முறைப்படி கலை நிகழ்ச்சிகள் மேடை ஏறின.பாடசாலையின் மூன்றாம் தவணை இறுதி நாள் என்ற காரணத்தினால் நிகழ்ச்சிகளில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். அவை மேலும் களை கட்டி இருந்தன.

 


( வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் வருடாந்த மீலாதுன் நபி விழா கல்லூரி அதிபர் அருட் சகோதரர் அதிபர் அருட். சகோதரர் S.E.றெஜினோல்ட் FSC தலைமையில் நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரியின் 125ஆவது ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற மீலாதுன் நபி விழாவானது மிகச் சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் நடைபெற்றதை பலரும் பாராட்டினர்.

பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசாரத்துறை தலைவர் பேராசிரியர் எம் .எம். பாசில் கலந்து சிறப்பித்தார் .
 கௌரவ அதிதியாக கல்முனை வலயக்கல்விப் பணிமனையின் கணக்காளர் வை.ஹபீபுள்ளா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அதேவேளை பிரதான பேச்சாளராக ஏறாவூர் ஐம்மியத்துல் உம்முல் அறபிக் கல்லூரி அதிபர் ஏஎச்எம்.சாதிக் மௌலானா கலந்து சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.
மேலும் பல அதிதிகள் கலந்து கொண்டார்கள்.
 மாணவர்களின் கண் கவர் இஸ்லாமிய கலை நிகழ்ச்சிகள் களை கட்டின.

 பிரதிஅதிபர்கள், உதவிஅதிபர்கள் , பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள் , கல்வி சாரா ஊழியர்கள், மாணவத்தலைவர்கள், மாணவர்கள் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள்,பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகள் கலந்து கொண்டனர்.

 


 'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம்.


தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது.

 வியாழக்கிழமை என்பது மங்கலகாரகனான குரு பகவானுக்குரிய நாள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அது தவிர இந்த ஆண்டு தீபாவளிக்கு வேறு சில சிறப்புக்களும் உள்ளன. வழக்கமாக பெரும்பாலான ஆண்டுகள் தீபாவளி திருநாள், அமாவாசையுடன் தான் இணைந்து வரும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி மாலை 04.29 மணிக்கு தான் அமாவாசை திதி துவங்குகிறது.

 மிக அரிதாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கான சுபமுகூர்த்த நாளில் அமைந்துள்ளது. அதிலும் அன்று நாள் முழுவதும் சித்திரை நட்சத்திரம் உள்ளது மற்றொரு தனிச்சிறப்பு.

சித்திரை நட்சத்திரம் என்பது சக்கரத்தாழ்வார், சித்ரகுப்தர், விஸ்வகர்மா ஆகியோர் அவதரித்த நட்சத்திரமாக சொல்லப்படுகிறது. இவர்கள் மூவருமே வாழ்க்கையில் வளர்ச்சி, கலைகளில் தேர்ச்சி, பலவிதமான செல்வ நலன்களையும் வழங்கக் கூடியவர்கள். ஞானத்தை அருளும் குரு பகவானுக்குரிய வியாழக்கிழமையில், சித்திரை நட்சத்திரமும் இணைந்த நாளில் இந்த ஆண்டு தீபாவளி வருகிறது. அதிலும் நல்ல விஷயங்களை துவங்குவதற்கு ஏற்ற மங்கலகரமான சுபமுகூர்த்த நாளுடன் வருகிறது. 

அதனால் தீபாவளி அன்று மங்கல பொருட்கள் வாங்கலாமா? எப்போது இருந்து அமாவாசை விரதம் கடைபிடிக்க வேண்டும் என்ற குழப்பம் இந்த ஆண்டு கிடையாது. இந்த ஆண்டு தீபாவளி திருநாளான அக்டோபர் 31 ம் தேதியன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளதால் தாராளமாக புதிய விஷயங்களை துவங்கலாம்.

அறியாமை என்னும் இருள் நீக்கி வெற்றியையும் ஒளிமயமான சிந்தனையையும் இந்த தீபத் திருநாள் பெற்றுத் தர வேண்டும் 
நரகாசுரனை வதைத்த தினத்தை வீடுகளில் தீபஒளி ஏற்றி மனஇருள் நீக்கி தீபாவளி பண்டிகையாக கொண்டாடும் இத்தருணத்தில் தமிழர்களது பாரம்பரியமான பண்பாடுகளால் நம் திறமைகளை வளர்த்து நாட்டை ஒளி நிறைந்ததாக மாற்ற வேண்டும் என்றும் நல்ல  மழை பொழிந்து வேளாண்மை செழிப்பாக வேண்டும்.

​தீபாவளி அனைவர் வாழ்விலும் ஒளி ஏற்றட்டும்.


வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா 
காரைதீவு

 



ஆலையடிவேம்பு நிருபர்   வி.சுகிர்தகுமார்    


 திருக்கோவில் சமூக தரிசன ஒன்றியம் மற்றும் சக்தி சனசமூக நிலையம் ஆகிய அமைப்புக்களின் 10 வருட நிறைவை முன்னிட்டதான வாசிப்பு வார நிகழ்வும் ஊடகவியலாளர் உள்ளிட்டவர்களின் கௌரவிப்பு நிகழ்வும் திருக்கோவில் காயத்திரி கிராமத்தில் நேற்று (27) இடம்பெற்றது.
உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே எனும் தொனிப்பொருளுக்கமைய சக்தி சனசமூக நிலைய தலைவர் பி.நந்தபாலு தலைமையில் அன்னை சிறுவர் நூலக மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ஆன்மீக அதிதியாக சிவஸ்ரீ ஆறுமுக கிருபாகர குருக்கள் கலந்து கொண்டதுடன் பிரதம அதிதியாக திருக்கோவில் பிரதேச சபை செயலாளர் வீ.ஜெயந்தி சிறப்பு அதிதிகளாக திருநாவுகரசர் நாயனார் குருகுலத்தின் பணிப்பாளர் இராசரெட்ணம் தம்பிலுவில் தேசிய பாடசாலையின் ஓய்வு நிலை அதிபரும் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வண்ணகருமான திரு.வ.ஜயந்தன் ஊடகவியலாளர்களான எஸ்.கார்த்திகேசு மற்றும் வி.சுகிர்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது ஊடகத்துறை மூலம் வாசிப்பினை ஊக்கப்படுத்தும் வகையில் ஊடகவியலாளர்களான எஸ்.கார்த்திகேசு மற்றும் வி.சுகிர்தகுமார் ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம்  வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன்  திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள 8 நூலகங்களின் நூலக உதவியாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் வாசிப்பின் முக்கியத்துவம் தொடர்பான உரைகளும் இடம்பெற்றது.


 

50 ஆயிரம் கிலோமீட்டர் பயணம், 500க்கும் அதிகமான அவசர சேவை, மரணித்த ஜனாஸாக்கள் வீடுகளுக்கு கொண்டு செல்லபட்டதும், வீடுகளில் இருந்து மையவாடிக்கும், நோயாளிகளை வீட்டில் இருந்து வைத்தியசாலைக்கும், வைத்திய சாலையில் இருந்து வீடுகளுக்கும், என இன்றுடன் ஒரு வருட சேவை பூர்த்தியினை செய்து முடித்திருக்கின்றது.
"அல்ஹம்துலில்லாஹ்"
சகலரது ஒத்துழைப்புக்கும் நன்றிகள்
இதன் ஸ்தாபகர் எம்எம்எம்.றியாட் ஹாஜியாருக்கும் அதன் பணிக்குழுவினருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக
என்ரீ.மசூர்

 


வி.சுகிர்தகுமார்   



இந்து சமய கலாசார திணைக்களத்தின் அனுசரணையுடன் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சுவாமி விபுலானந்தரின் துறவற நூற்றாண்டு விழாவும் பாடசாலை மாணவர்களுக்கான பஞ்சபுராண சுடர் விருது வழங்கும் நிகழ்வும் (19) அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்ற கட்டடத்தில் இடம்பெற்றது.
இந்து இளைஞர் மன்றத்தின் தலைவரும் இறைபணிச்செம்மலுமான த.கயிலாயபிள்ளையின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஜெகராஜன் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப்பணிப்பாளர் கீ.கமலமோகனதாசன் அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி உள்ளிட்ட சமய சமூக தலைவர்கள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்வலமும் சுவாமி விபுலானந்தரின் திருவுருவப்படத்தை தாங்கிய பவனியும் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையின் முன்பாக இருந்து ஆரம்பமானது.
சுவாமி விபுலானந்தரின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் நடன கலை நிகழ்வுகளுடன ஊர்வலம் ஆரம்பமாகி இந்து இளைஞர் மன்ற மண்டபத்தை வந்தடைந்தது.
அங்கு சுவாமி விபுலானந்தரின் திருவுருவப்படம் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டு சுவாமியின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு பூஜைகளும் சிவஸ்ரீ புண்ணியகிருஸ்ண குமாரக்குருக்களினால் நடாத்தப்பட்டது.
இதன் பின்னராக மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பஞ்சபுராணத்தை பண்ணுடன் ஓதி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பஞ்சபுராணசுடர் விருதும் பொற்கிழியும் வழங்கப்பட்டதுடன் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்வில் விபுலானந்தரின் சிறப்பு பற்றி மாணவர்கள் உள்ளிட்டவர்களினால் உரை நிகழ்த்தப்பட்டதுடன் பஞ்ச புராண போட்டியினை மாணவர்களிடையே அறிமுகப்படுத்திய அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தை அனைவரும் பாராட்டி பேசினர்.
இதேநேரம் த.கயிலாயபிள்ளை தமிழ் இலக்கிய பேரவையினால் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பா வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அதிதிகளும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.


 

(வி.ரி. சகாதேவராஜா)


சீரடி சாயிபாபாவின் 106 வது  மகா சமாதி தின அபிஷேக பெரும் நிகழ்வு நேற்று  (12) சனிக்கிழமை திருக்கோவிலில் நடைபெற்றது.

 திருக்கோவில் தாமரைக்குளத்தில் அமைந்துள்ள சீரடி சாயி கருணாலயத்தில்  காலை முதல் சாயி பஜனை இடம்பெற்றது. 

பஜனை தொடர்ந்து பகல் அன்னதானம் இடம்பெற்றது.

 அதன் பின்பு சாயிபஜனை பாராயணம் மகா சமாதி நேர புராணம் வாசித்தல் என்பவற்றுடன் 2.30 மணி அளவில் அபிஷேகம் இடம்பெற்றது .

சீரடி சாய்பாபாவை திருநீறு கொண்டு அபிஷேகம் செய்து  அலங்கரித்து மங்களஆரத்தி எடுத்தார்கள்.

 அதன் போது பெருந்திருளான சாயி பக்தர்கள் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டு ஆசீர்வாதம் பெற்றார்கள்.

 


( காரைதீவு  சகா)


சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் வருடாந்த  வாணிவிழா நேற்று (10)வியாழக்கிழமை சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் செபமாலை மகேந்திரகுமார்  தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

 பணிமனையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர்  வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா  சிறப்புஅதிதியாக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

அங்கு கணக்காளர் சீ. திருப் பிரகாசம் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான யாசிர் அரபாத் 
பி.பரமதயாளன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நிர்மலேஸ்வரக் குருக்கள் விசேட பூஜை நடாத்தினார்.

அங்கு இந்து இஸ்லாம் பௌத்த உத்தியோகத்தர்கள் இணைந்து இந்த பூஜை இடம் பெற்றது.

கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் வீரமுனை ராமகிருஷ்ணா வித்தியாலயம் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

வலய இந்து சமய ஆலோசகர் கே. சந்திரகுமார் வாணிவிழா ஏற்பாடு செய்திருந்தார்.
 
கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சகா வழங்கிய நூல்ப்பரிசுகள் வழங்கப்பட்டன.



 வி.சுகிர்தகுமார்  


 வாணி விழா ஊர்வலங்கள் பாடாசாலைகளிலும் இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைவாக அக்கரைப்பற்று கோளாவில் 3 பெருநாவலர் வித்தியாலயத்திலும் வாணி விழாவை முன்னிட்டு இன்று (11) ஊர்வலம் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் ஸ்ரீ மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்ற வாணி விழா ஊர்வலத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டதுடன் பூஜைகளை சிவஸ்ரீ க.தவேந்திரக்குருக்கள் நடாத்தி வைத்தார்.
ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் சரஸ்வதி தேவியின் பிரார்த்தனை பாடல்களை பாடி சென்றனர்.
ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பொதுமக்களால் தாகசாந்தி ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வழங்கி வைக்கப்பட்டது.

இணையவழி,குறுந்தகவல் மூலமாக, பொருட்களைச்,சந்தைப்படுத்துங்கள்! On WEB-ceylon24.com On Twitter @ceylon24 Tel:0777 761 477, 0759 761 477

Powered by Blogger.