கடந்த பாராளுமன்ற தேர்தலில் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறு இன்று தமிழருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது






 .(சுகிர்தகுமார் )        


 இலங்கையின் சகல பிரதேசங்களிலும் அனுர அரசு கோலோச்சி நின்ற காலத்தில் கூட கிழக்கிலே தமிழரசுக்கட்சி நிலைநிறுத்தி நின்றது. இந்நிலையில் வடக்கிலே தமிழ் மக்கள் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறு இன்று தமிழருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என அம்பாரை மாவட்ட தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபகரான தந்தை செல்வாவின் 127ஆவது ஜனனதின நிகழ்வானது திருக்கோவிலில் நேற்று இடம்பெற்று இருந்தது.
இந்நிகழ்வானது திருக்கோவில் 5ஆம் வட்டாரக் கிளையின் தலைவர் பி.நந்தபாலுவின் தலைமையில் திருக்கோவில் 04 காயத்திரி கிராமத்தில் இடம்பெற்றது.
இதன்போது தந்தை செல்வாவின் உருவப்படத்திற்கு அம்பாரை மாவட்ட தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களால் மலர் மாலை அணிவித்ததைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டு இருந்தவர்கள் மலர் தூபி தமது அஞ்சலிகளை தெரிவித்து இருந்தனர்.

இங்கு தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்
குறிப்பாக வடக்கு மக்கள் அரசுக்கு அளித்த ஆதரவின் விளைவை சந்தித்து வருகின்றனர். ஆனால் கிழக்கு மக்கள் அதில் கவனமாக இருந்து 5 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்தனர்.
இந்த நிலையில் நடைபெறுகின்ற உள்ளுராட்சி தேர்தலில் அனைத்து சபைகளையும் தமிழரசுக்கட்சி கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இல்லாது போனால் சர்வதேசத்தில் தமிழர்களின் பிரச்சினைகளை முன்வைக்க முடியாத நிலை உருவாகலாம். தமிழர்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என சர்வதேசம் நினைக்கலாம். இதனை உணர்ந்து தமிழ் மக்கள் உள்ளுராட்சி தேர்தலில் செயற்படவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நம் நாட்டில் உருவாக்கப்பட்ட எத்தனையோ கட்சிகள் இன்று சின்னபின்னமாகி போயுள்ளது. ஆயினும் 76 வருடங்களை கடந்தும் ஒற்றுமையாக செயற்படும் ஒரே கட்சி தமிழரசுக்கட்சி .இந்நிலையில் தமிழரசுக்கட்சியை உடைத்தெறிந்து இல்லாமல் செய்ய வேண்டும் என உள்ளுர் அரசியல் அரங்கிலும் சர்வதேச ரீதியிலும் பலர் முனைப்போடு செயற்படுகின்றனர். ஆனாலும் அதனை முறியடித்து தமிழ் மக்கள் தமிழரசுக்கட்சியை ஆதரித்து இன்றுவரை பாதுகாத்து வருகின்றனர். தமிழரசுக்கட்சி மூலமே தமிழ் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய முடியும் என மக்கள் நம்புகின்றனர். அவர்களது நம்பிக்கைக்கு ஏற்ப இன்றுவரை தமிழரின் விடிவிற்காய் ஓயாது தந்தை செல்வாவின் வழியில் பயணித்து குரல் கொடுத்துவரும் கட்சி தமிழரசுக்கட்சியே என குறிப்பி;ட்டார்.