இலங்கையின் சனத்தொகை - வௌியான புதிய தகவல்







நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்திருந்தாலும், மக்கள் தொகை இன்னும் அதிகரித்து வருவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டின் மக்கள் தொகை 2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை விட 1,403,731 அதிகரித்துள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 


அதன்படி, 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் நாட்டின் மக்கள் தொகை 21,763,170 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மாகாண ரீதியாக எடுத்துக் கொண்டால், நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 28.1% என்ற மிகப்பெரிய மக்கள் தொகை மேல் மாகாணத்தில் வசிக்கும் அதே நேரத்தில் மிகக் குறைந்த மக்கள் தொகையான 5.3% வடக்கு மாகாணத்தில் வாழ்வதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மாவட்ட மட்டத்தில் மக்கள்தொகை பரவலைக் கருத்தில் கொள்ளும்போது, ​​அதிக மக்கள் தொகை கம்பஹா மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன் அந்த எண்ணிக்கை 2,433,685 ஆகும். 


இரண்டாவது இடத்தில் உள்ள கொழும்பு மாவட்டத்தில் 2,374,461 பேர் வசிக்கின்றனர். 


அதன்படி, இந்த இரண்டு மாவட்டங்களிலும் மாத்திரம் தலா 02 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை வசிப்பதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது. 


இந்த இரண்டு மாவட்டங்களைத் தவிர, முன்னைய மக்கள் தொகை கணக்கெடுப்புகளைப் போன்று இம்முறையும், குருநாகல் 1,760,829, கண்டி 1,461,269, களுத்துறை 1,305,552, இரத்தினபுரி 1,145,138 மற்றும் காலி 1,096,585 ஆகிய மாவட்டங்களில் அதிக மக்கள் தொகை பதிவாகியுள்ளது. 


அதேநேரம் முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாட்டில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களாக வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, மற்றும் வவுனியா மாவட்டங்கள் பதிவாகியுள்ளன. 


முல்லைத்தீவில் 122,542 பேரும், மன்னாரில் 123,674 பேரும், கிளிநொச்சியில் 136,434 பேரும் வவுனியாவில் 172,257 பேரும் வசிக்கின்றனர். 


இதற்கிடையில், அதிகபட்ச சராசரி வளர்ச்சி விகிதம் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளது, இது 2.23 ஆகவும் பதிவாகியுள்ளது. 


வவுனியா மாவட்டத்தில் மிகக் குறைந்த சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளதுடன், இது 0.001 ஆக பதிவாகியுள்ளது. 


மேலும், முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்புகளைப் போலவே, ஒரு சதுர கிலோமீட்டருக்கு 3,549 பேர் என்ற அதிகபட்ச மக்கள் தொகை அடர்த்தி கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ள அதே நேரத்தில் மிகக் குறைந்த மக்கள் தொகை அடர்த்தி முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளது. 


அங்கு மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 50 பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டுவசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை இன்று (07) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. 


2024 ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த தொகைமதிப்பு முதற்கட்ட அறிக்கை, தயாரிக்கப்பட்டுள்ளது. 


இலங்கையின் குடிசனம், குடிசன வளர்ச்சி மற்றும் மாவட்ட அடிப்படையிலான சனத்தொகை பரவல் பற்றி இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இலங்கையின் அபிவிருத்திச் செயல்முறைக்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுக்க அரசாங்கம் அல்லாத ஏனைய நிறுவனங்களுக்கு இந்த குடிசன கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள் மிகவும் முக்கியமானவை. குடிசன தொகைமதிப்பு வரலாற்றில் முதல் முறையாக, டெப்லெட் கணினிகள் மற்றும் கைபேசிகளைப் பயன்படுத்தி தரவு சேகரிப்பு மேற்கொள்ளப்பட்டது விசேட அம்சமாகும்.