.இராஜகோபுரத்தின் முதலிரு தளங்கள் பூர்த்தி






( வி.ரி. சகாதேவராஜா)
கிழக்கிலங்கையின் வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில்  ஶ்ரீ சித்திர வேலயுதசுவாமி ஆலயத்தில் பல வருடங்களாக தடைபட்டிருந்த இராஜகோபுரத்தின் முதலிரு தளங்கள் பூர்த்தி அடைந்துள்ளன.

நாடறிந்த சமூக செயற்பாட்டாளர் பரோபகாரி முன்னாள் கல்முனை லயன்ஸ் கழகத் தலைவர் பொறியியலாளர் சுந்தரலிங்கம் சசிகுமாரினால் அண்மையில் மீண்டும் திருப்பணி வேலைகள்  ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
அவரது உபயத்தில் முதலிரு தளங்கள் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஏனைய ஏழு தளங்களும் படிப்படியாக நிருமாணிக்கப்படும்.

 பண்டைய காலத்தில் இராஜராஜ சோழனினால் இவ் ஆலயம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னொரு காலத்தில் "கந்தபாணத்துறை” என அழைக்கப்பட்ட திருக்கோவில் சங்ககாலம் மருவிய பின்பு திருக்கோவில் என அழைக்கப்பட்டது.

  ஆலயத்தின் மூலப்பொருளான 108 அடி உயரமான 9 தளங்களுடன் கூடிய இராஜகோபுரம் அடித்தளம் இட்டு இதுவரை காலமும் முற்றுப் பெறாத நிலையில் 33 அடி உயரத்தில் காணப்பட்டது.

அதனை நிவர்த்தி செய்யும் முகமாக அடுத்த கட்ட திருப்பணியை ஆலய தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தலைமையிலான பரிபாலன சபையினர் கூட்டம் கூடி அடுத்த கட்ட நகர்வை முன்னெடுத்திருந்தனர்.

அதன் முதற் கட்டமாக நாடறிந்த சமூக செயற்பாட்டாளர் பரோபகாரி முன்னாள் கல்முனை லயன்ஸ் கழகத் தலைவர் பொறியியலாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் முதலிரு தளங்களை சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்க முன்வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.