(வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுவுக்கு அடிமையானவர்களை முழுமையாக விடுவிக்கும் நோக்கத்துடன் ஒரு புனர்வாழ்வு மையம் ஒன்று செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையில் நேற்று (17) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர். ஆர். முரளீஸ்வரன் தலைமையில் சம்பிரதாய பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில்
மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு முழுமையான விடுதலை, சமூக மறுவாழ்வு, உளவியல் மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்கான உதவி உட்பட குடும்பத்தினருக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழங்கி கைகொடுக்கும் மையமாக இது செயல்படவுள்ளது.
போரும் அதன் பின்னரான அரசியல் மற்றும் சமூகச் சூழலும் கிழக்கு மாகாணத்தில் மதுப் பாவனையை அதிகரித்ததன் விளைவாக சமூகப் பிறழ்வுகள் ஏற்பட்டிருக்கும் இச்சவாலான சூழ்நிலையில், மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வு மையம் அமைவது ஒரு முக்கியமான காலகட்டத்தின் தேவையாகும்.”உவகை” நல்வாழ்வு மையம் என்கிற பெயரில் இயங்கவுள்ள இவ் புனர்வாழ்வு மையம், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மதுவுக்கு அடிமையானவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
இத்திறப்பு விழா நிகழ்வில், மட்டக்களப்பு அரச அதிபர் திருமதி ஜே. ஜே. முரளீதரன் முதன்மை விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார் .
மேலும், தேசிய உளநலப் பணிப்பாளர் மருத்துவர். எல்.என். மகோதரட்ன, சமூக நல ஆலோசகர் மருத்துவர். யமுனா எல்லாவேலா, கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் எம். உமாகாந்த், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் கலாரஞ்சினி, கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர். ஜி. சுகுணன், மட்டக்களப்பு உளநல வைத்திய நிபுணர்களான மருத்துவர் ரீ. கடம்பநாதன், மருத்துவர்.ஆர். கமல்ராஜ், செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி . உட்பட பிராந்திய வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இது, பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
Post a Comment