பாறுக் ஷிஹான்
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வீடுகள் உடைக்கப்பட்டு திருடுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் அவற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது ஆரம்பித்துள்ள ரமழான் நோன்பு காலத்திலும் இரவு வேளையில் இறைவணக்க வழிபாட்டிற்கு ஆண்கள் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்ல வேண்டியுள்ளதனால் அதனை பயன்படுத்தி திருடர்கள் வீடுகளை உடைத்து திருடும் அச்சுறுத்தல் தொடர்கதையாகவே உள்ளது.எனவே பொதுமக்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களை மிக சாதுரியமாக கையாண்டு பாதுகாப்பினை உறுதிப்படுத்தி செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்த பெப்ரவரி (27) சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரபல மகளீர் பாடசாலைக்கு அருகிலுள்ள வீடு உடைக்கப்பட்டு 13 இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்ததுடன் முறைப்பாடுக்கு அமைய பின்னர் மார்ச் மாதம் சனிக்கிழமை (1) மலையடிக்கிராமம் 01 பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.குறித்த சந்தேக நபரிடம் இருந்து திருடப்பட்ட பணத்தின் ஒரு தொகை உட்பட வீடு உடைப்பதற்கு பயன்படுத்த உபகரணங்கள் என்பன மீட்கப்பட்டிருந்தன.
இருப்பினும் இவ்வாறான வீடு உடைப்பு மற்றும் சட்டவிரோத களவு பொதுமக்களின் கவனயீனத்தால் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.அத்துடன் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் வழிகாட்டுதலில் வீதி ரோந்து நடவடிக்கைகள் மற்றும் திடீர் சோதனை நடவடிக்கைகள் என்பன பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டும் உள்ளனர்.
எனவே இவ்வாறான சட்டவிரோத நடவடிக்ககைகளை தடுப்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியினை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment