திருடர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை -மாவடிப்பள்ளியில் சம்பவம்




 


பாறுக் ஷிஹான்


வீடு உடைக்கப்பட்டு   நகை மற்றும் பணம் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை  காரைதீவு பொலிஸார் முன்னெடுத்துள்ளளனர்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மாவடிப்பள்ளி பகுதியில் சுமார்  4 1ஃ2 பவுண்  தங்க நகைகள் உட்பட பணம் கடந்த வியாழக்கிழமை(27) இரவு   திருடப்பட்டுள்ளதாக மறுநாள்   வெள்ளிக்கிழமை  (28) வீட்டு  உரிமையாளரினால்  முறைப்பாடு  மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய   கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் ஆலோசனையில்  காரைதீவு  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி   வழிகாட்டுதலில் பொலிஸ் அணி ஒன்று புலனாய்வு மற்றும் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும்   குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்ற  வீட்டு  உரிமையாளர்கள் குடும்ப சகிதம் அருகில் உள்ள   சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள உறவினர்  வீட்டுக்கு சென்று அன்றைய தினம்  இரவு 10 மணியளவில் தமது வீட்டிற்கு  மீண்டும்  திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் திடிரென   தமது கையடக்க தொலைபேசி ஒன்றினை தேடிய நிலையில்  நகைகள் வைக்கப்பட்டிருந்த அலுமாரி உட்பட அலுமாரி இருந்த  அறை  கதவு  திறந்த நிலையில் காணப்பட்டதை அவதானித்துள்ளனர்.

பின்னர்  வீட்டின் நிலைமையினை பரிசோதனை செய்த போது வீட்டின்  மேல் மாடியில் இருந்த கதவு  அகற்றப்பட்டு  அலுமாரியில் பாதுகாக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் பணம்  திருடப்பட்டிருந்ததை  அவதானித்துள்ளனர். உடனடியாக   பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பில்  தெரிவிக்கப்பட்ட  நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மாவடிப்பள்ளி உட்பட புறநகர் பகுதியில் அண்மைக்காலமாக  திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள்   விழிப்பாக  இருக்குமாறு  பொலிசார் கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.