
சங்கத்தின் உறுப்பினர் சட்டத்தரணி எமலியா லிலந்தி டி சில்வாவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தலைவர் பதவிக்காக போட்டியிடும் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய, சட்டத்தரணி கலாநிதி சுனில் அபேரத்ன, சட்டத்தரணிகள் சங்கத்தின் தெரிவத்தாட்சி அதிகாரி உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தலைவர் பதவிக்காக வேட்புமனு கையளித்துள்ள ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட தேர்தலில் இருந்து விலகியுள்ள நிலையில் எஞ்சியுள்ள 2 வேட்பாளர்களுடன் மாத்திரம் தேர்தலை நடத்துவது சங்கத்தின் யாப்பிற்கு முரணானது என மனுதாரர் சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய விடயங்களை முன்வைத்தார்.
வேட்புமனுவை மீளப்பெறுவது என்பது வேட்பாளர் ஒருவரின் மரணத்தின் போது ஏற்படுகின்ற நடைமுறைக்கு சமமானது எனவும் சங்கத்தின் யாப்பிற்கமைய வேட்பாளரொருவர் மரணித்த பின்னர் மீண்டும் வேட்புமனு கோரப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தெரிவித்தார்.
அத்துடன் மீண்டும் வேட்புமனு கோரி தேர்தலை நடத்துவதற்கு உத்தரவிடுமாறும் மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய மன்றில் கோரினார்.
யாப்பிற்கமையவே சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் நடத்தப்படுவதாகவும் அனுர மத்தேகொட தமது விருப்பத்திற்கமைய தேர்தலில் இருந்து விலகியுள்ளதாகவும் பிரதிவாதிகள் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணிகளான அலி சப்ரி, இக்ராம் மொஹமட், சாலிய பீரிஸ், சட்டத்தரணி திஷ்ய வேரகொட மற்றும் சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க ஆகியோர் குறிப்பிட்டனர்.
அனுர மெத்தெகொட சுய விருப்பத்தின் அடிப்படையில் தேர்தலில் இருந்து விலகியுள்ளதால் அதனை மரணத்துடன் ஒப்பிட முடியாதுள்ளதாகவும் சட்டத்தரணிகள் கூறினர்.
இதனால் சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தலை நடத்துவது சட்டபூர்வமானது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இருதரப்பினராலும் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த மாவட்ட பிரதான நீதிபதி வெற்றி பெறக்கூடிய வழக்கொன்றை மனுதாரர் தொடுக்கவில்லை என தெரிவித்தார்.
9 நாட்களுக்கு முன்னதாக ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தகொட சமூக ஊடகங்கள் மூலம் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்ததாகவும் இவ்வாறான பின்னணியில் இந்த முறைப்பாட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு 9 நாட்கள் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
முறைப்பாட்டாளரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்தார்.
Post a Comment