காஸா பகுதியை கைப்பற்றி, அமெரிக்கா அதை சொந்தமாக்கிக் கொள்ளும் என்று ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்புக்கு சீனா, சவூதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு பதில் அளித்துள்ள சவூதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சரகம்,
"பலஸ்தீனர்களை அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்றும் எந்தவொரு முயற்சியையும் நாங்கள் நிராகரிக்கிறோம். பலஸ்தீன அரசை நிறுவாமல் இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்த மாட்டோம். பலஸ்தீன அரசு குறித்த சவூதி அரேபியாவின் நிலைப்பாடு உறுதியானது மற்றும் அசைக்க முடியாதது.
பலஸ்தீன மக்களை இடம்பெயர வைக்கும் முயற்சிகள் மூலம், பலஸ்தீன மக்களின் சட்டபூர்வமான உரிமைகள் மீறப்படுமானால் அதனை சவூதி அரேபியா சந்தேகத்துக்கு இடமின்றி நிராகரிக்கிறது. சவூதி அரேபியாவின் இந்த நிலைப்பாடு பேச்சுவார்த்தைகளுக்கோ, சமரசங்களுக்கோ உட்பட்டது அல்ல" என்று தெரிவித்துள்ளது.
அத்தோடு பலஸ்தீனியர்களை கட்டாய இடமாற்றம் செய்யும் முயற்சியை எதிர்ப்பதாக சீனாவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீனவெளியுறவுத்துறை அமைச்சரக செய்தித் தொடர்பாளர் கூறுகையில் ,
“இரு நாடுகளின் தீர்வின் அடிப்படையில் பலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். இதை கருத்திற்கொண்டு அனைத்துத் தரப்பினரும் போர் நிறுத்தம் மற்றும் மோதலுக்குப் பிந்தைய நிர்வாகத்தை எடுத்துக் கொள்வார்கள் என்று சீனா நம்புகிறது" என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை காஸாவை கையகப்படுத்துவது குறித்த ட்ரம்ப்பின் கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று துருக்கி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர்,
"பலஸ்தீனர்களை அவர்களது சொந்த மண்ணில் இருந்து விலக்கி வைக்கும் எந்தவொரு திட்டமும் மேலும் மோதலுக்கு வழிவகுக்கும். பலஸ்தீனர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட்டு அவர்களின் நிலைமைகள் மாறினால், வர்த்தகத்தைத் துண்டித்தல், தூதரை திரும்பப் பெறுதல் என இஸ்ரேலுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளை துருக்கி மறுபரிசீலனை செய்யும்" என குறிப்பிட்டார்.
Post a Comment
Post a Comment