இன சுத்திகரிப்பு - இனப் படுகொலை என்ன வித்தியாசம்?




 


அமெரிக்கா காஸாவை "கைப்பற்றலாம்" மற்றும் அதன் மக்களை இடமாற்றம் செய்யலாம் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.


அதனைத் தொடர்ந்து, அவர் இனச் சுத்திகரிப்பு செய்ய திட்டமிடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழத் தொடங்கின. ஐ.நா, அரேபிய மற்றும் பிற உலகத் தலைவர்களும், மனித உரிமைக் குழுக்களும், அவரது கருத்துக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


கடந்த செவ்வாய்கிழமை மாலை, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அருகில் நின்று, காஸா தொடர்பான கருத்துக்களைத் தெரிவித்தார் டிரம்ப்.


டிரம்பின் கருத்து, "கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று" என்று நெதன்யாகு பதிலளித்தார்.





இன சுத்திகரிப்பு - இனப் படுகொலை, காஸா, டிரம்ப்


ஆனால், இரண்டு மில்லியன் மக்களை தங்கள் நிலத்தை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்துவது மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாகும் என்று அரபு நாடுகள் கூட்டமைப்பின் உதவிப் பொதுச்செயலாளர் ஹொசாம் ஜாக்கி பிபிசியிடம் தெரிவித்தார்.


"குடிமக்கள் தங்கள் நிலத்தில் இருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்படுவதை, அதாவது இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையை இந்த யோசனை ஆதரிக்கிறது. போர்நிறுத்தம் எட்டப்பட்ட பிறகு, பாலத்தீன மக்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கிய தங்களின் வீடுகளுக்கு விரைவாக திரும்பினர். அவர்கள் தங்கள் சொந்த நிலத்தை விட்டு வெளியேற மனப்பூர்வமாக ஒப்புக்கொள்வார்கள் என உங்களால் எப்படி கற்பனை செய்ய முடிகிறது?" என்கிறார் ஹொசாம் ஜாக்கி.


ஆனால், "புதிய மற்றும் நவீன வீடுகள் கொண்ட, மிகவும் பாதுகாப்பான மற்றும் அழகான இடங்களில்" மீள்குடியேற்றம் செய்யப்படும் என்று லட்சியவாத சொற்களில் டிரம்ப் முன்மொழிந்துள்ள கருத்தை, உண்மையில் இனச் சுத்திகரிப்பு எனக் கருதலாமா?


மேலும், இனச் சுத்திகரிப்பு மற்றும் இனப் படுகொலை இடையில் உள்ள வேறுபாடு என்ன?


போரின் போது, இஸ்ரேலின் உத்தரவின் பேரில் தெற்கே இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள், ஜனவரி 27ம் தேதி அன்று வடக்கு காசாவில் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர்.


'இனச் சுத்திகரிப்பு' என்றால் என்ன ?

இனச் சுத்திகரிப்பு என்பது பொதுவாக குறிப்பிட்ட ஒரு குழுவை, ஒரு குறிப்பிட்ட பகுதியை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்துவதாகும்.


நாடு கடத்துவது அல்லது ஒரு இனக்குழுவை கட்டாயமாக வெளியேற்றுவதன் மூலம், ஒரு நிலப்பகுதியில் ஒரே ஒரு இனக்குழுவே வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் செய்கின்றனர்.


இனச் சுத்திகரிப்பு என்பது இடமாற்றம் தொடர்பானது மட்டுமல்ல. "நினைவுச் சின்னங்கள், கல்லறைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை அழிப்பதன் மூலம் குறிவைக்கப்பட்ட குழுவின் அனைத்து அடையாளங்களையும் அகற்றுவது" என நியூயார்க்கில் உள்ள ஜான் ஜே கல்லூரியில் சர்வதேச மனித உரிமைகளுக்கான மையத்தின் நிறுவன இயக்குநர் பேராசிரியர் ஜார்ஜ் ஆண்ட்ரியோபொலோஸ் கூறுகிறார்.


1990களில் யூகோஸ்லாவியா கூட்டாட்சி குடியரசு சிதைந்த போது இன மோதல்கள் வெடித்த சமயத்தில், இனச் சுத்திகரிப்பு எனும் சொல் முதன்முதலில் பரவலாக பயன்படுத்தப்பட்டது.


போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் உள்ள போஸ்னிய இஸ்லாமிய மக்கள், குரோஷியாவின் கிராஜினா பகுதியில் உள்ள செர்பியர்கள் மற்றும் கொசோவோவில் உள்ள அல்பேனியர்கள் மற்றும் செர்பியர்கள் ஆகிய இனத்தவர்களின் மீது நடத்தப்பட்ட கொடூரமான துன்புறுத்துதல்களை விவரிக்க அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்களால் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டது.


மேலும், 2017-ஆம் ஆண்டில், முன்னாள் ஐநா மனித உரிமைகள் தலைவர் ஜெய்த் ராத் அல் ஹுசைன், ரோஹிஞ்சா இன முஸ்லிம்களுக்கு எதிரான மியான்மர் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விவரிக்க 'இனச் சுத்திகரிப்பு' என்ற சொல்லைப் பயன்படுத்தினார். மேலும், "இனச் சுத்திகரிப்புக்கு தெளிவான எடுத்துக்காட்டு" என்றும் அதனை விவரித்தார்.

 

இன சுத்திகரிப்பு - இனப் படுகொலை, காஸா, டிரம்ப்பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,ஆகஸ்ட் 2017ல், நடந்த வன்முறைச் சம்பவத்தில் 742,000 க்கும் மேற்பட்ட ரோஹிஞ்சா இன மக்கள் மியான்மரில் உள்ள தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அண்டை நாடான வங்கதேசத்திற்கு சென்றனர்

இனச் சுத்திகரிப்பு போர்க்குற்றமாகுமா?

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, சமகால ஆயுத மோதல்களின் தன்மை காரணமாக இந்த வார்த்தை பரவலாகிவிட்டது.


ஒரு நாட்டின் ராணுவ சரணடைதலை விரைவுபடுத்த என்னென்ன வற்புறுத்தல் நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதோ, அதே நடைமுறைகள் தங்கள் நாட்டிலிருந்து வெளியேறும்படி மக்களை ஒப்புக்கொள்ள வைக்கவும் பயன்படுத்தப்படுகிறது என்று ஐநாவின் நிபுணர் குழு கூறுகிறது.


சித்திரவதை, கைது, சிறைவைத்தல், பாலியல் வன்புணர்வு,பாலியல் வன்கொடுமைகள், சொத்துக்களை அழித்தல், பொருட்களை கொள்ளையடித்தல் மற்றும் மருத்துவமனைகளைக் குறிவைத்தல் ஆகியவை இந்த நடைமுறைகளில் அடங்கும்.


இதில் சில நடைமுறைகள் சட்டப்பூர்வ போர்க்குற்றங்களாக கருதப்படுகின்றன.


இருப்பினும், ஐ.நா சபையின் சர்வதேச சட்டத்தின்படி, இனச் சுத்திகரிப்பு என்பது ஒரு போர்க்குற்றமாக அதிகாரப்பூர்வமாக வரையறுக்கப்படவில்லை.


பல ஆண்டுகளாக "போரினால் ஏற்படும் குழப்பங்களின் கீழ் பாலத்தீனயர்களை இனச் சுத்திகரிப்பு" செய்ய இஸ்ரேல் முயற்சித்து வருகிறது என ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீனப் பகுதியின் ஐக்கிய நாடுகளின் சிறப்பு கண்காணிப்பாளரான பிரான்செஸ்கா அல்பானீஸ் தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், இஸ்ரேல் எனும் நாடு உருவானதன் காரணமாக ஏற்பட்ட மோதல்களால் 1947 முதல் 1949 வரை 7,50,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் அவர்களின் வீடுகளிலும் நிலங்களிலும் இருந்து வெளியேற்றப்பட்டனர்.இந்த நிகழ்வை பாலத்தீன மக்கள் அரபு மொழியில் "நக்பா" (பேரழிவு) என்று அழைக்கின்றனர்.


"தற்போது நாம் காணும் நிகழ்வுகள், 1948ம் ஆண்டு நடந்த நக்பாவின் மறு நிகழ்வாக, அல்லது அதைவிட இன்னும் பெரிய அளவிலானதாக இருக்கலாம்" என்று பிரான்செஸ்கா அல்பானீஸ் கூறுகிறார்.


இனச் சுத்திகரிப்புக்கும் இனப் படுகொலைக்கும் என்ன வித்தியாசம்?

இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தின்படி, தனி குற்றமாக அங்கீகரிக்கப்படாத நிலையில், இனப்படுகொலை என்பது அதிகாரப்பூர்வக் குற்றமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


1946 ஆம் ஆண்டு நடந்த யூதப் படுகொலையின் போது நாஜிக்கள் திட்டமிட்ட முறையில் யூத மக்களை கொன்றபோது ஐநா பொதுச் சபை இதை குற்றமாக அங்கீகரித்தது.


அதாவது, "ஒரு தேசிய, இன அல்லது மதக் குழுவை முழுமையாகவோ அல்லது அவர்களில் ஒரு பகுதியினரையோ அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் எந்தவொரு செயலும்" இனப்படுகொலை என வரையறுக்கப்படுகிறது.


ஒரு குறிப்பிட்ட குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது அல்லது அவர்களுக்குக் கடுமையாக தீங்கு விளைவிப்பது, ஒரு குழு உயிர்வாழ முடியாத வாழ்க்கைச் சூழலை உருவாக்குவது, அந்தக் குழுவிற்குள் புதிதாக குழந்தைப் பிறப்பதைத் தடுப்பது அல்லது குழந்தைகளை ஒரு குழுவிலிருந்து மற்றொரு குழுவிற்கு வலுக்கட்டாயமாக மாற்றுவது ஆகியவை அந்தச் செயல்களில் அடங்கும் என அறியப்படுகின்றது.



இன சுத்திகரிப்பு - இனப் படுகொலை, காஸா,

படக்குறிப்பு,ருவாண்டாவிற்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இனப்படுகொலை தொடர்பான தீர்ப்பை வழங்கிய முதல் சர்வதேச நீதிமன்றம் ஆகும்.

1998ம் ஆண்டில், ருவாண்டாவின் முன்னாள் பிரதமர் ஜீன் கம்பண்டா இனப்படுகொலைக்காக சர்வதேச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்.


மேலும், இனப்படுகொலைக்காக தண்டிக்கப்பட்ட முதல் அரசியல் தலைவர் இவர் என்றும் அறியப்படுகின்றது.


ஜீன் கம்பண்டா தண்டனை பெறுவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு மில்லியன் டுட்ஸி இனக்குழுவினர் மற்றும் மிதவாத ஹூட்டுக்கள் இப்படுகொலையில் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


நோக்கம் பற்றிய கேள்வி

இனச் சுத்திகரிப்புக்கும், இனப்படுகொலைக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் குற்றம் சாட்டப்பட்டவரின் 'நோக்கம்' என்று ஐநா விளக்குகிறது.


ஒரு இன அல்லது மதக் குழுவை அழிப்பது இனப்படுகொலையின் முதன்மையான நோக்கமாக இருந்தாலும், இனச் சுத்திகரிப்புக்கான முக்கிய நோக்கம் அவர்களை வெளியேற்றுவதும், நிலவியல் ரீதியாக ஒரே இன மக்களைக் கொண்ட பகுதிகளை நிறுவுவதும் ஆகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.