இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிப்பை நிறுத்தி வைப்பதாக ஹமாஸ் அறிவித்தது ஏன்?







'அடுத்த அறிவிப்பு வரும் வரை' இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்திவைக்கப்போவதாக ஹமாஸ் ஆயுதக்குழு தற்போது அறிவித்துள்ளது.


"கடந்த மூன்று வாரங்களாக, ஹமாஸ் குழுவின் தலைமை, எதிரி படைகளின் வீதி மீறல்களையும், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறியதையும் கண்காணித்து வருகிறது.


வடக்கு காஸாவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அங்கு செல்வதை தாமதப்படுத்துதல், காஸா முனையின் பல்வேறு பகுதிகளில் ஷெல் குண்டுகள் குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு மூலம் தாக்குதல் நடத்துவது, அந்த பகுதியில் வழங்கப்படும் மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கத் தவறுதல் ஆகியவை இந்த வீதி மீறல்களுள் அடங்கும்.'' என ஹமாஸ் தெரிவித்துள்ளது


ஆனால் ''ஹமாஸ் குழு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அனைத்து விதிகளையும் முழுமையாக கடைபிடித்து வருகிறது. அதன்படி, வரும் சனிக்கிழமை (பிப்ரவரி 15) இஸ்ரேலிய பணையகைதிகளை விடுதலை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது, தற்போது அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது", என்று ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


காஸா, இஸ்ரேல் - ஹமாஸ் 


இஸ்ரேல் பதில் என்ன?

"இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்துவதாக ஹமாஸ் அறிவித்தது போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை முழுமையாக மீறுவதாகும். காஸாவில் எந்த ஒரு சூழ்நிலை ஏற்பட்டாலும், அதற்காக அதிக எச்சரிக்கையுடன் தயாராக இருக்கவும் இஸ்ரேல் மக்களை பாதுகாக்கவும் இஸ்ரேல் பாதுகாப்பு படைக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். அக்டோபர் 7 ஆம் தேதி ஏற்பட்ட நிலை போல மீண்டும் ஏற்பட அனுமதிக்க மாட்டோம்", என்று இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.


காஸா, இஸ்ரேல் - ஹமாஸ் பட மூலாதாரம்,Reuters

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் கடந்த மாதம் அமலுக்கு வந்தது. போர் நிறுத்த ஒப்பந்தப்படி, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலத்தீன கைதிகள் விடுதலைக்கு ஈடாக, ஒவ்வொரு கட்டமாக ஹமாஸ் தன் வசமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கும்.


விடுவிக்கப்படும் ஒவ்வொரு இஸ்ரேலிய பணயக்கைதிக்கும் 30 பாலத்தீன கைதிகளை இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது நிபந்தனை.


முதல் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி 33 இஸ்ரேலிய பணயகைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். அதில் 16 பேர் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 17 இன்னும் விடுவிக்கப்பட உள்ளனர். அந்த 17 பேர் 8 பேர் இறந்துவிட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.


மற்றொரு ஒப்பந்ததின்படி தாய்லாந்தை சேர்ந்த 5 பேரை ஹமாஸ் விடுவித்தது.


இதற்கு இணையாக 1900 பாலத்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கும்.அதில் நூற்றுக்கணக்கானவர்கள் விடுதலையாகியுள்ளனர்.


கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டு, 251 பேர் பணயக்கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஹமாஸை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் இஸ்ரேல் இறங்கியது.


இந்த தாக்குதலில் காஸாவில் 46,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஹமாஸ் நடத்தும் சுகாதாரத்துறை தெரிவித்தது. அங்குள்ள 23 லட்சம் மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் இடம்பெயந்தனர். மேலும் அங்கு பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது.