சுகாதாரத் துறைக்கு ஆற்றிய அர்ப்பணிப்பு மிக்க சேவைக்கு பாராட்டு !




 


நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்வும் வருடாந்த ஒன்றுகூடல் வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் சனூஸ் காரியப்பர் தலைமையில் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் பிரதம அதிதியாகவும், பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர், பிராந்திய சுகாதார தகவல் முகாமைத்துவ பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஐ.எம்.முஜீப், பிராந்திய தொற்றா நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஐ.எம்.எஸ்.இர்ஷாத் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

சாய்ந்தமருது வைத்தியசாலையில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் இந்நிகழ்வின் போது பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் குறித்த வைத்தியசாலையில் பணியாற்றி அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்கின்றவர்கள் இதன்போது பாராட்டி பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் பாடசாலைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்திய வைத்தியசாலை நலன்புரி சங்க உறுப்பினர்கள் உடைய பிள்ளைகளும் இந்நிகழ்வின் போது அதிதிகளினால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட கலை, கலாசார நிகழ்வுகளும் இங்கு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.