நூருல் ஹுதா உமர்
நவீன உலகத் தேவைகளுக்கு ஏற்றவாறு நாமும் மாறிச் செல்வோம்" என்பதற்கிணங்க கல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/ இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கண்காணிப்புக் கேமராக்கள் அண்மையில் பொருத்தப்பட்டன. அதன் உத்தியோகபூர்வ கையேற்பு நிகழ்வு (29) பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம்.றிசாத் தலைமையில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் அவர்களின் வேண்டுகோளுக்கமைவாகவும், பாடசாலை அபிவிருத்திச் செயற்குழுவின் செயலாளர் அவர்களின் தொடர் முயற்சியின் பயனாலும் "யங் மௌண்ட்" விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகர்
ஏ.எம். அப்துல் ரஹ்மான் அவர்களின் நிதி உதவியின் மூலம் இக் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக, கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் நிர்வாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.ஜாபிர், அவர்களும், விசேட அதிதியாக"யங் மௌண்ட்" விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் ஏ.எம்.றியால் அவர்களும் கலந்து கொண்டு, கண்காணிப்பு கேமராக்களை உத்தியோகபூர்வமாக கை அளித்ததுடன் அதற்கான நினைவுக் கல்வெட்டையும் திரை நீக்கம் செய்து வைத்தனர்.
இதன் போது 2024 ம் கல்வி ஆண்டின் இறுதித் தவணை பரீட்சையில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான தேர்ச்சி முன்னேற்ற அறிக்கையும் அதற்கான சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டது. மேலும் மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகளும் முன்வைக்கப்பட்டதுடன் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.ஜாபிர், பாடசாலை அபிவிருத்திச் சங்க நிறைவேற்று குழு உறுப்பினர் ஏ.அபூபக்கர் அவர்களுக்கும் அதிபர் அவர்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், SDEC உறுப்பினர்கள், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment