நூருல் ஹுதா உமர்
இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தின் பின்னர் அரசியலில் எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்து செயல்பட்டவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் பதவியோடு மட்டும் செயற்பட்டார்கள். ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவர் பதவியுடன் பிரபஞ்சம் வேலை திட்டத்தின் மூலமாக 300க்கும் மேற்பட்ட பாடசாலைகள், அரசினர் வைத்தியசாலைகள் ஆகியவற்றின் தேவைகளை இனம் கண்டு அபிவிருத்தி அடையச் செய்ததை மக்களால் ஒரு போதும் மறக்க முடியாது என கல்முனைத் தொகுதி ஐக்கிய மக்கள் சக்தி கட்சி இணைப்பாளரும், கல்முனை பிரதேச சபை முன்னாள் உறுப்பினருமான தேச கீர்த்தி ஏ.அப்துல் கபூர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசாவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அக்கடிதத்தில் அப்துல் கபூர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அம்பாறை மாவட்டத்தில் உள்ள 08 சிங்கள, தமிழ், முஸ்லிம் பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு பிரபஞ்சம் வேலைத் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வகுப்பறை தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் இறுதியாக பொருத்தப்பட்டன. இதில் கல்முனையில் உள்ள கமு/கமு/ இஸ்லாமாபாத் முஸ்லிம் மகாவித்தியாலயம் இணைக்கப்பட்டு ஸ்மார்ட் வகுப்பறைக்கான தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் பாடசாலை பூட்டப்பட்டு திறப்பு விழா செய்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா அவர்களின் வருகையை பாடசாலையும் கல்முனை தொகுதி மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தபோது தேர்தல் திணைக்களத்தினால் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை வெளியிடப்பட்டது.
இதன் காரணமாக கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பொருத்திய உபகரணங்களை மீண்டும் அவற்றை கழட்ட வந்த போது பொதுமக்களும் பாடசாலை பிள்ளைகளும் எமது பாடசாலையில் பொருத்திய உபகரணங்களை கழட்ட வேண்டாம் என்று அழுது புலம்பி கால்களில் விழுந்து கேட்டார்கள்.
இக்கோரிக்கையை அக் குழுவினர் ஏற்றுக் கொள்ளாது உயர்மட்ட அறிவித்தல் என்று கூறியதுடன் ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்னர் கொண்டு வந்து மீண்டும் பொருத்துவதாக பாடசாலையில் திரண்டிருந்த மக்களுக்கு வாக்களித்து விட்டு எடுத்துச் சென்றார்கள். ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் முடிந்து உள்ளூராட்சி தேர்தலை மக்கள் எதிர்பார்த்து உள்ளார்கள் ஆனால் ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை கழட்டிய குழுவினர்கள் வாக்களித்தது போல் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஸ்மார்ட் வகுப்பறை தொழில்நுட்ப உபகரணங்களை மீளவும் பொருத்தது காலம் கடத்துவதை இட்டு பாடசாலை பிள்ளைகள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளன.
இது விடயமாக கட்சியின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்த போதிலும் அம்பாறை மாவட்டத்தில் ஸ்மார்ட் வகுப்பறை தொழில்நுட்ப உபகரணங்களுக்காக தெரிவு செய்யப்பட்ட எட்டு பாடசாலைகளும் இதனை கனவாக நினைத்து மறந்து விடுமாறு கூறினார்கள். அம்பாறை மாவட்டத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அதன் கூட்டுக் கட்சிகளுடன் இணைந்து கேட்டதனால் அதிகமான வாக்குகளை பெற்றுக் கொண்டது ஆனால் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அமைப்பாளர்களின் ஆலோசனையை கேட்டு கூட்டு கட்சிகளுடன் இணைந்து கேட்காது தனித்து கேட்டதனாலும் அமைப்பாளர்கள் சிறப்பாக இயங்காத காரணத்தினாலும் கட்சியின் செல்வாக்கில் பின்னடைவு ஏற்பட்டது.
இதன் காரணமாக கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஸ்மார்ட் வகுப்பறை தொழில்நுட்ப உபகரணங்களை ஜனாதிபதி தேர்தலை காரணம் காட்டி தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் பூட்டுவதாக பாடசாலை பிள்ளைகளுக்கும் ஊர் மக்களுக்கும் வாக்குறுதி அளித்து எடுத்துச் சென்றனர். ஜனாதிபதி தேர்தல் மட்டுமல்ல பாராளுமன்ற தேர்தலும் முடிந்து விட்டது. ஆனால் வாக்குறுதியை நிறைவேற்றாது தட்டிக் கழித்து வருவது கல்முனை பிரதேச மக்கள் மத்தியில் சவால் மிக்க பேசும் பொருளாக தற்போது இருந்து வருகிறது.
கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்யாலயத்தில் பொருத்தி தேர்தலை காரணம் காட்டி கழட்டிய ஸ்மார்ட் வகுப்பறை தொழில்நுட்ப உபகரணங்களை உள்ளூராட்சி தேர்தலுக்கு முன் மீண்டும் பொருத்தி மக்களுக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்றுமாறு கல்முனை தொகுதி ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் இணைப்பாளர் ஏ.அப்துல் கபூர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசாவுக்கு எழுதி அனுப்பியுள்ள கடிதத்தில் கேட்டுள்ளார்.
Post a Comment
Post a Comment