அம்பாரை மாவட்டத்தில் அடைமழை




 


வி.சுகிர்தகுமார்   

 அம்பாரை மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக வெள்ள அனர்த்த நிலை ஏற்பட்டுள்ள நிலையில் சேனநாயக்க சமுத்திரத்தில் இருந்து 5 வான் கதவுகளின் ஊடாக மேலதிக நீர் வெளியேற்றப்படுவதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் எம்.ஏ.சி.எம் றியாஸ் தெரிவித்துள்ளார்.
5 வான்கதவுகளின் ஊடாக 9 அங்குல நீர் வெளியேறி வருவாதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம் தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் வெள்ள அனர்த்த நிலைக்கு முகம்கொடுக்கும் வகையில் முன்னாயத்த நடவடிக்கைகளை பிரதேச செயலாளர்கள் எடுக்குமாறும் மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம அறிவித்துள்ளார்.
அம்பாரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் துரித நடவடிக்கைகளை எடுக்குமாறும் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் உள்ளிட்ட அதிகாரிகளை பணித்துள்ளார்.
வெள்ள அனர்த்த நிலை தொடர்பில் ஆலயங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவுப்பினையும் பிரதேச செயலாளர் வழங்கி வருகின்றார்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் பெரும்பாலான வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் ஆலயங்கள் மற்றும் குடியிருப்புக்களிலும் அரச அலுவலங்களிலும் வெள்ளம் உட்புகுந்துள்ளது.
இதனால் மக்களின் அன்றாட நடவடிக்கைளும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களை அரச அதிகாரிகள் பார்வையிட்டு வருவதுடன் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் றதீசனும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.