ஸ்ரீ சத்திய சாய் சஞ்சீவனி வைத்தியசாலை கடந்த 18 மாதங்களில் 2000 பேருக்கு இருதய சிகிச்சைகள்




 



(வி.ரி. சகாதேவராஜா)


மட்டக்களப்பு கிரான்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்திய சாய் சஞ்சீவனி வைத்தியசாலை கடந்த 18 மாதங்களில் 2000 பேருக்கு  இருதய சிகிச்சைகளை முற்றிலும் இலவசமாக செய்துள்ளது.  அதேவேளை தற்போது இலவச இருதய மாற்று சத்திரசிக்சைக்கூடமும்   திறந்து வைக்கப்பட்டுள்ளது 

இது வடக்கு கிழக்கு மக்களுக்கு அரியதொரு வரப் பிரசாதமாகும்.


இவ் வைத்தியசாலை கடந்த 01.06.2023 அன்று தனது கெத் லேப் சேவையினை ஆரம்பித்தது . 18 மாதங்கள் கடந்த நிலையில் 2000 நோயாளர்களுக்கு மேல இலவச இருதய சிகிச்சைகளை மட்டக்களப்பு போதான வைத்தியசாலை இருதய மருத்துவப் பிரிவுடனும் கல்முனை ஆதார வைத்தியசாலை வசதிகளையும் பயன்படுத்தி மிகச் சிறப்பாக செயல்பட்டுவருகின்றது. 

இங்கே முற்றுமுழுதாக இலசவ சேவையே வழங்கப்பட்டு வருகின்றது .

இதன் அடுத்த கட்டமாக இருதயமாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான சத்திரசிகிச்சைக் கூடம் மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு என்பன கடந்த 04.01.2025 அன்று இவ் வைத்தியசாலையின் நிறுவுனர் சற்குரு. மதுசூதனன் சாய் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

இந் நகழ்வில் கிரிக்கட் ஜாம்பவான்களான அரவிந்தடி சில்வா, முத்தையா முரளிதரன், சமிந்தவாஸ, அஜந்த மென்டிஸ் மற்றும் இவ் வைத்தியசாலையின் இலங்கை தலைமை அதிகாரி பென்னி ஜெயவர்த்தன, வைத்தியசாலை பணிப்பாளர் ரமேஸ் ராவ் இவ்வைத்தியசாலையின் பொது முகாமையாளர் டேவிட் சில்வஸ்டர் மற்றும் இவ் வைத்தியசாலையின் பணிப்பாளர்களான டீபால் விக்ரமசிங்க, சுதர்சனம் தர்மரெட்ணம், நிசாந்த ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இவர்களுடன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் இரா. முரளீஸ்வரன், மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி. ஜே.ஜே.முரளிதரன், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் கு.சுகுணன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் க.கலாரஞ்சினி மற்றும் இவ் விழாவின் கதாநாயகர்களான இருதய வைத்திய நிபுணர்களான மருத்துவர் வினோதன் மற்றும் மருத்துவர் ரஜீவன் பிரான்சிஸ் அவர்களும் அவர்களது சக உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

எமது கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் இச் சேவையானது பெரும் வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும் கடந்த காலங்களில் மட்டக்களப்பில் இருந்து யாழ்பாணம் சென்றே இச் சேவையினை மட்டக்களப்பு வைத்தியசாலை இருதய சிகிச்சைப் பிரிவு மேற்கொண்டு வந்திருந்தது தற்போது எமது பிரதேசத்திலும் இச் சேவை காணப்படுவதனால் மிக வேகமாக எமது மக்களுக்கு சேவை வழங்க கூடியதாக உள்ளது.

இங்கே வைத்திய நிபுணர் மருத்துவர் வினோதன் கூறுகையில்..

 “ முன்பு நாங்கள் மாதம் மாதம் குறிப்பிட்ட சிலரை யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பியே இதனை செய்து வந்தோம் தற்பொழுது இங்கே 18 மாதங்களுக்குள் நாங்கள் 2000 பேருக்கு மேல் இச்சேவையை திறன்பட செய்துள்ளோம் இதே போன்று 2000 பேரை மாதம் மாதம் கடந்த காலங்களை போல எந்த தடையும் இன்றி யாழ்ப்பாணம் அனுப்பி இதனை மேற்கொண்டிருந்தால் இந்த 2000 பேருக்கும் சிகிச்சையளிக்க 6 வருடங்களுக்கு மேல் தேவைப்பட்டிருக்கும்” என்று குறிப்பிட்டார் இது மாபெரும் சாதனையாகவே இங்கு பார்க்கப்படுகின்றது.

மட்டக்களப்பு வைத்தியசாலை இருதய சிகிச்சைப்பிரிவு உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் எமது பிரதேசம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளது. மற்றும் இவளவு பெறுமதிமக்க இயந்திரங்கள் வசதிகள் கட்டிடங்களை எமக்கு இலவசமாக வழங்கி வரும் சத்திய சாய் சஞ்சீவனி வைத்தியசாலை நிர்வாகத்திற்கும் எமது நன்றிகளும் பாராட்டுக்களும்.

எதிர்வரும் நாட்களில் இலவச இருதய அறுவை சிகிச்சைகளும் இங்கே மேற்கொள்ளப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கிழக்கு மாகாணத்திற்கு மட்டும் இல்ல முழு இலங்கை மக்களுக்குமாக இலவச இருதய சிகிச்சை வைத்தியசாலை விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.