(வி.ரி. சகாதேவராஜா )
காரைதீவில் 2004 சுனாமியில் உயிர்நீத்த 867 பேரை நினைவுகூர்ந்து காரைதீவு கடற்கரையில் றிமைன்டர் விளையாட்டு கழகத்தினரால் நிறுவப்பட்ட நினைவுத்தூபி முன்றலில் இந்து சமய விருத்திச் சங்கத்தினரால் பொதுவான ஆத்ம சாந்தி பிரார்த்தனை வைபவம் இன்று (26) வியாழக்கிழமை காலை உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
சங்கத் தலைவர் எஸ்.மணிமாறன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ. ஜெகராஜன் கலந்து சிறப்பித்தார்.
காரைதீவு பிரதேச செயலாளர் ஜி.அருணன், உதவி பிரதேச செயலாளர் எஸ்.பார்த்தீபன், காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எஸ்.ஜகத், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
ஆன்மீக அதிதிகளாக பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள்,
சிவஸ்ரீ சாந்தரூபன் குருக்கள், சிவஸ்ரீ தர்சன் குருக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அங்கு ஆத்மார்த்த சுனாமி ஒளிதீபம் ஏற்றியதோடு அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.
நினைவுத் தூபிக்கு மலர் மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது. விசேட பூஜையுடன் கடலுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
உயிர் நீத்த உறவுகளுக்கான மௌனஅஞ்சலி நிகழ்த்தப்பட்டது.
ஆலய பிரமுகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் உயிர் நீத்த உறவுகளின் உறவுகள் கலந்து கொண்டனர்.
இந்துசமுத்திரத்தை உலுக்கிய ஆழிப்பேரலைக்கு இன்று (26) வியாழக்கிழமை அகவை இருபதாகியது.
அதனையொட்டி நாடெங்கிலும் துவி தசாப்த சுனாமி தின வைபவங்கள் நடாத்தபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
Post a Comment