பொலிவேரியன் மக்களுக்கு நேசக்கரம்






 நூருல் ஹுதா உமர்


சீரற்ற காலநிலையால் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் பெருமளவு பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்திலுள்ள எகெட் வீட்டுத்திட்ட குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (10) சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலக  உத்தியோகத்தர்களின் நிதி பங்களிப்புடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளரும் நலன்புரி அமைப்பின் தலைவருமான எம்.எம். ஆஷிக் தலைமையில் இடம்பெற்றது.

ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக இக்குடும்பங்களின் பாடசாலை செல்லும் பிள்ளைகளின் கற்றல் உபகரணங்கள் உட்பட உடமைகளும் பெருமளவு சேதமடைந்துள்ளன. பாடசாலை செல்லும் பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைக்கு உடன் உதவுமுகமாக பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் உள்ளிட்ட நலன்புரி அமைப்பின் உறுப்பினர்கள் மேற்கொண்ட துரித நடவடிக்கையை அடுத்து 100 பிள்ளைகளுக்கு இக்கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முவஃப்பிகா, சமுர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம், நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம். ரம்ஸான், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் ஏ.சீ.முஹம்மட், நிதி உதவியாளர் ஏ.எம்.றியாஸ் உள்ளிட்ட கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நலன்களுக்காக செயற்பட்டு வந்த பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் நலன்புரி அமைப்பானது முதற் தடவை பிரதேச செயலாளரும் நலன்புரி அமைப்பின் தலைவருமான எம்.எம். ஆஷிக் அவர்களின் தூர நோக்கு சிந்தனை காரணமாக இந்த உதவித் திட்ட செயல்பாடு வெற்றிகரமாக இடம்பெற்றது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  சாய்ந்தமருது மற்றும் பொலிவேரியன் மக்களுக்கு இரவு பகல் பாராது கடமையாற்றிய பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் உள்ளிட்ட உத்தியோகத்தர்களுக்கு பொதுமக்கள் இதன்போது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.