பாறுக் ஷிஹான்
மருதமுனை 65 மீட்டர் சுனாமி மீள்குடியேற்றக் கிராமத்தில் கல்முனை மாநகர சபையினால் அண்மையில் வடிகான் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த மழை காலங்களில் வெள்ளத்தில் மூழ்கித் தத்தளிக்கும் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை பிரிவிற்குட்பட்ட மருதமுனை 65 மீட்டர் கிராமத்தின் நீண்ட காலப் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் முகமாக மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் வடிகான் நிர்மாணப் பணிகளை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் கண்காணிப்பு விஜயம் செய்து பார்வையிட்டுள்ளார்.
வெள்ள அனர்த்த பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு இங்கு கல்முனை மாநகர சபையினால் 05 முக்கிய இடங்களில் வடிகான்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் ஊடாக இப்பிரதேசத்தில் உள்ள அனைத்து வடிகான்களும் இணைக்கப்பட்டு வடிகான் கட்டமைப்பு முழுமைப்படுத்தப்படவுள்ளது.
இப்பிரதேச மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வருகின்ற இப்பிரச்சினைக்கான இவ்வேலைத் திட்டத்தை துரிதமாக நிறைவு செய்யுமாறு மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் கண்காணிப்பு விஜயத்தின் போது உரிய தரப்பினரை அறிவுறுத்தியுள்ளார்.
இதன் போது கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜெளசி, கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ் வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம், தொழில் நுட்ப உத்தியோகத்தர் எம். சுகுமார் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றிருந்தனர்.
மேலும் கல்முனை மாநகர சபை துரிதமாக இப்பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுத் தந்திருப்பதையிட்டு இப்பகுதி மக்களும் நலன் விரும்பிகளும் மாநகர ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.
Post a Comment
Post a Comment