செயலமர்வு




 



பாறுக் ஷிஹான்

 
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஏற்பாட்டில்  ஊடக அடிப்படையிலான போதைப்பொருள் தடுப்பு செயலமர்வு  இன்று(19)  சம்மாந்துறை பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். ரஷாத் ஒருங்கிணைப்பில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஊடகத்துறை சார்ந்த நிபுணர்களின் நுண்ணறிவு விளக்கங்கள் இந்த செயலமர்வில்  இடம்பெற்றதுடன் விவாதங்கள் மற்றும் கேள்வி பதில் அமர்வுகளும் நடைபெற்றது.

போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் அதன் அழிவுகரமான விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த செயலமர்வில் ஊடகவியலாளர்களின் பங்கேற்பானது போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்கான எங்களின் கூட்டு முயற்சிகளுக்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் என   தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம். ரஷாத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி நௌபர் ஆரம்பித்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ராசிக் நபாயிஸ், ஏ.ஜெ.எம். இக்ராம் உட்பட ஊடகவியலாளர்கள், சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.