பாலமுனை பிரதேச வைத்தியசாலைக்கு வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடல்




 




நூருல் ஹுதா உமர்


பாலமுனை பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடுவதற்காக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவ்வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.

குறித்த வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினருக்கும் பிராந்திய பணிப்பாளருக்குமிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. குறைந்த வளங்களுடன் பெரும் பணிகளை மேற்கொண்டு பிராந்தியத்தில் முதல் நிலை பெற்றுள்ள பாலமுனை வைத்தியசாலையின் சேவைகளை பாராட்டி பேசிய பணிப்பாளர் அங்குள்ள வைத்தியர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன், வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்ட பணிப்பாளர் அதில் முடியுமானவற்றை விரைவில் நிவர்த்தி செய்து தருவதாகவும் உறுதியளித்தார். அத்துடன் வைத்தியசாலையின் சில பிரிவுகளுக்கும் சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிட்டார்.

குறித்த நிகழ்வுகளில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர், பாலமுனை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.ஹரிஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.