காரைதீவுக்கான குடிநீர் பிரச்சினை விவகாரம்,விகாரமானது





 ( வி.ரி.சகாதேவராஜா)


கடந்த 10 நாட்களாக காரைதீவுக்கான குடிநீர் விநியோகம் முற்றாக தடைப்பட்டு இருப்பது குறித்து அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் நேற்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் கவனத்திற்கு கொண்டு வந்தார் .

அத்துடன் பிரதம மந்திரிஹரணி அமரசூரிய மற்றும் அனர்த்த முகாமைத்துவ  அமைச்சரின் கவனத்திற்கும் நேரடியாகவே கொண்டு வந்திருந்தார்.

அதுதவிர, பாராளுமன்றத்தில் இரவுநேரம் இடம் பெற்ற அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான சபை அமர்வு நேரத்தில் மூன்று நிமிடங்கள் காரைதீவு குடிநீர் பிரச்சினை தொடர்பாக உரையாற்றி இருந்தார்.

காரைதீவு மக்கள் இப் பிரச்சினையால் சொல்லொணாத் துன்பத்திற்கு முகங் கொடுத்து வருகிறார்கள்.
உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தும் வேகம் போதாது.அதனால் இன்னும் அப் பணி முற்றுப் பெறவில்லை.

அதன்படி விரைவாக இந்த பிரதான குழாய் திருத்த வேலைகளை நிறைவு செய்து நீர் வினியோகம் இடம்பெறவேண்டும். அதுவரை அம்பாறையில் இருந்து விசேட பவுசர்கள் மூலம் காரைதீவுப்பிரதேசத்திற்கு குடிநீர் வழங்க ஆவன செய்யப்படும் என்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அவரிடம் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால்  உடைக்கப்பட்ட பாரிய நீர்க்குழாய் திருத்த வேலைகள்  தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும் அப் பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

எனவே உடனடியாக திருத்தி பாதிக்கப்பட்ட காரைதீவு மக்களுக்கு குடிநீரை வழங்க வேண்டும் என அவர் நேற்று பாராளுமன்றிலும் மற்றும் விசேட சந்திப்பிலும் கேட்டுக் கொண்டார்.கடந்த பத்து நாட்களாக காரைதீவு பிரதேசத்திற்கு குடிநீர் விநியோகம் முற்றாக இடம்பெறவில்லை.
 
சம்மாந்துறை பிரதேசத்தின் 
நயினாகாட்டை அடுத்துள்ள சுரிப்போடு முந்தல் என்ற வடசேரி பிரதேசத்தில் உள்ள பாரிய குழாய் தகர்க்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.