மருதமுனை மஸ்ஜிதுந் நூர் பள்ளிவாசலில் ஹவ்ளு மற்றும் நவீன கழிவறைத் தொகுதி திறந்துவைப்பு




 



மாளிகைக்காடு செய்தியாளர்

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மருதமுனை மஸ்ஜிதுந் நூர் ஜுமுஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றுவரும் பாரிய அபிவிருத்திப் பணிகளில் ஓர் அங்கமாக மிக நீண்ட நாள் தேவையாக உணரப்பட்டுவந்த  ஹவ்ளு மற்றும் நவீன கழிவறைத் தொகுதியை மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கும் நிகழ்வு இஷாத் தொழுகையைத் தொடர்ந்து பள்ளிவாசலின் பிரதம நம்பிக்கையாளர் எம்.ஐ.எம் முகர்ரப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

பள்ளிவாசலின் பேஷ் இமாம் அஷ்ஷெய்க் ஏ.ஆர்.எம் ஜரீர் (பஹ்மி) அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் விசேட அழைப்பாளராக கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியின் அதிபர் சங்கைக்குரிய ஆலிம் அஷ்ஷெய்க் அஷ்ரப் (ஷர்கி) அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு பயான் மற்றும் துஆப் பிரார்த்தனையையும் மேற்கொண்டார்கள்.

தலைமை உரையாற்றிய பள்ளிவாசலின் பிரதம நம்பிக்கையாளர் எம்.ஐ.எம் முகர்ரப் அவர்கள் தனது உரையில் தான் பள்ளிவாசலின் பிரதம நம்பிக்கையாளராக தெரிவு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டது முதல் இதுவரை காலமும் பள்ளிவாசலில் நடைபெற்றுள்ள பாரிய அபிவிருத்தி பணிகளை ஞாபகமூட்டி குறித்த அபிவிருத்திப்பணிகளுக்கு பொருள் உதவி நல்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்காகவும் விசேடமாக மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படும் ஹவ்ளு மற்றும் கழிவறைத் தொகுதிக்கான தேவையை உணர்ந்து அதனை நிர்மாணிப்பதற்கான பொருள் உதவியை ஏற்பாடுசெய்து தொழில்நுட்ட ஆலோசனைகளையும் வழங்கிய ஜக்கிய அறபு இராச்சியத்தில் பணிபுரியும்  பொறியியலாளர் அல்-ஹாஜ் சமது அவர்களுக்கும், குறித்த கட்டுமான வேலைகளை மிகக் குறுகிய காலத்துக்குள் நிறைவு செய்வதில் பல்வேறு வழிகளிலும் அளப்பரிய பங்களிப்புக்களை நல்கிய பள்ளிவாசலின் செயலாளர் ஏ.ஏ.புழைல் மற்றும் மரைக்காயர்களான எம்.எப்.எம்.மர்சூக் , எம்.ஐ எம். வலீத் ஆகியோருக்கும் தமது நன்றிகளையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்தார். மேலும் பள்ளிவாசலில் மீதமாக நிறைவு செய்யப்படவேண்டிய பள்ளியின் கிழக்கு முகப்பை தான் தனது சொந்த நிதியிலிருந்து உடனடியாகக் கட்டி முடிப்பதற்கு ஆவன செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

ஹவ்ளு மற்றும் நவீன கழிவறைத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 05.06.2024 ஆந் திகதி ஆரம்பித்துவைக்கப்பட்டு அதன் கட்டுமானப் பணிகள் குறுகிய கால இடைவெளிக்குள் முடிவுறுத்தப்பட்டமை தொடர்பில் பள்ளிவாசல் ஜமாஅத்தினர், மஹல்லாவாசிகள் தமது மகிழ்ச்சியையும் நன்றிகளையும் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு தெரிவித்தனர்.

இந் நிகழ்வில் பொருளாளர் எம். றபாயுத்தீன் , மரைக்காயர் எம்.எப். ஹிபதுல் கரீம் உள்ளடங்கலாக பள்ளிவாசலின் முன்னாள் தலைவர்கள், நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், மரைக்காயர்கள் , ஜமாஅத் உறுப்பினர்கள், மகல்லாவாசிகள், நலன்விரும்பிகள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.