சின்னமுகத்துவாரம் அகழ்ந்து விடப்பட்டது




 



வி.சுகிர்தகுமார்  

 அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் பெய்துவரும் பலத்த மழை காரணமாக தாழ் நில பிரதேசங்களில் உள்ள சில வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளதுடன் அக்கரைப்பற்று சந்தை பகுதி உள்ளிட்ட பல வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
சில நாட்கள் முன் ஆரம்பித்த பலத்த மழை இன்று (24) காலையிலும் தொடரும் நிலையில் மீண்டும் மழை பெய்யவதற்கான சாத்தியகூறுகள் காணப்படுகின்றது.
ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று. அட்டாளைச்சேனை, திருக்கோவில், பொத்தவில், கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களில் இவ்வாறு மழை பெய்து வருகின்றது.
இதனால் மக்களது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்திலும் பல தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் விளையாட்டு மைதானங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவி;ற்குட்பட்ட வெள்ளநீர் வழிந்தோடும் பிரதான கழிமுகப்பிரதேசமான சின்னமுகத்துவாரத்தின் கீழாக சல்வீனியா தாவரம் சூழ்ந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இதனை அகற்றி வெள்ள நீரை வழிந்தோடச் செய்யும் பணிகளை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் இன்று காலை முன்னெடுத்துள்ள நிலையில் கனரக வாகனங்கள் உதவியுடன் கழிமுகப்பிரதேசம் அகழ்ந்து விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.