வி.சுகிர்தகுமார்
அம்பாரை மாவட்ட பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற வேண்டும் எனும் ஒரே நோக்குடன் போட்டியிட்டு வெற்றிக்கு காரணமாக செயற்பட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் நன்றி கூறுவதுடன் தமிழரசுக்கட்சியுடனும் தமிழ்த்தேசியத்துடன் பயணிக்கும் ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் நான் தலை வணங்குகின்றேன் என அம்பாரை மாவட்டத்தின் தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் ஏற்பாட்டில் நேற்று (18) மாலை இடம்பெற்ற பாராளுமன்ற உறுப்பினரை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில் இத்தேர்தலில் அம்பாரை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவத்தை இழக்கச் செய்யும் நோக்கில் பல கட்சிகள் உள்நுழைந்தனர். அம்பாரை மாவட்ட மக்களின் கடந்தகால நிலை தெரிந்தும் அவர்கள் களம் இறங்கினர். ஆனாலும் தன்மானமுள்ள தமிழ் மக்கள் தமிழரசுகட்சிக்கு வாக்களித்து பிரதிநிதித்துவத்தை காப்பாற்றியுள்ளனர் என்றார்.
இதன் அடிப்படையில் எதிர்வரும் ஐந்து வருடங்கள் எனது சேவை நேர்மையானதாகவும் நீதியானதாகவும் நியாயமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் தொடரும் எனவும் குறிப்பிட்டார்.
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் தலைவர் பி.தணிகாசலம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பொன்னாடை போர்த்தி மாலை அணிவிக்கப்பட்டு கௌரவத்துடன் வரவேற்க்கப்பட்டார்.
தொடர்ந்து மன்றத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளிலும் கலந்து கொண்டார். இதன் பின்னராக இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அவரை பலரும் பாராட்டி பேசியதுடன் தமிழ் மக்களின் இருப்பை பாதுகாக்கும் செயற்பாட்டில் ஈடுபடவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
நிகழ்வில் மன்றத்தின் சிரேஸ்ட தலைவர் வே.சந்திரசேகரம் உள்ளிட்ட நிருவாகத்தினர் மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment