சின்னமுத்து தடுப்பூசி வழங்கும் பிரதான நிகழ்வு




 



நூருல் ஹுதா உமர்


சின்னமுத்து நோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு சுகாதார அமைச்சு நாடளாவிய ரீதியில் விசேட தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டமொன்றினை முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் 31 தடுப்பூசி வழங்கும் மையங்களில் சின்னமுத்து தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

குறித்த தடுப்பூசியை வழங்கும் பிரதான நிகழ்வு சனிக்கிழமை (9) அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியில் இடம்பெற்றது. கல்விக் கல்லூரின் உப பீடாதிபதி எம்.சீ.ஜுனைடீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.சீ.எம்.பஸால், அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.இஸ்ஸதீன், மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.நௌபல் உள்ளிட்ட சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. சின்னமுத்து நோய் தொடர்பாகவும் தடுப்பூசியின் அவசியம் குறித்தும் தொற்று நோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.சீ.எம்.பஸாலினால் விளக்கமளிக்கப்பட்டது.