மோசமடையும் பாஸ்போர்ட் நெருக்கடி!






 கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், மோசடி கும்பல்களின் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளதால் மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.


குடிவரவு திணைக்களத்துக்கு முன்பாக உருவாகியுள்ள வரிசையில் முன்வரிசை பிடிப்பதற்கு குழுவொன்று 5,000 ரூபாவை அறவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளாந்தம் சுமார் 2,000 பேர் கடவுச்சீட்டினை பெற வரிசையில் காத்திருக்கின்றனர். அத்துடன் 1,000 பேர் கடவுச்சீட்டுக்கான திகதி வழங்கப்படும் டோக்கனுக்காக நிற்கின்றனர்.


இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் கும்பல் முன்வரிசைக்குள் நுழைவதற்கு 5,000 ரூபா அறவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.


போதைக்கு அடிமையானவர்களை அதிகாலையில் இருந்து வரிசையில் நிறுத்தி வைப்பதாகவும் மதிய வேளையில் அந்த இடத்தை 5,000 ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு தேவையானவர்களுக்கு வழங்குவதாகவும் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில் பாஸ்போர்ட் வரிசை இருக்குமிடத்தை அண்டிய பகுதிகளில் உணவுப் பொருட்களும் அதிக விலையில் விற்கப்படுவதாக சொல்லப்படுகிறது. தூர இடங்களில் இருந்து வருவோர் மழை, வெயிலைக்கூட பொருட்படுத்தாமல் அவதியுடன் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.


இதேவேளை, தேசிய அடையாள அட்டையின் சேவைகளும் பாதிப்படையக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அட்டைகளை பெறும் நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ஒருநாள் சேவை அங்கு தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக அறியமுடிந்தது. விசேட செயலி ஒன்றினூடாக மக்களுக்கு சேவைகளை வழங்க ஆட்பதிவுத் திணைக்களம் ஆலோசித்து வருவதாக அறியமுடிகின்றது.