பாறுக் ஷிஹான்
ஊம்பல்(ஹம்மிங் மீன்) என கூறப்படும் ஒரு வகையான மீனினங்கள் கரையொதுங்கி இறப்பதன் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை பகுதி கடற்கரை பகுதிகளில் துர்நாற்றம் வீசி வருகின்றது.
அண்மைக் காலமாக கிழக்கு மாகாண கடலில் கரையொதுங்கி வரும் ஊம்பல் மீன்கள் எனப்படும் மீன் இனங்கள் இறந்த நிலையில் அப்பகுதியில் கரையொதுங்குவதனால் இவ்வாறு துர்நாற்றம் வீசுகின்றது.
இதன்காரணமாக அப்பகுதி மீனவர்கள் முதல் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.காலநிலை மாற்றம் மற்றும் கடலில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றம் காரணமாக இவ்வாறான மீன்கள் கரை ஒதுங்குவதாக மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.அத்துடன் இம்மீன் இனம் கடந்த பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு பின்னர் கரை ஒதுங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் முக்கிய பகுதிகளில் உள்ள கடற்கரை பிரதேசங்களில் இவ்வாறு மீனினங்கள் கரையொதுங்கி வருவதுடன் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மீன் இனமே இவ்வாறு கரை ஒதுங்கி இறந்து கிடக்கின்றன.
நாவல் - கறுப்பு நிறம் கொண்ட மீன்கள் பல்லாயிரக் கணக்கில் இறந்து கரையொதுங்கியுள்ளதுடன் 25 சென்மீட்டர் நீளமுள்ள இவ்வகை மீன் இனமானது அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையில் கலிபோர்னியாவிலிருந்து அலாஸ்கா வரை வாழ்கின்றன.
இவ்வகையான மீன் இனம் தங்களது இனத்தை பெருக்கி கொள்வதற்காக காலநிலை மாற்றங்களின் போது கற்பாறைகளினுள் இருந்து வெளிப்படுவதுடன்
பெரும்பாலும் இவை இரவு வேளைகளிலேயே கரைக்கு வருவது வழமை என்றும் இந்த மீன்கள் ஒரு வகையான இரைச்சல் சத்தத்தினை ஏற்படுத்தக் கூடியது எனவும்
அமெரிக்க பகுதிகளில் வாழும் இவ்வகையான மீன் இனம் சுமார் 15 வருடங்களுக்கு பிறகு கிழக்கு கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்குகிறது என இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உயிரியல் விஞ்ஞானங்கள் பிரிவு மற்றும் பிரயோக விஞ்ஞான பிரிவு தலைவரும் சிரேஸ்ட விரிவுரையாளருமான ஏ.எம். றியாஸ் அகமட் தெரிவித்துள்ளார்.
இந்த மீன் இனம் பற்றி உறுதியாக எதுவும் தெரியாததால் இதனை சாப்பிட வேண்டாம் என அங்கிருக்கும் மீனவர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இவ்விடயம் மீனவர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் வாதப் பிரதிவாதங்களையும் சில வகையான ஐயங்களையும் தோற்றுவித்துள்ளன.
Post a Comment
Post a Comment