R.SANATH
இலங்கை அரசியல் வரலாற்றில் பிரதி சபாநாயகர் பதவிக்கு முதன்முறையாக பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவுசெய்வதற்கு இருந்த வாய்ப்பு இம்முறையும் இல்லாமல்போயுள்ளது.
இதன்படி 10 ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் ரிஸ்வி சாலி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
10 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமானது.
நாடாளுமன்ற செயலாளரின் அறிவித்தலின் பின்னர் சபாநாயகர் தேர்வு இடம்பெற்றது.
10 ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக சபுமல் ரன்வல ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
சபாநாயகர் பதவிக்கு அவரின் பெயரை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய முன்மொழிந்தார். அதனை அமைச்சர் விஜித ஹேரத் வழிமொழிந்தார். ஏனைய எந்தவொரு உறுப்பினரின் பெயரும் முன்மொழியப்படவில்லை. இதனையடுத்து சபாநாயகர் பதவிக்கு அவர் ஏகமனதாக தெரிவானார்.
அதன்பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்தனர்.
சபாநாயகரின் உரையைதொடர்ந்து பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்குரிய அழைப்பு விடுக்கப்பட்டது.
இதன்போது பிரதி சபாநாயகர் பதவிக்கு மொஹமட் ரிஸ்வியின் பெயரை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்மொழிந்தார். அதனை அமைச்சர் சரோஜா போல்ராஜ் வழிமொழிந்தார். ஏனைய வேட்பாளர்களின் பெயர்கள் முன்மொழியப்படாத நிலையில் அவர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குழுக்களின் பிரதி தவிசாளர் பதவிக்கு பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியைக்கூட பெண்ணொருவர் வகித்துள்ளார் (சந்திரிக்கா). அதேபோல உலகின் முதல் பெண் பிரதமரும் இலங்கை மண்ணில் இருந்துதான் தேர்வானார். (ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க) . எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் பெண் எம்.பி. வகித்துள்ளார்.
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவிகளையும் வகித்துள்ளனர்.
ஆனால் முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற 1947 முதல் இற்றைவரை சபாநாயகராகவோ அல்லது பிரதி சபாநாயகராகவோ பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவாகவில்லை. 2018 இல் பிரதி சபாநாயகர் பதவிக்கு வைத்தியர் சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே போட்டியிட்டிருந்தாலும் அவர் வெற்றிபெறவில்லை. கடந்த நாடாளுமன்றத்தில் ரோஹினி கவிரத்ன போட்டியிட்டாலும் அவரும் வெற்றிபெறவில்லை.
இம்முறை 22 பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் பெண்ணொருவர் பிரதி சபாநாயகர் பதவிக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. அது நடக்கவில்லை. ஆனாலும் குழுக்களின் பிரதி தவிசாளர் பதவி பெண் எம்.பியொருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆர்.சனத்
Post a Comment
Post a Comment