பாராளுமன்ற தேர்தலில் வேறு விரலில் மை பூசப்படும் !






 ( வி.ரி. சகாதேவராஜா)


அண்மையில் ஜனாதிபதி தேர்தலில் பூசிய மை சிலவேளை அழியாமலிருக்கலாம். அதற்காக எதிர்வரும்  பாராளுமன்ற தேர்தலில் வேறொரு கைவிரலில் மை பூசப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிந்தக உடகம தெரிவித்தார் .

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவும் தகவல் தொடர்பாடல் அமைச்சும் சேர்ந்து அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கை இன்று(18) வெள்ளிக்கிழமை அம்பாறையில் நடத்தியது .

அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற இந்த அமர்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம தலைமை வகித்தார்.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன்  உதவி தேர்தல் ஆணையாளர் கசுன் அத்தநாயக்க மற்றும் தகவல் தொடர்பாடல் அமைச்சின் உதவி பணிப்பாளர் திலகரத்ன  நீதிக்கும் புலனாய்வுக்குமான மேலதிக ஆணையாளர் குலரத்ன
 உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள் .


அங்கே எதிர்வரும் தேர்தல் தொடர்பாக பல சட்ட திட்டங்கள் ஊடகவியலாளர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைமைகள் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் போன்றவை விலாவாரியாக கூறப்பட்டது .

தேர்தலும் ஊடகமும் ஒன்றுதான் ஒரு காலத்தில் ஊடக பொறுப்பு என்பது குறைவாக இருந்தது. இன்று சமூக ஊடகங்கள் அனைத்தும் சேர்ந்து மிகவும் உன்னிப்பாக அவதானித்து உள்ளது.
 இன்று பத்திரிகை வாசிப்பு குறைந்து வருகின்றது .நாங்கள் அன்றும் இன்றும் பத்திரிகை ஊடாகத்தான் மொழி அறிவு விமர்சன அறிவு போன்றவற்றை அறிந்தோம் .அது ஒரு கலை .ஆனால் இன்று பல ஊடகங்கள் பொய்யை தொடர்ந்து சொல்லுகின்றதால் மக்கள் அதனை புறந்தள்ளி வருகிறார்கள். அதற்கு கடந்த ஜனாதிபதித் தேர்தல் உதாரணமாகும்.

எனவே ஊடக தர்மத்துடன் தேர்தலை அணுக  வேண்டும். வாக்குச்சாவடிக்குள் எந்த காரணம் கொண்டும் புகைப்படமோ வீடியோ எடுக்க முடியாது. வெளியில் அதனை செய்யலாம். ஐந்து பேருக்கு உட்பட்டவர்கள் வேட்பாளர் இல்லாமல் பிரச்சார நடவடிக்கையில் வீடுவீடாக செல்லலாம். வேட்பாளர்கள் புகைப்படம் தரித்த வாகனத்தில் கட்டாயம் வேட்பாளர் இருக்க வேண்டும் . வேட்பாளர்கள் அலுவலகம் அதற்கான சட்டதிட்டங்கள் 
இப்படி பல விடயங்கள் அங்கு கூறப்பட்டது.