தீபாவளி வாழ்த்துக்கள் !




 


 'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம்.


தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது.

 வியாழக்கிழமை என்பது மங்கலகாரகனான குரு பகவானுக்குரிய நாள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அது தவிர இந்த ஆண்டு தீபாவளிக்கு வேறு சில சிறப்புக்களும் உள்ளன. வழக்கமாக பெரும்பாலான ஆண்டுகள் தீபாவளி திருநாள், அமாவாசையுடன் தான் இணைந்து வரும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி மாலை 04.29 மணிக்கு தான் அமாவாசை திதி துவங்குகிறது.

 மிக அரிதாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கான சுபமுகூர்த்த நாளில் அமைந்துள்ளது. அதிலும் அன்று நாள் முழுவதும் சித்திரை நட்சத்திரம் உள்ளது மற்றொரு தனிச்சிறப்பு.

சித்திரை நட்சத்திரம் என்பது சக்கரத்தாழ்வார், சித்ரகுப்தர், விஸ்வகர்மா ஆகியோர் அவதரித்த நட்சத்திரமாக சொல்லப்படுகிறது. இவர்கள் மூவருமே வாழ்க்கையில் வளர்ச்சி, கலைகளில் தேர்ச்சி, பலவிதமான செல்வ நலன்களையும் வழங்கக் கூடியவர்கள். ஞானத்தை அருளும் குரு பகவானுக்குரிய வியாழக்கிழமையில், சித்திரை நட்சத்திரமும் இணைந்த நாளில் இந்த ஆண்டு தீபாவளி வருகிறது. அதிலும் நல்ல விஷயங்களை துவங்குவதற்கு ஏற்ற மங்கலகரமான சுபமுகூர்த்த நாளுடன் வருகிறது. 

அதனால் தீபாவளி அன்று மங்கல பொருட்கள் வாங்கலாமா? எப்போது இருந்து அமாவாசை விரதம் கடைபிடிக்க வேண்டும் என்ற குழப்பம் இந்த ஆண்டு கிடையாது. இந்த ஆண்டு தீபாவளி திருநாளான அக்டோபர் 31 ம் தேதியன்று நாள் முழுவதும் சித்தயோகம் உள்ளதால் தாராளமாக புதிய விஷயங்களை துவங்கலாம்.

அறியாமை என்னும் இருள் நீக்கி வெற்றியையும் ஒளிமயமான சிந்தனையையும் இந்த தீபத் திருநாள் பெற்றுத் தர வேண்டும் 
நரகாசுரனை வதைத்த தினத்தை வீடுகளில் தீபஒளி ஏற்றி மனஇருள் நீக்கி தீபாவளி பண்டிகையாக கொண்டாடும் இத்தருணத்தில் தமிழர்களது பாரம்பரியமான பண்பாடுகளால் நம் திறமைகளை வளர்த்து நாட்டை ஒளி நிறைந்ததாக மாற்ற வேண்டும் என்றும் நல்ல  மழை பொழிந்து வேளாண்மை செழிப்பாக வேண்டும்.

​தீபாவளி அனைவர் வாழ்விலும் ஒளி ஏற்றட்டும்.


வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா 
காரைதீவு