ஹரீஸ் நாடகம் ஆடிக்கொண்டு இருக்கின்றார்




 



பாறுக் ஷிஹான்


கல்முனையை துண்டாட நினைத்து தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்க முயற்சிக்கின்ற எந்தவொரு அரசியல் சக்திக்கும்   எமது கட்சி தலைமையும் எமது கட்சி உறுப்பினர்களும் இடமளிக்க  மாட்டார்கள் என அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல தேர்தலில் தொகுதியில் தமிழரசுக் கட்சி சார்பாக  வீட்டுச் சின்னம் இலக்கம் 1 இல் போட்டியிடும் வேட்பாளரும்  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச் செயலாளருமான  அருள்ஞானமூர்த்தி நிதான்சன்  தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி சார்பாக  வீட்டுச் சின்னம் இலக்கம் 1 இல் போட்டியிடும் வேட்பாளரான அருள்ஞானமூர்த்தி நிதான்சன் தனது  அலுவலகத்தில் இன்று நடைபெற்ற  விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து  கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

இந்த தேர்தல் காலங்களில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முன் வைத்து அரசியல் செய்பவர்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய நோக்கம் எனக்கு இருக்கின்றது.காரணம் யாதெனில் வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக வழக்கு ஒன்று நிலுவையில்  இருக்கின்றது.இதனை எந்தவொரு சக்தியினாலும் முறியடிக்க முடியாது.இந்த வழக்கில் நாங்கள் வெற்றி பெறும் நிலைப்பாட்டில் இருக்கின்றோம்.ஆனால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் என்பவரது கூட்டம் ஒன்றில் தமிழ் மக்களுக்கு எதிரான தீவிரமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.அந்த கருத்துக்கள் யாவும் ஆக்ரோஷமானதாகவும் தமிழ் முஸ்லீம் மக்களின் இனவாதத்தை தூண்டுவதாகவும் அமைந்துள்ளது.

அத்துடன் இவ்வாறான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற வேளை நேரலைகள் வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்டதோடு ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செய்திகளை சேகரிப்பதற்கு தடுக்கப்பட்டிருக்கின்றார்கள்.இதனால் அன்று அவரால் பேசப்பட்ட விடயங்கள் வெளியாகாத நிலையில் அங்கிருந்து தகவல்களை பெற்றிருந்தோம்.அந்த வகையில் தமிழ் மக்களை ஒரு பயங்கரவாதிகளாகவும் வடக்கு பிரதேச செயலகத்தை பயங்கரவாதிகள் கொண்டு வந்த பிரதேச செயலகமாகவும் கூறி சந்தர்ப்பவாத அரசியலையும் அவரது அனுதாப அரசியலையும் மிக கேவலமாக செயற்படுத்த முயற்சி செய்கின்றார்.இதற்காக முஸ்லீம் மக்களை உணர்வு ரீதியாக தூண்டி விட வேண்டும் என்பதற்காகவும் அவர்  தனது சார்பில்  அனுதாப அலையை அதிகரிப்பதற்காகவும் ஊடகங்களின் சுதந்திரத்தை மறுத்தது மாத்திரமன்றி பல இனவாத கருத்துக்களை விதைத்துள்ளார் என்பது எமக்கு அறியக்கிடைத்துள்ளது.

நாங்கள் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்.அவர் இன்று ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸில் இருந்து கொண்டு தற்போது அதில் இருந்து விலகியது போன்று நாடகம் ஒன்றினை ஆடிக்கொண்டு இருக்கின்றார்.கடந்த காலங்களில்  தனது தலையை ரணிலுக்கு காட்டிவிட்டு வாலை சஜீத்திற்கு  காட்டி  இன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு ஹரீஸின்   ஆதரவாளர்களை வேலை செய்ய வைத்துக்கொண்டு அவர்களுக்கான ஆதரவினை வழங்கி அவர்களது மேலங்கிகளை அணிந்து   அவர்களின் பின்னால் நின்று கொண்டு  இன்று ஹரீஸ் அவர்கள் தனது அனுதாப அலையினை உருவாக்கி வருகின்றார்.இது உண்மையான விடயமாகும்.அதுமாத்திரமன்றி கல்முனை பகுதியை பகைமையாக காட்டிக்கொண்டு தனக்கு ஆசனம் வழங்கப்படவில்லை என ஹரீஸ் என்பவர் கூறி இருக்கின்ற போதிலும் இன்று அவரை விட இனவாதியான சக்திகள் உருவாகிக்கொண்டு இருக்கின்றது. 

 கல்முனை பகுதியில் உள்ள ஒரு பொது நூலகத்திற்கு முன்னாள் அமைச்சர்  ஏ.ஆர்.எம் மன்சூர் என்பவரது பெயரை சூட்டுவதற்காக முயற்சி எடுத்த தரப்புக்கள்  தேர்தல் களத்தில் குதித்திருக்கின்றது.ஏ.ஆர்.எம் மன்சூர் என்பவரது மகன் ரஹ்மத் மன்சூர் அவர்கள் இன்று தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார்.அவர்  தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை தீவிரமாக  முன்னெடுத்த கல்முனை மாநகர சபையின்   ஒரு பிரதி மேயராக இருந்திருக்கின்றார்.

இவர் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பொது நூலகத்திற்கு தனது தந்தையாரின் பெயரை வைக்க வேண்டும் என கூறிய மிக தீவிரமான நபராக இருந்திருக்கின்றார்  வேட்பாளர் ரஹ்மத் மன்சூர் .இவர் இன்று தேர்தல் களத்தில் குதித்திருக்கின்றார்.ஆகவே இன்று ஹரீஸ் என்பவர் இல்லாவிட்டாலும் ரஹ்மத் மன்சூர் என்பவர் பதிலாக நிறுத்தப்பட்டுள்ளார்.இவ்வாறாக வேட்பாளர்  ரஹ்மத் மன்சூர் என்பவர் கல்முனைக்கு எம்.பியாக வந்தால் எவ்வாறான ஆபத்துக்கள் எமக்கு வரும் என்பது நன்கு தெரியும்.கல்முனையை துண்டாட நினைத்து தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்க முயற்சிக்கின்ற எந்தவொரு அரசியல் சக்திக்கும்   எமது கட்சி தலைமையும் எமது கட்சி உறுப்பினர்களும் இடமளிக்க  மாட்டார்கள்.

அத்தோடு நான் இந்த இடத்தில் பாராளுன்ற உறுப்பினராகவோ அல்லது கட்சியின் சாதாரண உறுப்பினராகவோ இருந்தாலும் கூட இவ்வாறான இனவாத நடவடிக்கைக்கு இடங்கொடுக்க மாட்டேன்.அது மாத்திரமன்றி சிறு சிறு குழுக்களின் கலந்துரையாடல்களின் படி தமிழ் மக்களுக்கு எதிரான தீவிர பிரச்சாரங்களில் பாசிசவாதம் என்ற சொற்கள் தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றன.இவ்வாறான சொற்பிரயோகங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

கரையோர மாவட்டம் என்பது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின்   யாப்பு கொள்கையாக இருப்பினும் கல்முனை தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படும் வகையில் கல்முனை தொடக்கம் பொத்துவில் வரையான தமிழ் கிராமங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்ற வகையில் கரையோர மாவட்டம் பிரிப்பதற்கு எந்தவொரு இடத்திலும் நாங்கள் அனுமதிக்க  மாட்டோம்.அதனை முன்னிறுத்தி கல்முனை பகுதியில் தேர்தலில் இறங்கி இருக்கின்ற வேட்பாளர்களுக்கு எதிராக நான் களத்தில் எப்போதும் இருந்தும் எதிர்ப்பேன் என்பதை கூற விரும்புகின்றேன்.