நூருல் ஹுதா உமர்
இவ் வருடத்தின் (2024) உலக ஆசிரியர் தின தொனிப்பொருளாக "கல்விக்கான புதிய சமூக ஒப்பந்தத்தை நோக்கி ஆசிரியர் குரல்களுக்கு மதிப்பளித்தல்" (Valuing teacher voices: towards a new social contract for education) எனும் தொனிப்பொருளின் கீழ் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) ஆசிரியர் தின நிகழ்வுகள் திங்கட்கிழமை, 07 அக்டோபர், 2024 கல்லூரியின் முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் தலைமையில் சேர் ராஸிக் பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு மற்றும் பழைய மாணவிகள் சங்கத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். சஹத்துல் நஜீம் கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதியாக கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்) எம்.எச்.எம். ஜாபீர், விசேட அதிதியாக கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், கல்முனை சட்டத்தரணிகள் சங்க உப தலைவரும் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கத்தின் செயலாளருமான சிரேஷ்ட சட்டத்தரணி. ஆரிகா காரியப்பர், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் எஸ்.எல். அஸீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதிதிகள், ஆசிரியர்கள் மாலை மற்றும் சின்னம் அணிவித்து சாரணிய, முதலுதவி அணிவகுப்பு மரியாதையுடன் கலை கலாச்சார பாரம்பரிய நிகழ்வுகளுடன் மண்டபத்தை நோக்கி அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.காலை வேளையில் மைதான விளையாட்டுகள், இரண்டாம் கட்டமாக மேடை நிகழ்வுகள் இடம்பெற்றன. ஆசிரியர்களுக்கு இடையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி, சங்கித கதிரை, மெதுவான மோட்ட சைக்கிள் ஓட்டம், மேடை நிகழ்ச்சிகள், பேச்சு, பாடல், கதை, என கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.
ஆசிரியர்களின் கல்வி சேவையை பாராட்டி பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன. கல்முனை கல்வி வலயத்தின் கல்வி செயற்பாடுகளில் வினைத்திறன் மற்றும் அபிவிருத்தியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயலாற்றுகின்ற வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். சஹதுல் நஜீம் மற்றும் நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர் ஆகியோர் சேவைகளை பாராட்டி பொன்னாடை போற்றி கெளரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரதி அதிபர் ஹாஜியானி எஸ்.எஸ்.எம். சமதா மசூது லெவ்வை, ஏ.எச் நதிரா, உதவி அதிபர்களான என்.டி நதீகா, எம்.எஸ் மனூனா, பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment