இரான் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் என்ன நடக்கும்?






 இரானின் புரட்சிகர காவலர் படை (ஐஆர்ஜிசி - IRGC) தளபதி மேஜர்-ஜெனரல் ஹொசைன் சலாமி, இஸ்ரேல் மீது சுமார் 200 ஏவுகணைகளை ஏவுவதற்கு முன்பாக போர் அறையில் ஒரு பெரிய பேனரின் முன் நின்றிருந்தார்.

செவ்வாய் இரவு, இரானிய ஊடகங்கள் வெளியிட்ட காணொளியில் ஹொசைன் சலாமி தொலைபேசி வாயிலாக இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவ உத்தரவிட்டார். அவர் நின்று கொண்டிருந்த போர் அறையில் இருந்த அந்தப் பெரிய பேனரில் மூன்று நபர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஜூலை மாதம் டெஹ்ரானில் கொல்லப்பட்டார். அந்தத் தாக்குதலுக்கு இரான் இஸ்ரேலை குற்றம் சாட்டியது.

கடந்த வாரம் பெய்ரூட்டில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் ஐஆர்ஜிசி குட்ஸ் படைத் தளபதி பிரிக்-ஜெனரல் அப்பாஸ் நில்ஃபோரௌஷன் ஆகியோரின் மரணத்திற்குப் பழிவாங்கவே இந்த மிகப் பெரிய தாக்குதலை நடத்துவதாக மேஜர்-ஜெனரல் ஹொசைன் சலாமி கூறினார்.