ஆசிரியர் தின விழாவும் சேவை நலன் பாராட்டு விழாவும்!




 



( வி.ரி.சகாதேவராஜா)


சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு  சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின விழாவும் சேவை நலன் பாராட்டு விழாவும்  அதிபர் கே.தியாகராஜா தலைமையில் நேற்று முன்தினம் (16) புதன்கிழமை நடைபெற்றது.

பிரதம அதிதியாக சம்மாந்துறை வலய ஓய்வு நிலை உதவிக் கல்விப்  பணிப்பாளரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான விபுலமாமணி வித்தகர் வீ.ரி.சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார்.

சிறப்பு அதிதியாக பாடசாலை இணைப்பாளரும், விவசாய வளவாளருமான  பி. மோகன்  கலந்து சிறப்பித்தார்.

பாடசாலை பழைய மாணவர் மன்றம் மற்றும் உயர்தர மாணவர்கள் இணைந்து நடாத்திய இவ் விழாவில் முன்னதாக ஆசிரியர்களை மகிழ்விக்கும் வகையில் சில விளையாட்டு நிகழ்வுகள் இடம் பெற்றன.
தொடர்ந்து ஆசிரியர் தின நிகழ்வு உயர்தர மாணவர்கள் ஏற்பாட்டில் இடம் பெற்றது .

அதில் சகல ஆசிரியர்களுக்கும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது .

சம்மாந்துறை வலயத்தில் 26 வருடங்கள் கடமையாற்றி 36 வருடம் கல்விச்சேவை ஆற்றி கடந்த வாரம் ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா 
அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
.
பட்டதாரி ஆசிரியர் பீற்றர் எஸ். சசேந்திரா கவிதையாற்றி அதனை அழகுற வாசித்து பத்திரத்தை கையளித்தார்.
 மற்றும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ஆசிரியர்களின் உரைகள் கவிதைகள் மற்றும் ஆசிரியர் இம்தியாஸ் குழுவினரின் ரசனைமிகு நாடகம் என்பன மேடையேறின.

விழாவில் மாணவர்கள் அனைத்து அதிதிகள் அதிபர் கே.தியாகராஜா பிரதி அதிபர் எம்.தர்மலிங்கம் உள்ளிட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும் மலர் மாலை அணிவித்து திலகமிட்டு  மரியாதை செலுத்தினர்.

அன்றைய தினம் பிறந்த நாள் கொண்டாடிய  எஸ்.சுகதாஸன்  ஆசிரியருக்கு கேக் வெட்டி கொண்டாடியமையும் குறிப்பிடத்தக்கது.