தொப்புள் கொடியை மருத்துவர் அல்லாத ஒருவர் வெட்டுவதால் என்ன பிரச்னை? இர்ஃபான் மீது என்ன நடவடிக்கை?




 


தனது மனைவிக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்கும் போது உடனிருந்த யூடியூபர் இர்ஃபான் என்பவர், குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டியதோடு, அதனை வீடியோவாகவும் வெளியிட்டது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.


இதுதொடர்பாக இர்ஃபான் மீது காவல்துறையில் மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகளின் இணை இயக்குநர் புகார் அளித்துள்ளார்.


குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்திய முந்தைய விவகாரத்தைப் போல அல்லாமல், இம்முறை அவர் மன்னிப்பு கேட்டாலும் விட மாட்டோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


சர்ச்சைக்குரிய வீடியோ அவரது யூடியூப் சேனலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இர்ஃபான் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? அவரது செயல் குறித்து மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?


விளம்பரம்


என்ன நடந்தது?

இர்ஃபான் - ஆசிஃபா தம்பதிக்கு கடந்த ஜூலை 24-ஆம் தேதி சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.


குழந்தை பிறக்கும் போது அறுவை சிகிச்சை அறையில் குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் வெட்டும் வீடியோவை தனது யூட்யூப் சேனலில் இர்ஃபான் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் வீட்டில் இருந்து புறப்படுவதில் துவங்கி, குழந்தை பிறந்ததற்கு பிந்தைய தருணம் வரை இடம்பெற்றிருந்தது.


விரைவிலேயே இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளானது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலரும் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்தனர். இந்நிலையில் மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகளின் இணை இயக்குநர் சென்னை செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்திருக்கிறார்.



"மன்னிப்புக் கேட்டாலும் விடமாட்டோம்"

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், "அவரது குழந்தையின் தொப்புள் கொடியை அவரே வெட்டியுள்ளார். அறுவை சிகிச்சை அரங்கிற்குள் சென்று தொப்புள் கொடியை வெட்டியிருப்பது ஏற்க முடியாதது. தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தின் பிரிவு 34, செக்ஷன் 1 -2ஐ மீறக்கூடிய செயல் இது. இந்த மருத்துவ சட்ட விதிகளை மீறிய அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, அவருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அவரை அறுவை சிகிச்சை அரங்கிற்குள் அனுமதித்த மருத்துவர் மீதும் நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவர் மீது தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிலும் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. யூடியூபர் மீது என்ன பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்வது என்பது ஆலோசிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்திருக்கிறார்.


இர்ஃபான் நடத்தும் யூட்யூப் சேனலை 50 லட்சம் சந்தாதார்ரகள் (subscribers) இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பாக, தனது மனைவி கருவுற்றிருக்கும் போது, ஸ்கேன் செய்து பெண் குழந்தை பிறக்கப் போகிறது என்பதை அறிவித்தார். அப்போதே இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளானது.


இது தொடர்பாக தமிழக மருத்துவத் துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்காக மன்னிப்புக் கேட்பதாக தெரிவித்தார் இர்ஃபான். அந்தத் தருணத்தில் அவர் அரசியல் செல்வாக்கால்தான் நடவடிக்கையில் இருந்து தப்பித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.


ஆனால், அதனை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மறுத்திருக்கிறார். "கடந்த மே மாதம் இர்ஃபான் தனது குழந்தை ஆணா, பெண்ணா என்பதை துபாயில் ஸ்கேன் செய்துள்ளார். அங்கு இதுபோல சட்டங்கள் இல்லை. அதற்குப் பிறகு இங்கே வந்து தனக்கு பெண் குழந்தை பிறக்கப் போகிறது என கொண்டாட்டங்களில் ஈடுபட்டார். மருத்துவ சேவைகள் இயக்குநரகம் சார்பில் அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு அவர் மன்னிப்புக் கோரினார். துபாயில் ஸ்கேன் செய்ததால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இந்த முறை மன்னிப்புக் கேட்டாலும் விடமாட்டோம்", என்று தெரிவித்திருக்கிறார்.


யுவான் சுவாங்: அரசின் தடையை மீறி 4,500கி.மீ பயணித்து இந்தியாவுக்கு வந்த சீன பயணி

20 அக்டோபர் 2024

பகல்-இரவு இல்லாத உலகில் வேற்றுக்கிரகவாசிகள் வசிக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுவது ஏன்?


"மகப்பேறு அறுவை சிகிச்சை பல சிக்கல்களை உள்ளடக்கியது"

ஆனால், இது முழுக்கமுழுக்க தவிர்க்க வேண்டிய நடவடிக்கை என்கிறார் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் அமைப்பின் செயலாளர் டாக்டர் சாந்தி.


"இந்த விவகாரத்தில் நாம் பல்வேறு அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். குழந்தை வழக்கமான முறையிலும் அறுவை சிகிச்சை முறையிலும் பிறக்கிறது. வழக்கமான முறையில் பிறக்கும்போது பெண்ணின் உறவினர் ஒருவர் உடனிருக்க இந்தியாவிலும் அனுமதிக்கிறார்கள். உறவினருக்குப் பதிலாக கணவரும் உடனிருக்கலாம். அறுவை சிகிச்சையில் குழந்தை பிறக்கும்போது, பொதுவாக உறவினர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அறுவை சிகிச்சையில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று நெருக்கடியால் (Emergency) அறுவை சிகிச்சை செய்வது. இரண்டாவது, தேர்வுசெய்து (Elective) அறுவை சிகிச்சை செய்வது. வெளிநாடுகளில் தேர்வுசெய்து அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தால் அப்போது உள்ளே இருக்க அனுமதிக்கிறார்கள்.அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்கும் போது உறவினரை அனுமதிக்கக் கூடாது என சட்டமில்லை என்றாலும், பொதுவாக இந்தியாவில் அனுமதிப்பதில்லை. எப்படிப் பார்த்தாலும் அது ஒரு அறுவை சிகிச்சை. பல சிக்கல்களை உள்ளடக்கியது." என்று அவர் கூறினார்.


மேலும் தொடர்ந்த அவர்,"திடீரென ரத்த அழுத்தம் குறையலாம். உடன் கணவர் இருந்தால், அதைக் கவனிக்கும் மருத்துவர், சத்தம் போட்டு அதை சொல்லலாமா என யோசிப்பார். அல்லது வேறு கவனச் சிதறல்கள் வரலாம். தவிர, அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்கும்போது தொப்புள் கொடியை வெட்டுவது என்பது, அந்த அறுவை சிகிச்சையின் ஒரு பகுதி. அந்த நேரத்தில் கணவர், மற்ற மருத்துவர்களை விலக்கிவிட்டு, தான் வெட்டுவதாக சொல்லக்கூடாது. மற்ற அறுவை சிகிச்சைகளோடு, பிரசவத்திற்கான அறுவை சிகிச்சைகளை ஒப்பிட முடியாது. எந்த சின்ன பிரச்னையும் பெரிய சிக்கலை ஏற்படுத்தும். அறுவை சிகிச்சை செய்யும் குழுவின் நோக்கம் இந்த அறுவை சிகிச்சையை சரியாகச் செய்து, குழந்தையை வெளியில் எடுப்பதுதான். தாய்க்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாது. இதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இருக்கக் கூடாது. எவ்வித கவனச்சிதறலும் இருக்கக்கூடாது. அப்படிப்பட்ட ஒரு நிலையில், இதுபோல கணவர் தொப்புள் கொடியை வெட்டுவது, அதை ஒருவர் படம்பிடிப்பது ஆகியவை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்றார்.


தஞ்சை: மராட்டிய மன்னர்களின் கொடூர தண்டனை முறை - கல்வெட்டு கூறும் முக்கிய தகவல்கள்


தொப்புள் கொடியை மருத்துவர் அல்லாத ஒருவர் வெட்டுவதால் என்ன பிரச்னை?

இதே கருத்தையே எதிரொலிக்கிறார் மகப்பேறு மருத்துவரான ஷர்மிளா அய்யாவு. "இர்ஃபானை பொருத்தவரை, அவர் முறையாக கையுறை அணியவில்லை. அதேபோல, அவர் அணிந்திருந்த மேலாடையும் முழுமையாக இல்லை. தவிர, அறுவை சிகிச்சையின் போது உறவினரை அறுவை சிகிச்சை நடக்கும் பகுதிக்குள் அனுமதிக்க மாட்டடார்கள். அங்கு ஒவ்வொரு நிமிடமும் மிக முக்கியம். கருப்பையை வெட்டுவதால், ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். எவ்வளவு சீக்கிரம் தொப்புள் கொடியை வெட்டிவிடுகிறோமா அவ்வளவு நல்லது. அந்தத் தருணத்தில், இன்னொருவரை அழைத்து வெட்டச் சொல்வதெல்லாம் மிகவும் ரிஸ்க். திடீரென ரத்தம் வெளியேறுவது அதிகரித்தால் என்ன ஆகும்? தேவையில்லாத பிரச்னை இது" என்கிறார் டாக்டர் ஷர்மிளா.


ஆனால், பிரான்ஸ் போன்ற நாடுகளில் இதுபோல அனுமதிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டும் மகப்பேறு மருத்துவரான உமா ராம், "அங்கெல்லாம் கணவரும் மருத்துவரைப் போலவே உடையணிந்து, கிருமி நீக்கம் செய்யப்பட்டு அறுவை சிகிச்சை அறைக்குள் வருவார்கள். ஏனென்றால், இது ஒரு அறுவை சிகிச்சை. சற்று தவறினாலும் தொற்று ஏற்பட்டுவிடும். ஆகவே மிகக் கவனமாக இருக்க வேண்டும்" என்கிறார்.


இர்ஃபான் தரப்பு கூறியது என்ன?

2019 ஆம் ஆண்டின் தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தின் பிரிவு 34ல், "மாநிலப் பதிவேட்டிலோ, தேசியப் பதிவேட்டிலோ மருத்துவராக பதிவுபெறாதவர்கள் தகுதி பெற்ற மருத்துவரைப் போல மருத்துவம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது" எனக் குறிப்பிடுகிறது. தற்போது மாநில அரசு இந்தப் பிரிவின் கீழ்தான் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்க முயல்கிறது.


இது தொடர்பாக இர்ஃபானின் கருத்தைப் பெற முயன்றபோது, அவர் தரப்பில் பேசியவர்கள் இர்ஃபான் வெளிநாட்டில் இருப்பதாகவும் விரைவில் தொடர்புகொள்வார் என்று மட்டும் தெரிவித்தனர். தற்போது அந்த வீடியோ, அவரது யூடியூப் சேனலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.


சம்பந்தப்பட்ட மருத்துவமனை இதுவரை இதுதொடர்பாக எவ்வித விளக்கத்தையும் அளிக்கவில்லை.