- அநுரவுடன் சேர்ந்து எடுத்த படத்தை வைத்து அவர் அரசியல் நாடகம் ஆடுகின்றார் என்று கண்டபடி விளாசித் தள்ளிய தேசிய மக்கள் சக்தி
- இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இங்கிருக்கக் கூடிய சில தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்துவிட்டு சேர்ந்து புகைப்படங்களை எடுத்துக்கொள்கின்றார்கள். அந்தப் புகைப்படங்களை வைத்து இங்கு அரசியல் வியாபாரம் செய்கின்ற போக்கு காணப்படுகின்றது.
அண்மையில் டக்ளஸ் தேவானந்தாவும் ஜனாதிபதியைச் சந்தித்திருந்தார். அந்தப் புகைப்படங்களை வைத்து தங்களுக்குச் சாதகமான அரசியல் நாடகங்களை டக்ளஸ் தேவானந்தா செய்து வருகின்றார். அவர் மாத்திரமல்ல சுமந்திரன், சிறீதரன் போன்றோரும் இதனையே செய்கின்றனர்.
கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கூஜா தூக்கியவர்கள், மஹிந்த ராஜபக்ஷவினுடைய ஊழல், மோசடிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவாக இருந்தவர்கள், மஹிந்த ராஜபக்ஷவால் கொண்டுவரப்பட்ட மக்கள் விரோதச் சட்டங்கள் அனைத்துக்கும் ஆதரவு தெரிவித்தவர்களை ஒருபோதும் எங்களுடன் இணைக்கப்போவதில்லை.
எந்தக் கட்சி வந்தாலும் நானே கடற்றொழில் அமைச்சர், ஆகவே அநுரகுமாரவின் ஆட்சியிலும் நான்தான் அமைச்சராக வரப்போகின்றேன், அதனால் எனக்கு வாக்களியுங்கள் என்ற சித்து விளையாட்டை டக்ளஸ் தேவானந்தா செய்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
தேசிய மக்கள் சக்தியில் வெறுமனே 25 அமைச்சுப் பதவிகள் மாத்திரமே காணப்படும். 25 அமைச்சுப் பதவிகளையும் பொறுப்பேற்பதற்கு 50 இற்கும் அதிகமான திறமை உள்ளவர்கள் தேசிய மக்கள் சக்தியில் உள்ளார்கள்.
எனவே, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன், அமைச்சர்களுக்கு எங்களிடம் எந்தவிதமான தட்டுப்பாடுகளும் இல்லை. உங்களைப் போன்றவர்களை எங்களுடைய அமைச்சுக்களில் சேர்த்துக்கொள்ள மாட்டோம்." - என்றார்.
Post a Comment
Post a Comment