கராத்தே சுற்றுப்போட்டியின் சிறந்த வீரராக,எஸ்.நவக்சன் தெரிவு






 வி.சுகிர்தகுமார்  

 அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப்போட்டியின் சிறந்த வீரராக அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்தேசிய பாடசாலை மாணவனும் ராம் கராத்தே தோ  சங்கத்தின் வீரருமான எஸ்.நவக்சன் தெரிவு செய்யப்பட்டார்.
இவ்வாறு கிழக்கு மாகாணத்தை சேர்ந்த வீரர் ஒருவர் தேசிய ரீதியில் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டமை இதுவே முதற்தடவையாகும்.
கடந்த 12 13 14 ஆம் திகதிகளில் கிளிநொச்சி உள்ளக விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப்போட்டியிலேயே இவர் சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டதுடன் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்தேசிய பாடசாலை; 4 மாணவர்களும் பதங்கங்களை பெற்றுக்கொண்டனர்.
இதில் குமித்தி போட்டிகளில் 20 வயதிற்குட்பட்ட போட்டியில் எஸ்.நவக்சன் வெள்ளிப் பதக்கத்தையும் 16 வயது பிரிவில் கே.சஜந்தன் வெண்கல பதக்கத்தையும் காடா போட்டிகளில் 20 வயது பிரிவில் எஸ்.நவக்சன் வெண்கல பதக்கத்தையும், 16 வயது பிரிவில் எஸ்.கிவோன்ஷ்டன் வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்து பதங்கங்களை வென்ற ஒரே வலயம் திருக்கோவில் கல்வி வலயம் என்பதுடன் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை தேசிய ரீதியில் மூன்றாம் நிலையினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டிகளில் 2024 ஆம் ஆண்டிற்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே போட்டியின் சிறந்த வீரராக எஸ்.நவக்சன் தெரிவு செய்யப்பட்டு பாடசாலைக்கும் பாடசாலை சமூகத்திற்கும் ராம் கராத்தே தோ சங்கத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்
இப்போட்டிகளுக்காக மாணவர்களை பயிற்றுவித்து தயார்படுத்திய  ராம் கராத்தே தோ சங்கத்தினருக்கும் ஸ்தாபகரும் சங்கத்தின் பிரதம போதானாசிரியருமான சிகான் கே.கேந்திரமுர்த்தி பயிற்றுவிப்பாளர் கே.ராஜேந்திரபிரசாத் (ராமிலன்) கே.சாரங்கன் ஆகியோர்களுக்கும்; பாடசாலை நிருவாகம் மற்றும் கல்விச்சமூகம் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.