செய்தியால் கண்ட பலன்; மக்கள் மகிழ்ச்சி






 ( வி.ரி. சகாதேவராஜா)


 வரலாற்றுப்பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கான பிரதான வீதி குன்றும் குழியுமாக படுமோசமாக பாதிக்கப்பட்டிருந்ததாக எமது நிருபரால்  வெளியிடப்பட்ட செய்திக்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது.

குறித்த  மகிழடித்தீவு சந்தியிலிருந்து அம்பிளாந்துறைச்சந்தி வரையான பிரதான வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் எடுக்கும் நில அளவை மதிப்பீட்டு பணிகள் தற்போது இடம் பெற்று வருகின்றன.


இவ் மிக மோசமாக போக்குவரத்துக்கு பொருத்தமில்லாதவகையில் பாதிக்கப்பட்டு இருந்தது. அதனால் வாகனங்கள் பாதசாரிகள் மிகவும் அசௌகரியமடைந்துவந்தனர். 

 இந்த வீதியில் பிரதேச செயலகம் பிரதேச சபை பல்நோக்கு கூட்டுறவுச் சங்கம்  ஆசிரியர் வள நிலையம் கோட்டக்கல்வி அலுவலகம் பல பாடசாலைகள் இவ்வாறு பல முக்கியமான நிறுவனங்கள் அமைந்திருக்கின்றன.

 ஆனால் அதற்கான இந்த பிரதான வீதி பல வருட காலமாக செப்பனிடப்படாமல் கைவிடப்பட்ட காரணத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருந்ததாக அச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனைக் கண்ணுற்ற சம்பந்தப்பட்ட தரப்பினர் இவ் வீதியை புனரமைப்பு செய்ய ஆரம்பித்துள்ளனர்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஏற்பாட்டில் Sunwo Lanka Pvt Ltd. இப் புனரமைப்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றது.
இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து ஊடகங்களுக்கும் நடவடிக்கை எடுத்த சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் நன்றி தெரிவிக்கின்றனர்.