இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதல்




 



மத்திய கிழக்கில் கடந்த ஓராண்டாகவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் மோசமாக்கும் வகையில், இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்துள்ளதாகவும் சுமார் 180 ஏவுகணைகள் இரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.


இந்த ஏவுகணைகளில் பெரும்பாலானவை அமெரிக்கவின் ஒத்துழைப்புடன் இஸ்ரேலிய விமானப்படையால் இடைமறிக்கப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரானுக்கு உரிய பதிலடி தரப்படும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


இரான் தாக்குதலும் இஸ்ரேல் பதிலும்

இஸ்ரேலை நோக்கி டஜன்கணக்கான ஏவுகணைகளை ஏவியதாக இரானின் புரட்சிகர காவல்படை உறுதிப்படுத்தும் அறிக்கையை இரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் மற்றொரு தாக்குதல் நடைபெறும் எனவும் அது எச்சரித்துள்ளது.


ஜூலை மாதம் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனிய மற்றும் கடந்த வெள்ளிக்கிழமை ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதற்கும், பாலத்தீன, லெபனான் மக்கள் கொல்லப்பட்டதற்கும் பதிலடியாக இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.


இந்தநிலையில் இந்த தாக்குதலில் இதுவரை எந்த காயமும் ஏற்படவில்லை என்றும், பொதுமக்கள் பாதுகாப்பு பகுதிகளை விட்டு வெளியேறலாம் என்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்த தாக்குதலுக்கு பின் விளைவுகள் இருக்கும் என இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறியுள்ளார்.


இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதல்பட மூலாதாரம்,Reuters

இஸ்ரேலில் என்ன நடந்தது?

முன்னதாக இஸ்ரேலியர்களை எச்சரிக்கையாக இருக்கவும், பாதுகாப்பு படை வீரர்களின் அறிவுறுத்தல்களின் படி நடக்குமாறும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது


சைரன் சத்தம் கேட்டவுடன், ''நீங்கள் ஒரு பாதுகாக்கப்பட்ட இடத்திற்குள் நுழைந்து, மறு அறிவிப்பு வரும் வரை அங்கேயே இருக்க வேண்டும்", எனவும் அது கூறியிருந்தது.


இரானில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதால், இஸ்ரேல் முழுவதும் உள்ள மற்றவர்களைப் போல நாங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்றோம் என ஜெரூசலத்தில் உள்ள பிபிசி செய்தியாளர் ஆலிஸ் கட்டி கூறுகிறார்.


அமெரிக்கா என்ன செய்தது?

இதற்கிடையே இஸ்ரேலுக்கு உதவ அமெரிக்க ராணுவத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.


இரானிய தாக்குதல்களிலிருந்து இஸ்ரேலை பாதுகாக்கவும், இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தவும் பைடன் உத்தரவிட்டார்.


இரானின் தாக்குதல்களை அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கண்காணித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.


சில இரானிய ஏவுகணைகளை நடுவானில் அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் தெரிவித்தார்.


அதிபர் ஜோ பைடன்

'இன்றிரவு தாக்குதல் முடிந்துவிட்டதாகத் தெரிகிறது'

இரான் மற்றொரு ஏவுகணை தாக்குதலை நடத்த திட்டமிடவில்லை என்றால், இன்றிரவு தாக்குதல் முடிந்துவிட்டதாகத் தெரிகிறது என பிபிசியின் ராஜ்ஜிய விவகாரங்கள் தொடர்பான செய்தியாளர் பால் ஆடம்ஸ் கூறுகிறார்.


மேலும் அவர், ''மக்கள் தற்போது வெடி குண்டு தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் பகுதியில் இருந்து வெளியேறலாம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. நாட்டின் வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது


மத்திய இஸ்ரேல் மீது ஏவுகணைகள் பொழியும் படங்கள் சமூக ஊடகங்களில் நிரம்பியுள்ளன. அவற்றில் பல ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டுள்ளன. ஆனால் சிலவற்றை தாக்கின. இதனால் பெரிய வெடிப்பு ஏற்பட்டது.


பல இடங்களுக்கு அவசர சேவைகள் அனுப்பப்பட்டுள்ளன, ஆனால் இதுவரை காயங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை.


காசா பகுதியிலும் மேற்குக் கரையிலும் இருந்து மக்கள் ஏவுகணைத் தாக்குதலைப் பார்த்தனர், சில பாலஸ்தீனியர்கள் தாக்குதலை பார்த்து கொண்டாடினர்'' என்கிறார்


இரானுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் ராணுவம் உறுதி

இஸ்ரேலிய விமானப்படை இன்றிரவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வலுவான தாக்குதலை முன்னெடுக்கும் என்று இஸ்ரேல் ராணுவத்தின் செயதி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரித்துளளார்.


இரான் செலுத்திய ஏவுகணைகளை தடுப்பதில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக செயல்பட்டதாக அவர் கூறியுள்ளார்.


"இரானின் இந்த நடவடிக்கை மத்திய கிழக்கு பிராந்தியத்தை மேலும் மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது. இன்றிரவு இரான் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு சரியான தொடர் விளைவுகள் இருக்கும்" என்றார் அவர்.


இஸ்ரேல் - இரான் பட மூலாதாரம்,Getty Images

இரானுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

இரான் மிகப்பெரிய தவறிழைத்துவிட்டதாகவும், அதற்கு உரிய பதிலடி தரப்படும் என்றும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது.


இரான் ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலிய அமைச்சரவை கூட்டத்தை தொடங்கிவைத்துப் பேசிய அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் இஸ்ரேலின் உறுதிப்பாட்டை இரான் புரிந்து கொள்ளவில்லை" என்றார்.


"இரான் அதனை புரிந்து கொள்ளும். எங்களை யார் தாக்கினாலும் நாங்கள் திருப்பித் தாக்குவோம். நாங்களே வகுத்துக் கொண்ட அந்த விதிகளின் கீழ் செயல்பட நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று அவர் மேலும் கூறினார்.


துப்பாக்கி சூடு

இதற்கிடையே இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.


இதில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள காவல்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


இதற்கு முன்பாக தெற்கு லெபனானில் இஸ்ரேல் படையெடுப்பை தொடங்கியது.


"நாங்கள் தெற்கு லெபனானில் தரைவழி ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகிறோம். தெற்கு லெபனானில் ஹெஸ்பொலா பயங்கரவாதிகளின் நிலைகளைக் குறிவைப்போம். இந்த ராணுவ நடவடிக்கை வரம்புக்குப்பட்டதாக இருக்கும். இந்த இலக்குகள் எல்லையோர கிராமங்களில் உள்ளன.” என இஸ்ரேல் ராணுவம் கூறியிருந்தது.