பாறுக் ஷிஹான்
எங்களை சொந்த நாட்டினுள் அகதிகளாக வைத்திருக்க வேண்டாம்.நினைவேந்தலுக்கு ஒரு விளக்கும் கூட கொழுத்தாதவர்கள் இன்று தேர்தலில் நிற்கிறார்கள்.இலங்கை தமிழரசுக் கட்சியில் தும்பு தடியை நிறுத்தினாலும் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற மடத்தனமான சிந்தனை இன்று மலையேறிவிட்டது. இம்முறை தேர்தல் அதற்கு சாட்சி பகரும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் அம்பாறை மாவட்டத்தில் சங்கு சின்னம் இலக்கம் 5 இல் போட்டியிடும் வைத்தியர் இராஜகுமார் பிரகாஷ் தெரிவித்தார்.
அம்பாரை ஊடக மையத்தில் பொதுத்தேர்தல் மற்றும் சமகால அரசியல் தொடர்பில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்
எங்களை சொந்த நாட்டினுள் அகதிகளாக வைத்திருக்க வேண்டாம்.எங்களுக்கும் இந்த நாட்டில் வாழ்வதற்கு உரிமை இருக்கின்றது.இந்த நாட்டில் நாங்களும் ஏனையோர் போன்று சலுகைகளை பெற வேண்டும்.நாங்கள் கடந்த 25 வருடங்களாக மக்களோடு மக்களாக பயணிப்பவர்கள்.அரசியலுக்கு நாங்கள் புதிதாக குதித்தவர்கள் அல்லர்.கோடிக்கணக்கில் பணத்தை நாங்கள் செலவழிக்கவில்லை.அதற்கு எம்மிடம் பணமும் இல்லை.எங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை தாருங்கள்.எப்போதும் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பயணிக்க தயாராக உள்ளோம்.எமது தமிழ் மக்களை பிழையாக வழிநடாத்த வேண்டாம் என்று இரு கரம் கூப்பி எமது அரசியல்வாதிகளிடம் வேண்டுகின்றேன்.தமிழரசுக்கட்சி
தந்தை செல்வநாயகம் விதைத்த தமிழ் தமிழ் தேசியம் இன்னும் எங்களது உள்ளத்தில் ஏக்கத்துடன் காணப்படுகின்றது .நாங்கள் அக்கட்சியை விமர்சிக்கவில்லை. ஆனால் அதில் உள்ள ஓரிரு தலைவர்களின் செயற்பாடு தான் இன்று அது இந்த அளவு மோசமாக நிலைமைக்கு போனதுக்கு காரணம். ஒரு சிலரது தலைக்கனம் ஆணவம் உடைக்கப்பட வேண்டும் . பழைய தரமான தலைவர்கள் ஒதுங்கி விட்டார்கள். இன்று தகைமையான தரமான தலைவர்கள் இன்றில்லை.நாங்கள் அம்பாரை மாவட்டத்தில் ஒற்றுமையாக நின்றால் தான் ஒரு பிரதிநிதித்துவத்தை பெறலாம் என்று காலில் விழாக் குறையாக கேட்டோம். எமக்கு சங்கும் தேவை இல்லை வீடு தேவை இல்லை ஒரு பொதுச் சின்னத்தில் வாருங்கள் என்று எல்லாரும் கேட்டோம். ஆனால் அவர்கள் மசியவில்லை. ஒரு சிலரின் சர்வாதிகாரி போக்குதான் இன்று இங்கு இரண்டு அணியாக பிரிந்த காரணம்.
நாங்கள் எட்டு மாவட்டங்களிலும் ஒற்றுமையாக பயணிக்கின்றோம் எங்களுக்குள் ஏழு கட்சிகள் இருக்கின்றன ஆனால் எந்தவித பிளவும் இல்லை பிரிவும் இல்லை.
ஆனால் இன்று தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் தனித்து வெட்டியோடுகிறார்கள். அவர்களுள் போட்டியும் பொறாமையும் தான் கூடுதலாக இருக்கின்றது. மக்கள் தீர்ப்பளிப்பார்கள் .இனத்துக்காக போராடிய மாவீரர்களைக் கூட அலட்சியப்படுத்தினார்கள் .நினைவேந்தலுக்கு ஒரு விளக்கும் கூட கொழுத்தாதவர்கள் இன்று தேர்தலில் நிற்கிறார்கள். இதே வேளை எமது சில இளைஞர்கள் அரச பக்கம் கவனத்தை திருப்பி இருக்கிறார்கள்.அதற்கு சில தமிழ் கட்சிகள் தான் காரணம் என்பதனை மறந்து விட முடியாது. ஆனால் அம்பாரை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அந்த சிந்தனை பிழைக்கும் .எனவே இளைஞர்கள் சிந்தித்து ஒற்றுமைக்காக கடைசி வரை ஏங்கிய சங்குக்கு வாக்களிக்க வேண்டும். எங்களுக்கும் அரசியல் தலைமை வேண்டும் என்ற உயரிய சிந்தனையை மறந்து விட வேண்டாம். என்றார்..
Post a Comment
Post a Comment