இஸ்ரேல் - இரான்: படை மற்றும் ஆயுத பலம் யாருக்கு அதிகம்?







 இஸ்ரேல் மீது இரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்திய பிறகு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெருமளவிலான போர் தொடங்குவது குறித்த அச்சம் நிலவுகிறது.


ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு இரான் இஸ்ரேல் மீது நடத்தும் தாக்குதல் இது. இஸ்ரேல் மறுபுறம் தொடர்ந்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.


இஸ்ரேல் நடத்திய சமீபத்திய வான் தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்ததாகவும் எட்டு பேர் காயமடைந்ததாகவும் லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்னர்.


இந்த ஏவுகணைத் தாக்குதல்கள் போராக மாறினால் என்ன நடக்கும் என உலகம் முழுவதும் பெரும் அச்சம் எழுந்துள்ளது.


விளம்பரம்


இஸ்ரேல் - இரான்: போர் மூண்டால் இந்தியாவில் சாமானியர்களுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும்?


இரான் 180 ஏவுகணைகளை ஏவியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தாக்குதலைக் காட்டிலும் இது சற்றே பெரிய தாக்குதலாக உள்ளது. ஏனென்றால் அப்போது இரான் 110 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் 30 க்ரூஸ் வகை ஏவுகணைகளையும் ஏவியது.


இரான் தனது 90 சதவீத ஏவுகணைகள் இலக்கை அடைந்தாகத் தெரிவித்துள்ளது. இதில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பான அயர்ன் டோம், பெரும்பாலான ஏவுகணைகளை இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


இஸ்ரேல் - இரான்: படை மற்றும் ஆயுத பலம் யாருக்கு அதிகம்?பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அயர்ன் டோம், பெரும்பாலான ஏவுகணைகளை இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. (கோப்புப் படம்)

ஏவுகணைகள் ராணுவ தளங்கள், சில உணவகங்கள் மற்றும் பள்ளிகளை தாக்கியதாக இஸ்ரேலில் உள்ள பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், போர்ச் சூழல் வந்தால் இருநாட்டில் யார் வலுவானவர்கள் என்ற கேள்வி எழுகிறது.


பிபிசி இந்தக் கேள்விக்கான பதிலைப் பெற பல்வேறு ஆதாரங்களை ஆய்வு செய்தது. இரு நாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க திறன்கள் உள்ளன, அவை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. எனவே எந்த நாடு பலம் மிக்கது என்பதைத் துல்லியமாகக் கூற இயலாது.



ஐ.ஐ.எஸ்.எஸ் எனப்படும் சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனம் (International Institute for Strategic Studies - IISS) ராணுவ திறன்களை ஒப்பிடுவதில் நம்பகமான அமைப்பாகக் கருதப்படுகிறது.


ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டும் இத்தகைய மதிப்பீடுகளைச் செய்கிறது.


இஸ்ரேல், இரான் ஆகிய இரு நாடுகளின் மக்கள் தொகையிலும் பெரும் வேறுபாடு உள்ளது. இரானின் மக்கள் தொகை இஸ்ரேலை காட்டிலும் அதிகம்.


ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இஸ்ரேல் முன்னணியில் உள்ளது. அதாவது இஸ்ரேலின் ஜிடிபி அதிகமாக உள்ளது. அதேபோல இஸ்ரேல், தனது பாதுகாப்புக்காக இரானை காட்டிலும் அதிகமாகச் செலவழிக்கிறது என்று ஐ.ஐ.எஸ்.எஸ் கூறுகிறது.


இஸ்ரேல் இரானில் இருந்து 2100 கிமீட்டர் தூரத்தில் உள்ளது. எனவே இரு நாடுகளுக்கு இடையே "போர் என்று வந்தால் வான்வழித் தாக்குதல்தான் நடைபெறும். இஸ்ரேல் இரானுடன் தரைவழித் தாக்குதலை மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு" என்கிறார் டிஃபன்ஸ் ஐ (Defence Eye ) பத்திரிகையாளர் டிம் ரிப்ளே.



ஐ.ஐ.எஸ்.எஸ் (IISS) புள்ளிவிவரங்கள், இஸ்ரேலிடம் 340 ராணுவ விமானங்கள் போருக்குத் தயாராக இருப்பதாகக் காட்டுகின்றன.


ஜெட் விமானங்களில் நீண்டதூர வரம்பைக் கொண்ட F-15 விமானங்கள், ரேடாரை தவிர்க்க வல்ல உயர் தொழில்நுட்ப F-35 விமானங்கள் மற்றும் துரிதமான தாக்குதலை நடத்தவல்ல ஹெலிகாப்டர்கள் ஆகியவை இதில் அடங்கும்.


இஸ்ரேலின் வான் படை மற்றும் Guided Weapons எனப்படும் கட்டுப்படுத்தவல்ல ஆயுதங்கள் அந்நாட்டிற்குப் பெரும் பலமாக உள்ளன. இரானில் உள்ள இலக்குகளை இஸ்ரேல் வான்வழியாகத் தாக்க முடியும். சமீபமாக ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டது இதற்கு ஓர் உதாரணம்.


மறுபுறம் இரானிடம் சுமார் 320 போர் விமானங்கள் இருப்பதாக ஐ.ஐ.எஸ்.எஸ் மதிப்பிட்டுள்ளது. இந்த ஜெட் விமானங்கள் 1960களில் இருந்தே இருப்பவை. இதில் F4, F5 மற்றும் F14 ஆகியவை அடங்கும். (F14 விமானம், 1986 திரைப்படமான ‘டாப் கன்’ மூலம் பிரபலமானது).


இஸ்ரேல் - இரான்: படை மற்றும் ஆயுத பலம் யாருக்கு அதிகம்?பட மூலாதாரம்,Getty Images

இந்தப் பழைய விமானங்களில் உண்மையில் எத்தனை விமானங்கள் பறக்கக்கூடியவை என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஏனெனில் பழுது பார்க்கும் பாகங்களைப் பெறுவது மிகவும் கடினமாக இருக்கும்,


இவைதவிர, இரானின் ஏவுகணைத் திட்டம் மத்திய கிழக்குப் பிராந்தியத்திலேயே மிகப் பெரியதாகக் கருதப்படுகிறது. கடந்த 2022ஆம் ஆண்டில், அமெரிக்க மத்திய கட்டளையின் ஜெனரல் கென்னத் மெக்கென்சி, இரானிடம் ‘3,000க்கும் அதிகமான’ பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருப்பதாகக் கூறினார்.


இரான் குறுகிய மற்றும் நீண்டதூர ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை உருவாக்கியுள்ளது. அவற்றில் பல, கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் மீது ஏவப்பட்டன.


ஆனால் இஸ்ரேலிடம் இதற்குத் தீர்வு உள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்பின் முதுகெலும்பாக, அதன் ‘அயர்ன் டோம்’, ‘ஏரோ’ அமைப்புகள் மற்றும் டேவிட் ஸ்லிங் ஆகியவை இருக்கின்றன. சுமார் 10 கி.மீ. தூரத்தில் இருந்து ஏவப்படும் குறுகிய தூர ராக்கெட்டுகளை அயர்ன் டோம் இடைமறித்துவிடும்.


டேவிட் ஸ்லிங் அமைப்பு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் சேர்ந்து உருவாக்கப்பட்டது. இதைக் கொண்டு இடைதூர மற்றும் நீண்டதூர ராக்கெட்டுகள் பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை இடைமறிக்க முடியும். சுமார் 100 கி.மீ. தூரம் வரை பாய்ந்து செல்லக்கூடிய தொலைதூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏரோ அமைப்பு தடுக்கும் வல்லமை கொண்டது.


இஸ்ரேல் மீது இரான் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணை எப்படி செயல்படும்?


இரானிடம் இஸ்ரேலை காட்டிலும் 6 மடங்கு அதிக படை வீரர்கள் உள்ளனர். ஐஐஎஸ்எஸ்-இன் தரவுகள்படி இரானிடம் 6 லட்சம் படைவீரர்கள் உள்ளனர், இஸ்ரேலிடம் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் படைவீரர்கள் உள்ளனர்.


தற்காலத்தில், எந்தவொரு நாடும் தனியாகப் போரிட முடியாது. இரானிடம் ‘ஆக்ஸிஸ் ஆஃப் ரெஸிஸ்டென்ஸ்’ உள்ளது. அதாவது அண்டை நாடுகளில் உள்ள பல ஆயுததாரி குழுக்கள் இரானுக்கு ஆதரவாக இருக்கின்றன. லெபனானில் ஹெஸ்பொலா, ஏமனில் ஹூத்தி குழு, பஹ்ரைனில் அல் அஷ்தார் ப்ரிகேட் ஆகியவை உள்ளன.


இதுதவிர, ஹமாஸ் குழுவும் உள்ளது. இதன் வாழ்நாள் இலக்கு இஸ்ரேலை அழிப்பது மட்டுமே. இரானின் புரட்சிகர காவல் படை மற்றும் குத் படை மத்திய கிழக்கில் தனது அதிகாரத்தை நிலைநாட்ட இந்த ஆயுதக் குழுக்களுக்கு பல மில்லியன் டாலர்கள் நிதியுதவி வழங்குகின்றன. இவற்றுக்குப் பயிற்சியையும் வழங்குகிறது.


அதேபோல் இஸ்ரேலுக்கு அமெரிக்கா அனைத்து வழிகளிலும் உதவி வருகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே ஆண்டுதோறும் 50 பில்லியன் மதிப்பிலான வர்த்தகம் நடைபெறுகிறது.



அதேபோல, போர்ச் சூழல் எழுந்ததால் அணு ஆயுத அச்சுறுத்தலும் எழுகிறது. இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் இஸ்ரேல் அதை வெளிப்படையாகச் சொல்வதைத் தவிர்க்கிறது.


இரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவு. ஆனால் இரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயல்வதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இரான் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறது.


சைபர் தாக்குதலை எடுத்துக் கொண்டால், இஸ்ரேல் மீது சைபர் தாக்குதல் நடந்தால் இரானுக்கு அது பலனளிக்கும். இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்பு இரானின் பாதுகாப்பு அமைப்பைவிட தொழில்நுட்பரீதியாக மேம்பட்டது. எனவே இஸ்ரேல் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டால் இஸ்ரேலுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படும்.


"ஆண்கள் என்னை தவறான நோக்கில் அழைத்தனர்" - அடர் நிறத்தில் லிப்ஸ்டிக் பூசிய பெண்கள் கூறுவது என்ன?


இரான் - இஸ்ரேல் மோதல்பட மூலாதாரம்,Reuters

இஸ்ரேலின் ராணுவ அதிகாரிகளும் தலைவர்களும் அடிக்கடி ஒரு வாசகத்தைப் பயன்படுத்துவர். அதாவது எங்கு அதிகம் வலிக்கிறதோ அங்கு தாக்க வேண்டும் என்று கூறுவர். இதுதான் அவர்களின் போருக்கான கொள்கை.


அக்டோபர் 1ஆம் தேதிக்குப் பிறகான தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் நஃப்டாலி பென்னட் தனது எக்ஸ் பக்கத்தில், “50 ஆண்டுகளில் மத்திய கிழக்கின் நிலையை மாற்றுவதற்கு இது ஒரு பெரிய வாய்ப்பு” எனப் பதிவிட்டுள்ளார்.


மேலும் இஸ்ரேல் இரானின் அணு ஆற்றல் கட்டமைப்புகளைத் தாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இஸ்ரேலின் பதிலடி குறித்த கவலைகள் அதிகரிக்கின்றன.