பிரதமரின் முதலாவது வாழ்த்துச் செய்தி, சிறுவர் துஷ்பிரயோகத்தை எதிர்க்கிறோம்




 


சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினத்தை கொண்டாடும் இந்த சிறப்பான சந்தர்ப்பத்தில் இலங்கையின் பிரதமர் என்ற வகையிலும் மகளிர், சிறுவர்கள், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற வகையிலும் எனது முதலாவது வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய அவரின் சிறுவர் மற்றும் முதியோர் தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


அவரின் வாழ்த்து செய்தியில் மேலும்,


இந்த இரண்டு முக்கியமான நிகழ்வுகளும் எமது சமூகத்தின் எதிர்காலத்தையும் பாரம்பரியத்தையும் வடிவமைப்பதில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் வகிக்கும் முக்கிய வகிபாகங்களை எமக்கு நினைவூட்டுகின்றன.


இவ்வருட சர்வதேச சிறுவர் தின கருப்பொருள் "எமது எதிர்காலத்தில் முதலீடு செய்வது என்பது எமது சிறுவர்களில் முதலீடு செய்வது" என்பதாகும். இது வெறுமனே ஒரு சுலோகம் மட்டுமல்ல - இது எமது அரசாங்கத்தின் முக்கிய கோட்பாடு மற்றும் கொள்கை திசைவழியை உள்ளடக்கியதாகும். இலங்கையில் உள்ள ஒவ்வொரு பிள்ளைக்கும் பயனளிக்கும் உயர்தரமான, பொதுக் கல்வி முறைமையை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். பொருளாதார வரையறைகள் என்ற சுமைகளிலிருந்து விடுபட்டு, வாய்ப்புகள் நிறைந்த உலகில் அவர்கள் செழித்தோங்குவதற்குத் தேவையான வசதி வாய்ப்புகளுடன் சிறுவர்களை வளப்படுத்துவதே எமது தொலைநோக்காகும்.


மேலும், சிறுவர்கள் மீது, குறிப்பாக கல்வி நிறுவனங்களுக்குள் இடம்பெறும் அனைத்து வகையான உடல் மற்றும் உளரீதியான துஷ்பிரயோகங்களையும் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். சிறுவர்கள் பரிவு, பராமரிப்பு, அன்பு மற்றும் மகிழ்ச்சி நிறைந்த சூழலில் வளர வேண்டியவர்கள் - ஆரோக்கியமற்ற போட்டியின் அழுத்தத்தின் கீழ் அல்ல. கனிவு, புரிதல் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றை வளர்ப்பதன் மூலம், நியாயமான மற்றும் சமமான எதிர்காலத்தை கட்டியெழுப்பும் திறன்கொண்ட ஒரு தலைமுறையை நாம் உருவாக்க முடியும். சிறுவர்கள் பற்றிய ஒவ்வொரு தீர்மானத்திலும் அவர்களின் சிறந்த நலன்கள் எப்போதும் எங்கள் முதன்மையான முன்னுரிமையாக இருக்கும்.p