"அம்பாந்தோட்டையில் 88 வருடங்களுக்குப் பின்னர் வாக்குச் சீட்டிலே பெயர் கிடையாது"




 


‘நவம்பர் 14 ஆம் திகதி அத்தகைய பலம்பொருந்திய அரசாங்கமொன்றை அமைத்திடுவோம். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுசேர்வோம். ‘


இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க. தங்காலை பொதுக் கூட்டத்தில் இன்று உரையாற்றிய அவர் கூறுகையில்,




இந்த படுமோசமான உக்கிப்போன, அருவருப்பான அரசியலுக்குப் பதிலாக பரிசுத்தமான ஒரு ஆட்சியை அமைத்துக்கொள்வதற்காக ஜனாதிபதித் தேர்தலை வென்றெடுத்து சிறியவொரு காலப்பகுதியின் பின் நாங்கள் பாராளுமன்றத்தைக் கலைத்து எதிர்வரும் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தை பரிசுத்தப்படுத்துகின்ற செயற்பொறுப்பினை இந்த நாட்டு மக்களின் கைகளில் ஒப்படைத்திருக்கிறோம். 


ஆனால், மக்கள் நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தை சுத்தம் செய்வதற்கு முன்னர் ஒருசிலர் தன்னிச்சையாகவே சுத்தப்படுத்திக் கொள்கிறார்கள். அப்படித்தானே? குறிப்பாக அம்பாந்தோட்டையில் 88 வருடங்களுக்குப் பின்னர் வாக்குச் சீட்டிலே பெயர் கிடையாது. உண்மையிலேயே சரியாக கணக்கு வழக்குகளை தயாரித்துக்கொள்ள முடியாவிட்டாலும் நாங்கள் குத்துமதிப்பாகப் பார்த்தால் 60 இற்கு மேற்பட்டவர்கள் தன்னிச்சையாகவே தம்மை சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எஞ்சிய பணியை நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நாட்டு மக்கள் சரியாகவே ஈடேற்றுவார்கள் என நாங்கள் நம்புகிறோம். ஏனென்றால், நாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வெற்றியை உறுதியான வெற்றியாக மாற்றிக்கொள்ள வேண்டுமானால் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி பலம்பொருந்திய பாராளுமன்றமொன்றை தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொள்ள வேண்டும். அம்பாந்தோட்டை நிலைமை எப்படி? தெட்டத்தெளிவாகிறது. சதாகாலமும் எங்களுக்கு பல வெற்றிகளை இந்த அம்பாந்தோட்டை மாவட்டமே கொண்டுவந்தது. மிகவும் சிரம்மான சந்தர்ப்பங்களில் எமது அரசியல் கொடியை உயர்த்திப்பிடித்துக்கொண்டு முன்னோக்கி நகர பாரிய பங்களிப்பைச் செய்தவர்கள் அம்பாந்தோட்டை மக்களே! எனவே, இந்த அம்பாந்தோட்டை மாவட்டத்திலே சந்தேகமேயின்றி நாங்கள் உறுதியான பலத்தை நவம்பர் மாதம் 14 ஆம் திகதி பெறுவோம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. 


நாங்கள் ஒவ்வொன்றாக, படிப்படியாக எனினும் உறுதியாக பலம்பொருந்திய வகையில் நிச்சயமாக இந்த நாட்டை வெற்றிப்பாதையில் இட்டுச்செல்வோம். அதனை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஒருபுறத்திலே எங்களை பதற்றமடையச் செய்யவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கிறது. நாங்கள் பதற்றப்பட மாட்டோம். எமது நாட்டுக்கு முதன்முதலில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரம் தேவை. அந்தப் புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குகையில் பிரதானமான அர்ப்பணிப்பு எங்களிடமே இருக்கிறது. அரசியல்வாதிகள் என்ற வகையில் அரசாங்கத்தின் தலைவர்கள் என்ற வகையில் சாதகமான ஓர் அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான எமது அர்ப்பணிப்பை நாங்கள் வெளிக்காட்ட வேண்டும். 


வெற்றி என்றால் என்ன என்பதை ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் நாங்கள் மக்களுக்கு நிரூபித்திருக்கிறோம். வெற்றியை எப்படிக் கொண்டாடுவது என்பதை நிரூபித்திருக்கிறோம். தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் உங்களுக்கு வழங்கிய தலைமைத்துவத்திற்கு நேரொத்த வகையில் நீங்கள் அந்த வெற்றியை மிகவும் அமைதியாக ஒரு பட்டாசு கூட கொளுத்தாமல் பிறருக்கு எந்தவிதமான இடையூறும் விளைவிக்காமல் வெற்றியை கொண்டாடுகின்ற வித்த்தை இந்த நாட்டு மக்களுக்கு நாங்கள் நிரூபித்துக் காட்டியிருக்கிறோம். 


அதுமாத்திரமல்ல, தற்போது தேர்தல் இயக்கமொன்று சூடுபிடித்துள்ளது. முன்பெல்லாம் பொதுத்தேர்தல் என்றால் எப்படி? ஒருவருக்கொருவர் எதிராக தாக்குதலை நடாத்துகின்ற, அலுவலகங்களில் தீ மூட்டுகின்ற, மோதல்கள் உருவாகின்ற சில வேளைகளில் அச்சத்துடன் தேர்தலில் ஈடுபடுகின்ற நிலையே காணப்பட்டது. குறிப்பாக இந்த மாவட்டத்தில் அப்படித்தான். ஆனால், தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் தற்போது தேர்தல் இயக்கமொன்றை, தேர்தல் காலமொன்றை ஜனநாயக ரீதியாக அமைதிவழியில் எவ்வாறு முன்னெடுத்துச்செல்வது என்பது பற்றி இந்நாட்டு மக்களுக்கு புதிய அனுபவமொன்றை பெற்றுக்கொடுத்திருக்கிறது. இன்று பொதுவான பணிகள் எல்லாமே வழமைபோல் நடைபெற்று வருகின்றன. தேர்தலொன்று நடைபெறப்போகிறதா என்பதை கண்டுபிடிக்க முடியாதளவிற்கு அமைதி நிலையை நாங்கள் ஏற்படுத்தியிருக்கிறோம். எங்களுக்குத் தேவை அப்படிப்பட்ட ஒரு நாடுதான். இது அரசியல் கலாச்சாரத்தைப் பொறுத்தமட்டில் பாரிய சீரழிவுக்கு உள்ளாகிய ஒரு நாடாகும். நாங்கள் மீண்டும் ஜனநாயகத்தையும் அமைதியையும் பிறருடைய கருத்துக்களுக்கு மதிப்பளித்து சுதந்திரமாக கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான உரிமையைக் கொடுத்து தாம் விரும்பிய அரசியல் இயக்கத்திற்காக உழைப்பதற்கான உரிமையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முதல் தடவையாக இந்த நாட்டில் நிலைநாட்டியிருக்கிறது. மாற்றங்கள் மாத்திரமல்ல, இப்போது நிலவுகின்ற எங்களுடைய அரசாங்கத்தை எடுத்துக்கொண்டால் அது உலக சாதனை படைத்த ஒரு அரசாங்கமாகும். ஏனென்றால், ஒரு ஜனாதிபதி இரண்டு அமைச்சர்களும் மாத்திரமே. சரிதானே. குட்டி அரசாங்கமொன்று. ஆனால், நாட்டின் அன்றாடப் பணிகள் எதுவுமே சீர்குலைய இடமளிக்காமல் எதிர்காலத் திட்டங்களை அமுலாக்குவதற்கான அத்திவாரத்தை அமைத்துக்கொண்டு நாங்கள் உறுதியாக பயணித்துக்கொண்டிருக்கிறோம். நாங்கள் பலம்பொருந்திய துணிச்சல்மிக்க, நம்பிக்கையுள்ள மக்களால் ஆற்றமுடியாத ஒரு பணி இல்லையென்பதை நிரூபித்திருக்கிறோம். அதைப்போலவே அரச செலவினங்கள், வீண்விரயங்கள் என்பவற்றை நாங்கள் எங்களுடைய நடவடிக்கைகள் மூலமாக உறுதி செய்திருக்கிறோம். அவை சாதாரண அரசியல் அல்ல. நாட்டு மக்கள் ஒருபோதுமே அனுபவித்திராத அரசியல் கலாச்சாரமொன்றை நாங்கள் படிப்படியாக கட்டிவளர்த்து வருகிறோம். வெற்றியை எவ்வாறு கொண்டாடுவது? தேர்தல் இயக்கமொன்றை எவ்வாறு முன்னெடுப்பது? அரசாங்கமொன்றை கொண்டு நடாத்துவது எப்படி? ஜனாதிபதியும் அமைச்சர்களும் அரசபொறியமைப்பும் விரயங்களை எவ்வாறு தடுத்து நிறுத்துவது ஆகிய எல்லா விடயங்களையும் நாங்கள் நிரூபித்துக் காட்டியிருக்கிறோம். எனவே, நாங்கள் கடந்த தேர்தல் காலத்தில் கூறியதைப் போல் இலங்கையை மீண்டும் மறுமலர்ச்சி யுகமொன்றை நோக்கி நாங்கள் நெறிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். 


அடுத்ததாக எம்மெதிரில் இருக்கின்ற மிகவும் பாரதூரமான சவால் நாங்கள் அரசாங்க பொறுப்பினை ஏற்றுக்கொண்டவுடனேயே பொருளாதார உறுதிப்பாட்டினை ஏற்படுத்திக்கொள்வது. ஏனென்றால், உங்களுக்கு ஞாபகம் இருக்கும் ஜனாதிபதித் தேர்தல் மேடையில் பேசப்பட்ட விடயங்கள். தேசிய மக்கள் சக்தி வெற்றிப்பெற்றால் கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறும், டொலர் 400 ரூபாவிற்குச் செல்லும், கேஸ் தட்டுப்பாடு தோன்றும், எண்ணெய்த் தட்டுப்பாடு தோன்றும், சர்வதேச உறவுகள் இல்லாமல்போய் பொருளாதாரம் பாரிய சீர்குலைவினை சந்திக்கும் என எமது எதிர்த்தரப்பினர் குறைகூறினார்கள். ஆனால், நாங்கள் என்ன செய்தோம், ஆரம்பக் கட்டத்திலேயே நாம் எதிர்நோக்கிய பலம்பொருந்திய சவால் பொருளாதார உறுதிநிலையை ஏற்படுத்துவதாகும். நாங்கள் மிகக் குறுகிய காலத்தில் பங்குச்சந்தையுடன் தொடர்புபட்டுள்ள முதலீட்டாளர்களிடம் எங்கள் மீதான நம்பிக்கையை உறுதிசெய்தோம். எமது நாட்டின் கைத்தொழில்கள், தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள கைத்தொழில் முனைவோருக்கு நாங்கள் பொருளாதாரம் பற்றிய நம்பகத்தன்மையை உறுதிசெய்தோம். நாங்கள் சர்வதேச அமைப்புக்களுடன் மிகவும் சிரப்பாக நாட்டுக்கு நன்மை பயக்கக்கூடிய வகையில் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டு நாடு பற்றிய நம்பிக்கை வைக்கக் கூடிய பொருளாதாரத்தை உருவாக்கினோம். இப்போது என்ன நேர்ந்துள்ளது. இப்பொழுது நாங்கள் பொருளாதாரம் பற்றி, தொழில்முனைவோர் பற்றி அதுபற்றி முதலீட்டாளர்களுக்கு, மக்களுக்கு, சர்வதேச சமூகத்தவருக்கு எமது பொருளாதாரம் பற்றி ஏதாவது சந்தேகம் நிலவியிருக்குமாயின் நாங்கள் அந்த சந்தேசகத்தை முற்றாகவே ஒளித்துக்கட்டி மீண்டும் ஒரு நிலையான பொருளாதாரத்திற்கு அவசியமான அத்திவாரத்தை அமைத்திருக்கிறோம். அப்படித்தான், நாட்டை ஆட்சி செய்ய வேண்டும். 


எனவே, நாங்கள் ஏற்கனவே, ரூபா 15000 ஆக நிலவிய ஒரு ஹெக்டேயருக்கான உரமானியத்தை 25,000 ரூபா வரை அதிரிக்க நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்றோம். ஓய்வூதியம் பெறுநர்களுக்காக வழங்கப்படுகின்ற கொடுப்பனவினை இந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து 3000 ரூபாவினால் அதிகரித்திருக்கிறோம். எனவே, அவர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த ஒக்டோபர் மாதத்தில் இருந்து 3000 ரூபா மேலதிகமாகக் கிடைக்கிறது. நாங்கள் டிசம்பர் மாதத்தில் குறைநிரப்பு மதிப்பீடொன்றை சமர்ப்பிப்போம். பெப்ரவரி, மார்ச் மாதமளவில் வரவு செலவுத் திட்டமொன்றை சமர்ப்பிக்க திட்டமிட்டிருக்கிறோம். அந்த வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் நாங்கள் கவனம் செலுத்தியிருக்கிறோம். அந்த வரவு செலவுத் திட்டத்தில் பாடசாலை பிள்ளைகளுக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவு பற்றி நாங்கள் கவனம் செலுத்தியிருக்கிறோம். நான் உங்களுக்கு உறுதியாகக் கூறுகிறேன், அந்த வரவு செலவுத் திட்டத்தில் வறிய மக்களுக்கு, வலது குறைந்தோருக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவினை நிச்சயமாக அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் அதிகரிப்போம். அதைப்போலவே, புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்ட அவசியமாகின்ற பொருளாதார அத்திவாரத்தை நாங்கள் அமைப்போம். எமது எதிர்பார்ப்பு உலகத்திலும் நாட்டுக்குள்ளேயும் சுற்றுலாத் தொழில்துறைக்கு பாதிப்பு ஏற்படாத ஏதாவது சம்பவங்கள் இடம்பெறாவிட்டால் இலங்கைக்கு மிக அதிகமான எண்ணிக்கை கொண்ட சுற்றுலாப் பயணிகள் வருகின்ற ஆண்டாக 2025 ஆம் ஆண்டினை நாங்கள் மாற்றியமைப்போம். நாங்கள் எமது நாட்டின் பொருளாதாரத்தை படிப்படியாக உறுதி நிலைக்கு கொண்டுவரும் வரை சாதாரண பிரஜைகளை கவனித்துக்கொள்ள வேண்டியது எமது பொறுப்பு என்பதை நாங்கள் கூறியிருக்கிறோம். அந்தப் பொறுப்பினை நாங்கள் ஈடேற்றுவோம்.


அதைப்போலவே, சதாகாலமும் மானியத்தில் கொடுப்பனவுகளில் தங்கியிருக்கின்ற மக்களுக்குப் பதிலாக அவர்களுக்கு பொருளாதார ஆற்றலை அமைத்துக்கொடுக்கின்ற அத்திவாரத்தை நாங்கள் ஏற்படுத்திக் கொடுப்போம். அதனை நாங்கள் படிப்படியாக வரவு செலவுத் திட்டத்திலிருந்து நடவடிக்கைக்கு கொண்டு வருவோம். அதுமாத்திரமல்ல, எமது நாட்டின் கல்வித்துறையிலான மாற்றம் பற்றி அண்மையில் நாங்கள் பேசி வந்தோம் அந்த மாற்றத்தை நாங்கள் ஏற்படுத்துவோம். பாடசாலையில் இருந்து அறிவு சார்ந்த தொழில்வாண்மை சார்ந்த தொழில் பயிற்சியின் அடிப்படையில் அனுபவம் பெற்ற கல்வி பயின்றவர்களே வெளியில் வரவேண்டும்.


அதுமாத்திரமல்ல, ஒரு சிலர் இப்பொழுது கேட்கிறார்கள் திருடர்களை பிடித்துவிட்டீர்களா என்று. ஆனால், நான் ஒன்றைக் கூறுகிறேன், பிடிக்கும்போது முனக வேண்டாம். இன்று அதை நான் உறுதியாகக் கூறுகிறேன். 400 மேற்பட்ட கோப்புகள் இருக்கின்றன. அவை மூடப்பட்டு இருக்கின்றன. இன்று நாங்கள் பரிசீலித்துப் பார்த்தோம். ஒருசில கோப்புகள் சட்டமா அதிபர் திணைக்களத்தில் முடங்கிபோயுள்ளன. மேலும் சில கோப்புகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இறுகிப்போயுள்ளன. இன்னும் சில கோப்புகள் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் குவிந்து இருக்கின்றன. அனைத்துக் கோப்புக்களையும் மீண்டும் திறந்து படிப்படியாக வழக்கு தொடர அவசியமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நாங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறோம். நாங்கள் காட்சிக்காக, பகட்டுக்காக வேலை செய்பவர்கள் அல்ல. 2015 இல் முழுமையாகவே மோசடிப்பேர்வழிகளுக்கும், ஊழல்பேர்வழிகளுக்கும் எதிராக காட்சிக்கான வேலைத்திட்டமொன்று அமுலாக்கப்பட்டது. இலஞ்ச ஆணைக்குழுவுக்கு கோப்புக்களை எடுத்துச் செல்வார்கள். வெளியில் வந்து வொயிஸ் கட் ஒன்று கொடுப்பார்கள். தேசிய மக்கள் சக்தி அப்படியல்ல. மிகவும் திட்டமிட்ட வகையில் எல்லா தரவுகளையும் சேகரித்து முறைப்படி நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கத்தக்க வகையில் வழக்குகளை தாக்கல் செய்வதற்கு அவசியமான அறிவுறுத்தல்களை நாங்கள் வழங்கியிருக்கிறோம். எவருமே பதற்றமடைய வேண்டாம். இந்த நாட்டு மக்களிடம் அதுபற்றிய ஒரு எதிர்பார்ப்பு நிலவியது. அதோ அந்த மோசடிப்பேர்வழிகளுக்கும் ஊழல்பேர்வழிகளுக்கும் தண்டனை வழங்குகின்ற எதிர்பார்ப்பினை நிறைவேற்றுகின்ற அரசாங்கம்தான் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம். நாங்கள் அதனை சாதிப்போம். அத்தோடு நின்றுவிட மாட்டோம். எமது நாட்டுக்கு பாதகமான ஒருசில உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. நாங்கள் இந்த உடன்படிக்கைகளை மீளாய்வு செய்வோமென உடன்படிக்கைகளின் மறுதரப்பினருக்கு நாங்கள் அறிவித்திருக்கிறோம். ஆனால், அந்தப் பணிகளை ஈடேற்ற வேண்டுமானால் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்திற்கு பலம்பொருந்திய மக்கள் ஆணை இருக்கின்றது என்பதை நாங்கள் மற்றவர்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும். ஏனென்றால், இந்த உடன்படிக்கைகளை மீளாய்வு செய்து நாட்டுக்கு நன்மை விளைவிக்கக் கூடிய வகையில் அந்தக் கருத்திட்டங்களை மாற்றியமைப்பதில் நாங்கள் பின்வாங்க மாட்டோம். 


எனவே, அத்தகைய பேச்சுவார்த்தைகளில், உடன்படிக்கைகளில், கடப்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது எந்த அளவுக்கு மக்கள் தமது மக்கள் ஆணையை பெற்றுக்கொடுக்கிறார்கள் என்பதிலேயே தங்கியுள்ளது. அதனை நான் உங்களுக்கு தெளிவாகக் கூற வேண்டும். நாங்கள் சர்வதேச நாணய நிதியத்தை சந்தித்த வேளையிலும் தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ள மக்கள் ஆணையின் தன்மைக்கிணங்க நாங்கள் ஒருசில விடயங்கள் பற்றிய முடிவுகளை எடுக்க நேரிடுமென தெளிவாகக் கூறியிருக்கிறோம். எனவே, அந்த மக்கள் ஆணை தான் எமக்கு திரைமறைவில் இருக்கின்ற சக்தி. எனவே, இந்த மாற்றங்கள் அனைத்தையும் செய்ய எதிர்வரும் 14 ஆம் திகதி பலம்பொருந்திய மக்கள் ஆணையொன்றை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு பெற்றுக்கொடுங்கள். 


ஒருசிலர் கனவு கண்டுகொண்டு இருக்கிறார்கள். கனவு காண்பதற்கான அவர்களின் உரிமைக்கு நாங்கள் தடையேற்படுத்த மாட்டோம். நீங்கள் கனவு காணுங்கள். ஆனால், இப்போது வீம்புவார்த்தை பேசுகிறார்கள். மூன்றே மாதங்கள், ஆறே மாதங்களில் வீழ்ந்துவிடுமென்று. அவர்கள் பாவம். அதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். தேசிய மக்கள் சக்தி ஆரம்பித்துள்ள இந்தப் பயணத்தை இந்த நாட்டைக் கட்டியெழுப்பி இந்த நாட்டு மக்களுக்கு சிறந்த வாழ்க்கையொன்றை உருவாக்கி கொடுக்காமல் நிறுத்திவிட முடியாது என்பதை ஒவ்வொருவரும் விளங்கிக்கொள்ள வேண்டும். அப்படியெல்லாம் நிறுத்திவிட முடியாது. சீரழிந்துள்ள இந்த நாட்டை நாங்கள் நிச்சயமாக கட்டியெழுப்புவோம். உறுதியாக வறுமையால் வாடித்தவிக்கின்ற மக்களை அதிலிருந்து நாங்கள் மீட்டெடுப்போம். அதன் தொடக்கப்புள்ளியாக நாங்கள் மீனவர்களுக்கு எரிபொருள் மானியத்தை வழங்க நடவடிக்கை எடுத்தோம். எல்லாவற்றையும் செய்வோம். பொருளாதாரத்தை மேம்படுத்துவோம். மக்களுக்கு உதவிபுரிவோம். ஊழல் மோசடிகளை குறைப்போம். அதுமாத்திரமல்ல, வினைத்திறன்மிக்க அரச சேவையொன்றை நாங்கள் உருவாக்குவோம். எதிர்வரும் ஐந்து வருட காலப்பகுதிக்குள் நாங்கள் எமது நாட்டுக்கு மிகவும் முக்கியமான ஒரு நிலைமாற்றத்தை நாங்கள் கொண்டுவருவோம். டிஜிட்டல் மயமாக்கலில் உலகப் புகழ்பெற்ற புத்திஜீவியொருவர் அவருடைய எல்லா வேலைகளையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு எமக்கு உதவுவதற்காக இன்னும் ஓரிரு வாரங்களில் எமது நாட்டுக்கு வரவிருக்கிறார். 


எமது ஆட்சியின் முதலாவது காலப்பகுதி நிறைவடைய முன்னர் வினைத்திறன் மிக்க அரச சேவையை நாங்கள் வழங்குவோம். வரி செலுத்துவது எப்படி, வரி சேகரிப்பது எப்படி, பாடசாலை பிள்ளைக்கு உதவி வழங்குவது எப்படி, இவையனைத்தையும் தொழில்நுட்பத்தின் ஊடாக ஈடேற்றுகின்ற பின்னணியை எங்களுடைய முதலாவது ஆட்சிக்காலப் பகுதிக்குள் நாங்கள் ஈடேற்றுவோம். புது யுகத்திற்கு புதிய அடுக்கிற்கு எமது நாட்டைக் கொண்டுவருவோம். கோப்புகளை குவித்துக்கொண்டிருக்கின்ற அரச சேவைக்குப் பதிலாக மக்களை அலைக்கழிக்கின்ற அரச சேவைக்குப் பதிலாக வீட்டிலிருந்தே அரசாங்கத்திடமிருந்து தமது அலுவல்களை ஈடேற்றிக்கொள்ளக் கூடிய அரச சேவையொன்றை நாங்கள் உருவாக்குவோம். வரிசையில் காத்திராமல் உர மானியத்தை பெற்றுக்கொள்ள, அஸ்வெசும பெற்றுக்கொள்ள, தமது பிள்ளைக்குத் தேவையான சாதனங்களைப் பெற்றுக்கொள்ள பலம்பொருந்திய டிஜிட்டல் பொருளாதாரமாகவும் வினைத்திறன் மிக்க அரச சேவையாகவும் இலங்கையை மாற்றியமைப்போம். இந்த ஐந்து வருடங்களும் புதிய நூற்றாண்டுக்கு பொருந்தக் கூடிய இலங்கையை தேசிய மக்கள் சக்தி உருவாக்கும். அதற்கான புதியதொரு அமைச்சினை நாங்கள் உருவாக்குவோம். மில்லியன் கணக்கில் வெளிநாடுகளில் வருமானம் பெறுபவர்கள் அவற்றை எல்லாமே கைவிட்டு தன்னிச்சையாக எமது நாட்டைக் கட்டியெழுப்ப முன்வந்திருக்கிறார்கள். 


நாங்கள் எமது நாட்டை பரிசுத்தமான இலங்கையாக மாற்றவேண்டும். சுற்றாடலினை நேசிக்கின்ற, சுத்தத்தைப் பேணுகின்ற, குப்பைக்கூளங்களை ஆங்காங்கே வீசியெறியாத, தமது ஊரிலுள்ள நீரோடைகளை பாதுகாக்கின்ற, தமது பொருளாதாரத்தை பலப்படுத்துகின்ற கரையோரப் பட்டியை பாதுகாக்கின்ற, கிளீன் சிறீலங்கா எனும் வேலைத்திட்டத்தை நாங்கள் ஆரம்பித்து இலங்கையை உலகின் தூய்மைக்கு முன்னுதாரணமாக திகழுகின்ற நாடாக மாற்றியமைப்போம். நாங்கள் காலடி எடுத்து வைத்திருப்பது இந்த நாட்டின் நிலைமாற்ற யுகத்தை நோக்கியாகும். ஒரு சிலர் கூறுகிறார்கள், நாங்கள் அவர்களை பழிவாங்குகிறோம் என்று. நாங்கள் எவரையுமே பழிவாங்கப் போவதில்லை. ஆனால், மக்களின் சொத்துக்களை கோடிக்கணக்கில் சூறையாடிய, விரயமாக்கிய அரசியல்வாதிகளை விட்டுவைக்க மாட்டோம். முன்னாள் ஜனாதிபதிகள் இருவருக்கு 16 வாகனங்கள் வீதம் வழங்கப்பட்டிருந்தன. ஒரு அம்பியூலன்ஸ் வண்டியையும் உள்ளிட்டதாக இருந்தது. உடனடியாக அவற்றை கையளிக்குமாறு நாங்கள் கூறினோம். தற்போதைய சுற்றறிக்கையின் படி 3 வாகனங்களை தான் கொடுக்க முடியும். அதனைக் கொடுப்போம். நாங்கள் ஒரு குழுவை நியமித்திருக்கிறோம். சுற்றறிக்கையொன்றை நியமித்து முன்னாள் ஜனாதிபதிமார்களை பராமரிப்பதை நிறுத்தப்போகிறோம். யாருமே முனகிக்கொண்டு இருக்கவேண்டாம். பதற்றமடைய வேண்டாம். பாதுகாப்பு பற்றிய அச்சுறுத்தல் இருக்குமாயின் பாதுகாப்பினை வழங்குவோம். ஆனால், பாதுகாப்பின் திரைமறைவில் இருந்துகொண்டு மக்களின் சொத்துக்களை விரயமாக்க எவருக்குமே இடமளிக்க மாட்டோம். மிக அண்மையில் இருந்த ஒரு ஜனாதிபதி எமக்கு கடிதமொன்றை அனுப்பியிருக்கிறார். அவருக்கு 16 கோக்கிமார்கள் தேவையென்று. பாதுகாப்புக்கு 163 பேர். 20 வாகனங்கள். 30 குடைகள். கொடுக்க வேண்டுமா? கொடுக்க மாட்டோம். மக்களின் சொத்துக்களை சூறையாடியவர்கள் இப்போது அவற்றை தமது மரபுரிமையாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது அப்படியல்ல. வீட்டுக்கே அம்பியூலன்ஸ். கொடுக்க மாட்டோம். பாதுகாப்பு அச்சுறுத்தல் என பொய்யான அறிவித்தல்களை வெளியிட வேண்டாம். இதனை நிறுத்துவதற்கான மக்கள் ஆணை எமக்கு கிடைத்திருக்கிறது. தேசிய மக்கள் சக்தி அதனை சாதிக்கும். கைத்துப்பாக்கிகளையும் ஆயுதங்களையும் வைத்துக்கொள்வதற்காக பல உரிமங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. நாங்கள் அவற்றை மீள கையளிக்குமாறு அறிவித்திருக்கிறோம். பாதுகாப்பு பற்றி மீளாய்வு செய்து அச்சுறுத்தல் இருந்தால் கொடுப்போம். எமது நாட்டில் பல இடங்களில் படுகொலைகள் இடம்பெறுகின்றன. ஆயுதங்கள் தங்குதடையின்றி சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றன. ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு 6 ஆயுதங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. யோசித்தவிற்கு வழங்கப்பட்டிருக்கின்றன. அவன்ட்கார்ட்டுக்கு 8 ஆயுதங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவை அனைத்தையும் மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும். 


எமது நாட்டில் பாவனையில் உள்ள சட்டவிரோத சுடுகலங்களை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம். குற்றச்செயல்கள் இடம்பெறுகின்ற யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம். எமது நாட்டிலே போதைப்பொருள் மலிந்துப்போயிருக்கிறது. போதைப்பொருள் அற்ற ஒரு நாட்டை நாங்கள் நிச்சயமாக உருவாக்குவோம். உண்மையைக் கூறப்போனால் எம்மைப் பற்றி எவராலும் அவதூறாக பேசமுடியாது. எம்மீது பொய்யொன்றை கூறுவதற்கு கூட எவராலும் முடியாது. ஜனாதிபதி தேர்தலில் சிலர் இருந்தார்கள் இப்போது அவர்களும் இல்லை. நாங்கள் உங்களிடம் ஒரு விடயத்தை வேண்டி நிற்கிறோம். அதற்கு உங்களின் ஒத்துழைப்பு எமக்குத் தேவை. இந்த நாடு என்னுடையது மாத்திரமல்ல. இது உங்களுடைய நாடு. இது எங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய பிரச்சினை அல்ல. அனைவரதும் எதிர்காலம் பற்றிய பிரச்சினையாகும். இதனை தீர்க்க வேண்டுமானால் அதற்காக நாங்கள் உழைக்க வேண்டும். நாங்கள் அயறாது உழைப்போம். எங்களை அர்ப்பணிப்போம். எதிர்கால சந்ததியினருக்கு வளமான இலங்கையொன்றை உருவாக்கிக் கொடுப்போம். இதுவே தருணம். சோகக் கவிதைகளுக்கு செவிசாய்க்க வேண்டாம். 88 வருடங்களுக்குப் பின்னர் வேட்பாளர் பெயர் பட்டியலில் பெயர் இல்லையே. கவலைத்தானே? எனவே, இந்தக் கதைகள் எல்லாம் மனவேதனையின் வெளிப்பாடுகள் மாத்திரமே.

 

இறுதியாகக் கோருவது இதற்காக எங்களுக்கு பலம்பொருந்திய பாராளுமன்றம் அவசியம் என்பதாகும். இப்பொழுது 15 அமைச்சுக்கள் இருக்கின்றன. எதிர்காலத்தில் டிஜிட்டல் அமைச்சு ஒன்றையும் உருவாக்குவோம். நவம்பர் 14 ஆம் திகதிக்குப் பின்னர் அதிகபட்சமாக 25 அமைச்சுக்களை அமைப்போம். அதற்குத் தேவையான பிரதியமைச்சர்களை நியமிப்போம். இந்த நாட்டை மீளத் திசைத்திருப்ப முடியாத வெற்றிப்பாதையில் நாங்கள் நாங்கள் வழிநடத்துவோம். அதற்கு அவசியமானது என்ன? எமது நோக்கங்களை வெற்றியை நோக்கி திசைப்படுத்துவதற்காக பலம்பொருந்திய பாராளுமன்றம் எமக்குத் தேவை. இந்த நிகழ்ச்சி நிரலை, இந்த வேலைத்திட்டத்தை அமுலாக்குவதற்கு பலம்பொருந்திய அரசாங்கமொன்று தேவை. பாராளுமன்றத்தில் எண்ணிக்கையால் பலம்பொருந்தியவர்களாக இருக்க வேண்டும். பலம்பொருந்திய பாராளுமன்றக் குழு இருக்க வேண்டும். பண்புகள் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். நேர்மையில் பலம்பொருந்தியவர்களாக இருக்க வேண்டும். ஊழலற்றவர்களாக இருக்க வேண்டும். பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற குழு திடசங்கற்பம் கொண்டவர்களாக அமைய வேண்டும். எனவே, நவம்பர் 14 ஆம் திகதி அத்தகைய பலம்பொருந்திய அரசாங்கமொன்றை அமைத்திடுவோம். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுசேர்வோம். அணித்திரள்வோம் என அழைப்புவிடுத்து விடைபெறுகிறேன். உங்கள் அனைவருக்கும் வெற்றி.