ஏமனில் ஹூத்திகுழுவின் 15 இலக்குகளை, அமெரிக்க தாக்கியது










ஏமனில் உள்ள இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி ஆயுதக் குழுவின் 15 இலக்குகளைத் தாக்கியதாக, அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

“கடல்வழிப் பயண சுதந்திரத்தைப் பாதுகாக்கும்” நோக்கில், விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

ஏமன் தலைநகர் சனா உள்பட ஏமனின் முக்கிய நகரங்களில் தாக்குதல்கள் நிகழ்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த நவம்பர் முதல் செங்கடலில் ஹூத்தி குழு சுமார் 100 கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தியது, இதில் இரண்டு கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன. காஸாவில் நடைபெறும் ராணுவ நடவடிக்கைக்கு பதிலடியாக இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றதாக ஹூத்தி குழு தெரிவித்தது.

மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளைக் கண்காணித்து வரும் அமெரிக்க சென்ட்ரல் கமாண்ட், இந்தத் தாக்குதல்கள் ஹூத்திகளின் ஆயுதக் கட்டமைப்புகள், தளங்கள் மற்றும் இதர உபகரணங்களைக் குறிவைத்து தாக்கியதாகத் தெரிவித்துள்ளது.

தாக்கப்பட்ட நகரங்களுள் தலைநகர் சனாவும் ஒன்று என ஹூத்திகள் ஆதரவு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.


ஏமனில் கடந்த திங்கட்கிழமை எம்.க்யூ-9 எனும் அமெரிக்க தயாரிப்பு ரீப்பர் ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாக ஹூத்தி குழு தெரிவித்தது. அதை அமெரிக்க ராணுவமும் ஒப்புக்கொண்டது.

அந்தப் பிராந்தியத்தில் அமெரிக்க கடற்படை கப்பல்கள் மீது ஹூத்தி குழு “கடுமையான தாக்குதலை” மேற்கொண்டதாகவும் ஏவப்பட்ட அனைத்து ஆயுதங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கடந்த வாரம் அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்தது.

ஏமனில் போரிடும் இரு தரப்புக்கும் இடையே சண்டை பெருமளவில் தணிந்ததில் இருந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் குண்டுவெடிப்புகளில் இருந்து சனா தலைநகருக்கு ஓய்வு கிடைத்திருந்தது.

ஏவுகணை தாக்குதலுக்குப் பிறகு முதன்முறையாக பொது வெளியில் தோன்றிய இரான் தலைவர்- முஸ்லிம் நாடுகளிடம் என்ன சொன்னார்?
4 மணி நேரங்களுக்கு முன்னர்
இரான் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் என்ன நடக்கும்? இதன் விளைவுகள் என்ன?
4 அக்டோபர் 2024
கடந்த டிசம்பர் மாதம் ஹூத்தி படகுகள் மீது எதிர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா கடற்படைபட மூலாதாரம்,REUTERS
படக்குறிப்பு,கடந்த டிசம்பர் மாதம் ஹூத்தி படகுகள் மீது எதிர்த் தாக்குதல் நடத்திய அமெரிக்கா கடற்படை
செங்கடலில் கப்பல்கள் மீதான தாக்குதல்களுடன் கூடவே, ஹூத்திகள் இஸ்ரேல் மீது நேரடியாகப் பல ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஆளில்லா விமானம் டெல் அவிவ் நகரைத் தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 10 பேர் காயமடைந்தனர். கடந்த மாதம், இஸ்ரேல் மீது ஹூத்திகள் பல ஏவுகணைகளை வீசினர். அவற்றில் ஒன்று இஸ்ரேலின் முக்கிய விமான நிலையத்தைக் குறிவைத்தது.

அந்த இரண்டு தாக்குதலின்போதும் இஸ்ரேல் ஏமனில் உள்ள தளங்களைத் தாக்கி பதிலடி கொடுத்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஹூத்திகளுக்கு எதிராக செங்கடலில் கடல்வழிப் பாதைகளைப் பாதுகாக்க அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் 12 நாடுகள் ‘ஆபரேஷன் ப்ராஸ்பரிட்டி கார்டியன்’ (Operation Prosperity Guardian) எனும் கூட்டமைப்பைத் தொடங்கின.

மத்திய கிழக்கில் இரானின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களின் வலையமைப்பின் ஒரு பகுதியாக ஹூத்தி குழு உள்ளது. லெபனானில் ஹெஸ்பொலா, காஸாவில் ஹமாஸ் ஆகியவையும் இந்த வலையமைப்பின் அங்கமாக உள்ளன.